×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

317. கர்த்ரே நமஹ (Karthre namaha)
(திருநாமங்கள் 317 முதல் 322 வரை - பரசுராமரின் பெருமைகள்)

நர்மதா நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற ஊரில் கூடாரம் அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்தான் ராவணன். அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அது ராவணனின் கூடாரத்தையே மூழ்கடித்துவிட்டது. இவ்வளவு பெரிய வெள்ளம் எப்படி வந்தது என்று திகைத்தபடி ராவணன் வெளியே வந்து பார்த்தான். அங்கே ஆயிரம் தோள் படைத்த ஒருவனும் சில பெண்களும் ராவணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

ஆயிரம் தோள் படைத்த அந்த மனிதன்தான் கார்த்த வீரியார்ஜுனன். நர்மதையில் வெள்ளம் வரக் காரணமானவனும் அவனே. தனது மனைவிகளோடு நர்மதையில் நீராட வந்த அவன், தனது ஆயிரம் கைகளையும் நதியின் குறுக்கே விரித்தான். அதனால் நதியின் நீரோட்டம் தடைப்பட்டு விட்டது. தன் மனைவிகளோடு ஆனந்தமாக நீராடி முடித்தபின், நீரோட்டத்தை அடைத்து வைத்திருந்த ஆயிரம் கைகளையும் அங்கிருந்து எடுத்தான். அடுத்த நொடியே மடைதிறந்த வெள்ளமாக ஆற்றுநீர் பெருகி வந்து கரையில் இருந்த ராவணனின் கூடாரத்தை அழித்துவிட்டது.

இதை உணர்ந்துகொண்ட ராவணன், மிகுந்த கோபத்துடன் கார்த்தவீரியார்ஜுனன் மீது பாய்ந்தான். இருவருக்கும் பெரும் சண்டை மூண்டது. சண்டையிலே ராவணனை எளிதில் வீழ்த்திய கார்த்த வீரியார்ஜுனன், அவனை ஒரு கயிற்றால் கட்டித் தன் நகருக்குள் அழைத்து வந்து, “மக்களே! இந்தப் பத்துத்தலைப் பூச்சியைப் பாருங்கள்!” என்று ராவணனை ஏளனம் செய்தான். இதிலிருந்து கார்த்த வீரியார்ஜுனன் எவ்வளவு வலிமை மிக்கவன் என்பதை நாம் அறியலாம்.

ராவணனையே எளிதில் வெல்லக் கூடிய இத்தகைய பலம் பொருந்திய கார்த்த வீரியார்ஜுனன், ஒருமுறை காட்டில் வேட்டையாடிவிட்டு, பரசுராமரின் தந்தையான ஜமதக்னியின் ஆசிரமத்துக்கு வந்தான். அவனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் காமதேனு எனும் பசுவின் துணையோடு விருந்தளித்தார் ஜமதக்னி முனிவர்.இதைக் கண்ட கார்த்த வீரியார்ஜுனனுக்கு அந்தக் காமதேனுவின் மீது ஆசை வந்து விட்டது. அதை அபகரிக்கப் பார்த்தான். காமதேனுவின் திருமேனியில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் தோன்றிக் கார்த்தவீரியார்ஜுனனின் சேனையைத் துவம்சம் செய்தார்கள்.

ஆனால் கார்த்தவீரியார்ஜுனன், தன் வலிமையைப் பயன்படுத்திப் பலவந்தமாகக் காமதேனுவை அபகரித்துச் சென்றான். வனம் சென்றிருந்த பரசுராமர், ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, காமதேனுவைக் காணவில்லை. நடந்தவற்றைத் தன் தந்தையிடம் கேட்டறிந்த பரசுராமர், கையில் மழு எனப்படும் கோடாரியை ஏந்திக்கொண்டு ஆயிரம் தோள்படைத்த கார்த்த வீரியார்ஜுனனை எதிர்த்துப் போரிடச் சென்றார்.

பரசுராமர் தன்னைத் தாக்க வருவதை அறிந்துகொண்டான் கார்த்த வீரியார்ஜுனன். முனிவரை எதிர்த்துப் போரிடு வது மன்னனான தனக்கு இழுக்கு என்று கருதிய அவன், தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களைப் பரசுராமரை எதிர்த்துப் போர் புரியச் சொல்லி அனுப்பி வைத்தான். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் துவம்சம் செய்தார் பரசுராமர்.தன்கீழ் உள்ள சிற்றரசர்களை எல்லாம் இழந்த கார்த்தவீரியார்ஜுனன், கர்வத்தால் மார்தட்டிக்கொண்டு, பெருத்த ஆரவாரத்துடன், தானே நேரடியாகப் போர்க்களத்திற்கு வந்து பரசுராமரைத் தாக்க முயன்றான். ஆனால் அவன் செலுத்திய பாணங்கள் பரசுராமரை ஒன்றும் செய்யவில்லை.

ஆனால் பரசுராமரோ, அவனது மலைபோன்ற ஆயிரம் கரங்களையும் பூவைக் கொய்வது போல வெட்டி வீழ்த்தி, அவனை வதம் செய்தார். இதைத் திருமங்கை ஆழ்வார்,
“தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்
சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின்!”

என்று பாடுகிறார். அதன்பின் தனது காமதேனுவை மீண்டும் ஆசிரமத்துக்கு மீட்டு வந்தார்.‘கர்த்தா’ என்றால் (இவ்விடத்தில்) வெட்டிச் சாய்ப்பவர் என்று பொருள். யாராலும் வெல்ல முடியாதவன் என்றுபுகழப்பட்டவனும், ஆயிரம் தோள்கள் கொண்டவனுமான கார்த்த வீரியார்ஜுனனையே அனாயாசமாக வெட்டிச் சாய்த்தபடியால், பரசுராமர் ‘கர்த்தா’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 317-வது திருநாமம்.
“கர்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் ஏற்படும் தடங்கல்களை எல்லாம் திருமால் வெட்டிச் சாய்ப்பார்.

318. விச்வபாஹவே நமஹ (Vishwabaahave namaha)

சீர்காழிக்கு அருகில் உள்ள மங்கை நாடு எனப்படும் குறுநிலத்துக்கு மன்னரான மங்கை மன்னர், திருவெள்ளக்குளம் என்ற ஊரில் குமுதவல்லி என்ற தேவலோகப் பெண்ணைக் கண்டார். அவள் அழகிலே மையல்கொண்டு, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவித்தார். குமுதவல்லியோ, “தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்திருக்கும் திருமால் அடியவரையே நான் மணந்துகொள்வேன்! என்னை மணந்துகொள்ள விரும்பினால் நீங்களும் அத்தகைய வைணவ அடையாளத்தோடு வாருங்கள்!” என்றாள்.

தோள்களில் சங்கு சக்கரப்பொறியை முறைப்படி குரு  மூலமாகப் பெறவேண்டும். ஆனால் அப்போது இருந்த குருமார்கள் யாரும் மங்கை மன்னருக்கு இச்சடங்கைச் செய்ய முன்வரவில்லை. வேறு புகலற்றவர்களுக்கு இறைவன்தானே புகலிடம்? அதனால், கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நாச்சியார்கோவிலில் கோவில் கொண்டிருக்கும் நிவாசப் பெருமாளிடம் வந்தார் மங்கை மன்னர். “என் தோள்களில் சங்கு சக்கரப்பொறிகளை ஒத்தி அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

அவரது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய நிவாசன், தன் கரங்களில் பிடித்திருக்கும் சங்கு சக்கரங்களை அப்படியே மங்கை மன்னரின் தோள்களில் ஒத்தி, அவருக்குத் திருமால் அடியார் என்ற அங்கீகாரத்தைத் தந்தார். குமுதவல்லியின் நிபந்தனையை நிறைவேற்றியதால், அவளை வெற்றிகரமாக மணந்துகொண்டார் மங்கை மன்னர்.

அதன்பின், குமுதவல்லி இட்ட கட்டளைப்படி தினசரி ஆயிரம் திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்து வந்த மங்கை மன்னர், திருமாலிடமே நேரடியாக எட்டெழுத்து மந்திர உபதேசம் பெற்று, பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ‘திருமங்கை ஆழ்வா’ராக விளங்கினார் என்பது நாம் அறிந்த வரலாறாகும்.திருமாலிடம் மந்திர உபதேசம் பெற்று ஆழ்வாராக ஆனபின், ஆடல்மா எனும் குதிரையில் குமுதவல்லியோடு நாச்சியார்கோவில் திருத்தலத்துக்கு வந்தார் திருமங்கை ஆழ்வார். தனக்கு முதன்முதலில் வைணவ முத்திரைகளைத் தோளில் தந்த அந்தப் பெருமாளைப் பார்த்து, அப்பெருமானின் பரசுராம அவதாரத்தை நினைவு கூர்ந்து,

“முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னர் உடல்துணிய
தனிவாய் மழுவின் படை ஆண்ட தாரார் தோளான் வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப் பானல் ஒருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே!”

என்ற பாடலைப் பாடினார். “பரசுராம முனிவராக அவதாரம் செய்து, கையில் மழு ஏந்தி, இருபத்தொரு தலைமுறை மன்னர்
களைத் தொலைத்தவன் நீயே!” என்று நாச்சியார்கோவில் நிவாசப்பெருமாளைப் பார்த்துச் சொன்னார் திருமங்கை ஆழ்வார். “திடீரெனப் பரசுராம அவதாரத்தைக் குறிப்பிடக் காரணம் யாதோ?” என வினவினார் நிவாசன்.

திருமங்கை ஆழ்வார், “பரசுராம அவதாரத்தில் நீ உன் கைகளால் எத்தனையோ மன்னர்களை அழித்தாய். ஆனால் உன் சுயநலத்துக்காக அதை நீ செய்யவில்லை. அறநெறி தவறி நடந்த அந்த மன்னர்களை அழித்து உலகுக்கு நன்மையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக நீ அவர்களை அழித்தாய். எனவே அந்த அவதாரத்தில் உனது வலிமையான கைகளை நீ உனக்கென்று பயன்படுத்திக்கொள்ளவில்லை.

உலக நன்மைக்காகப் பயன்படுத்தினாய்.அதுபோலத் தான் இங்கே நிவாசனாகக் கோவில்கொண்ட நிலையிலும், உன் கரங்களில் உள்ள சங்கு சக்கரங்களாகிய ஆயுதங்களை எனது நன்மைக்காகப் பயன்படுத்தி, என் தோள்களிலே சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்து, என்னை ஒரு பக்தனாக ஆக்கிவிட்டாய்!இறைவா! பரசுராம அவதாரத்தில் உன் கரங்களை உலகின் நன்மைக்குப் பயன்படுத்தியது போல், இங்கே உன் ஆயுதங்களை எனது நன்மைக்காகப் பயன்படுத்தினாய் அல்லவா? அதனால்தான் பரசுராமனாகவே உன்னை அநுபவித்துப் பாடினேன்!” என்றார். புன்னகை பூத்து அதை ஆமோதித்தார் நிவாசப் பெருமாள்.

‘விச்வம்’ என்றால் உலகம். ‘விச்வஸ்மை’ என்றால் உலகுக்காக. ‘பாஹு:’ என்றால் கரம். ‘விச்வஸ்மை + பாஹு: = விச்வபாஹு:’. உலகின் நன்மைக்காகவே கரத்தை உடையவனுக்கு ‘விச்வபாஹு:’ என்று பெயர். பரசுராமர், தனது திருக்கரங்களை உலகின் நன்மைக்கென்றே அர்ப்பணித்துப் பயன்படுத்திய படியால், ‘விச்வபாஹு:’ - ‘உலகுக்காகவே கரங்களை வைத்திருப்பவர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘விச்வபாஹு:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 318-வது திருநாமம்.“விச்வபாஹவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவரையும் திருமால் கைகொடுத்துக் காப்பாற்றுவார்.

319. மஹீதராய நமஹ (Maheedharaaya namaha)

அடியேன் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வந்த போது, எங்களின் கண்மருத்துவப் பேராசிரியர் ஒருமுறை அடியேனிடம் ஒரு கேள்வி கேட்டார். “சுவிட்சர்லாண்டில் மத்திய ஐரோப்பிய அணு ஆராய்ச்சியின் தலைமையகம் உள்ளது. அங்கே அணுத்துகள்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து, அவை உருவாவதையும் அழிவதையும் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். அணுத்துகள்கள் பற்றிய இந்த ஆராய்ச்சியின் மூலமாக இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை அறிய முயல்கிறார்கள். இத்தகைய அணுத்துகள் ஆராய்ச்சியகத்தின் வாசலில் யாருடைய சிலை வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?” என்று அடியேனிடம் கேட்டார்.

“ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஓப்பன்ஹைமர், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளில் யாராவது ஒருவரின் சிலை வைக்கப்பட்டிருக்கலாம்!” என்று அடியேன் சொன்னேன். ஆனால் பேராசிரியர், “இல்லை! இல்லை! அங்கே சிதம்பரம் நடராஜப் பெருமானின் சிலை ஆறு அடி உயரத்துக்கு வைக்கப்
பட்டுள்ளது!” என்றார். ஒரு நிமிடம் அசந்து போனேன். “நடராஜர் சிலைக்கும் அணுத்துகள் ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு?” என்று அடியேன் கேட்டேன்.

பேராசிரியர், “அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரிட்ஜாஃப் கேப்ரா (Fritjof Capra) என்ற விஞ்ஞானி, ‘த டாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ்’ (The Tao of Physics) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் பதினொன்றாம் பக்கத்தில் சிதம்பரம் நடராஜருக்கும் அணுத்துகள் விஞ்ஞானத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளார்:

நடராஜரின் வலக்கையில் உடுக்கை இருப்பதைக் காணலாம். அந்த உடுக்கையில் இருந்து எழும் ஒலி அணுத்துகள்களின் படைப்பைக் குறிக்கிறது. அவரது இடக்கையில் நெருப்பு இருப்பதைக் காணலாம். அது அணுத்துகள்களின் அழிவைக் குறிக்கிறது. சுவிட்சர்லாண்டு ஆராய்ச்சியின்படி, எவ்வளவு அணுத்துகள்கள் உருவாகின்றனவோ, அதே சம அளவில்தான் அணுத்துகள்கள் அழிகின்றன என்று கண்டார்கள். அதை உணர்த்தும் விதமாகவே, நடராஜரின் வலக்கையில் உள்ள உடுக்கையும், இடக்கையில் உள்ள நெருப்பும் சம அளவில் இருப்பதைக் காணலாம்.

இந்த அணுத்துகள்களின் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நடுவே நடைபெறும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமானது, சீராக நடைபெறுகிறது அல்லவா? சீராக நடைபெறும் பிரபஞ்ச இயக்கத்தையே நடராஜரின் சீரான நடனமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.அணுத்துகள் விஞ்ஞானத்தைப் பாமரனும் புரிந்துகொள்வதற்கு நமது முன்னோர்கள் தந்த வடிவமே நடராஜரின் உருவமாகும்! சிதம்பரத்தில் நடராஜருக்கு எதிரே கோவிந்தராஜப் பெருமாள் சயனித்திருக்கிறார் அல்லவா? அந்தத் திருமால் இந்த உலகைப் படைத்து, அதைச் சீராக நடத்திச் செல்லும் பாங்கை அவருக்கு எதிரே நடனமாக ஆடிக் காட்டுகிறார் சிவபெருமான்!” என்று விளக்கினார்.

“ஆம்! நடனம் எப்படிச் சீராக இருக்குமோ, அவ்வாறே இந்த உலகின் இயக்கமும் சீராகவே உள்ளது. ஒரு நாள் என்றால் இருபத்து நான்கு மணிநேரம், ஒரு வருடம் என்றால் முந்நூற்று அறுபத்து ஐந்தேகால் நாட்கள் என அனைத்தும் ஒரு ‘ரிதமோடு’ (rhythm) இயங்குகிறது. திருமால் இந்த உலகை ‘ரிதமோடு’ இயக்குவதைத்தான் ‘ரிதம்’ கொண்ட நடனமாக நடராஜர் ஆடுகிறாரோ?” என்று அடியேன் கூறினேன்.

இப்படி இந்த உலகத்தைச் சீராக நடத்திச் செல்லும் திருமால், உலகில் தருமத்துக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும், அப்போதெல்லாம் தானே வந்து பூமியிலே அவதரித்துத் தீயசக்திகளை அழித்து, தருமத்தை நிலைநாட்டி, இவ்வுலகம் தொடர்ந்து அறவழியில் நிலைநிற்கும்படிச் செய்கிறார்.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட காலத்தில், கார்த்த வீரியார்ஜுனன் உள்ளிட்ட பற்பல மன்னர்கள் அறநெறி தவறி உலகுக்குக் கேடு விளைவித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் பூமிதேவி அவர்களின் பாரம் தாங்க முடியாமல் திண்டாடினாள். அந்நிலையில், பரசுராமராக அவதரித்த திருமால், கையில் மழு ஏந்தி, அந்தத் தீய மன்னர்களை அழித்து, பூமி தேவியின் பாரத்தைப் போக்கி, உலகை நன்னெறியில் நிலைநிறுத்தினார்.

‘மஹீ’ என்றால் பூமி. ‘தர:’ என்றால் நிலைநிறுத்துபவர் அல்லது தாங்குபவர். பூமிக்குப் பாரமாக இருக்கும் தீயவர்களைப் போக்கி, பூமியை நன்னெறியில் நிலைநிறுத்தித் தாங்கியபடியால், பரசுராமருக்கு ‘மஹீதர:’ என்று திருப்பெயர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 319-வது திருநாமம்.“மஹீதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்ந்து நிலைநிற்கத் திருமால் துணைபுரிவார்.

320. அச்யுதாய நமஹ (Achyuthaaya namaha)

சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்னும் புண்ணியபூமியைப் பராந்தகன் என்ற குறுநில மன்னர் ஆண்டுவந்தார். அவரை வீழ்த்தித் திருநாங்கூர்ப் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி, சோழனும் பாண்டியனும் இணைந்து படையெடுத்து வந்தார்கள். இருபெரும் மன்னர்களை எதிர்த்துப் போர் புரியும் அளவுக்குப் பராந்தகனிடம் படைபலம் இல்லை.

என்ன செய்வதென்று மன்னர்
சிந்தித்திருக்க, அவரது கனவில் திருநாங்
கூரில் கோவில் கொண்டிருக்கும் திருமணிக்

கூடம் வரதராஜப் பெருமாள் தோன்றினார். “பராந்தகா! தில்லை மூவாயிரம் என்று சிதம்பரம் வாழ் அந்தணர்களைக் கொண்டாடுவது போல், நாங்கூர் நாலாயிரம் என்று நாங்கூர் வேதியர்களைக் கொண்டாடுவதுண்டு. அந்த நாலாயிரம் வேதியர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி உனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள்!” என்றார்.“வேதம் ஓதுவதாகிய தம் தொழிலை மறந்து அந்தணர்கள் போர்புரிவது பாபம் இல்லையா?” என்று திருமாலிடம் கேட்டார் பராந்தக மன்னர். அதற்குத் திருமால், “ஆபத்துக் காலத்தில் பாபமில்லை. முன்னொரு சமயம் உலகெங்கும் ஆட்சி செய்த மன்னர்கள் அறநெறியை மறந்து தீய ஒழுக்கத்துடன் வாழ்ந்து, நல்லோர்களைத் துன்புறுத்தினார்கள்.

மக்கள் நலத்தைப் பேண வேண்டும் என்பதை மறந்து கொடுங்கோல் ஆட்சிபுரிந்தார்கள். அப்போது ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கையில் கோடாரி ஏந்தி இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்த வரலாற்றை நீ அறிவாய் அல்லவா? முனிவரின் மகனாக, அந்தணராக இருந்தபோதும், கையில் ஆயுதம் ஏந்திப் போர்புரிந்த பரசுராமருக்கு ஏன் எந்தவிதப் பாபமும் ஏற்படவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு மன்னர், “இறைவா! நீயே
பரசுராமராக அவதாரம் செய்தாய். நீ பாப புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவன்! நீ தேவனாகவோ, மனிதனாகவோ எந்த அவதாரம் எடுத்தாலும், உன் மேன்மை குன்றாமல் திகழ்பவன் நீ! எனவே உனது அவதாரமான பரசுராமருக்கு எந்தப் பாபமும் நேரவில்லை!” என்று விடையளித்தார்.
அப்போது திருமால், “பராந்தகா! பாப-புண்ணியங்கள் என்னைப் பாதிக்காது என்பது உண்மையே. ஆனால் ராமனாகவோ, கண்ணனாகவோ நானே நேரடியாகப் பூமியில் வந்து அவதாரம் செய்தது போல் பரசுராம அவதாரம் செய்யவில்லை.

ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர் மேல் எனது சக்தியைச் செலுத்தி, குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி அவரை நான்
ஏவினேன். எனவே பரசுராம அவதாரம் முழு அவதாரம் இல்லை, ஆவேச அவதாரம் ஆகும். எனினும் எனது சக்தியின்
ஆவேசம் அவரிடம் இருந்ததால், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தபோதும், பரசுராமருக்கு எந்தப் பாபமும் நேரவில்லை.

தன் நிலையிலிருந்து நழுவாமல், வீழாமல் அவர் திகழ்ந்தார். அதுபோல் இந்த நாங்கூரில் வாழும் வேதியர்களுக்குள்
என் சக்தியை நான் செலுத்துகிறேன். ஆபத்துக் காலத்தில் போர்புரிவதால் அவர்களுக்குப் பாபமும் நேராது! அதே நேரத்தில் என் அருளால் அவர்கள் உனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள்!” என்று சொல்லி விட்டு மறைந்தார்.

திருமாலின் ஆணைப்படி நாலாயிரம் வேதியர்கள் திருநாங்கூர் மன்னருக்காகப் போரிட்டு, சோழ-பாண்டியர்களை
வீழ்த்திய வரலாற்றைத் திருமங்கை ஆழ்வார்,“ஒண்திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட
திண்திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத் தானே”என்று பாடியுள்ளார்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி என்ன என்றால், திருமால் கர்ம வினைகளுக்கு அப்பாற்பட்டவராக இருப்பதால், தன் நிலையில் இருந்து என்றும் வீழ்வதில்லை. இந்திரன் போன்ற தேவர்கள் கர்மவினைகளுக்கு வசப்பட்டவர்கள். எனவே அவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து
வீழ்வதற்கு வாய்ப்புண்டு. ஆனால் திருமால் பூமியில் வந்து அவதாரம் செய்தாலும் கூட, மேன்மை குன்றாமல், தன்நிலையில் இருந்து நழுவி விழாதவராகவே திகழ்கிறார்.

அவர் நேரடியாகப் பரசுராமராக அவதாரம் செய்யாவிடிலும், ஜமதக்னி முனிவரின் மகன்மேல் தனது சக்தியைச் செலுத்தியபடியால், அந்தப் பரசுராமரும் என்றுமே தன்நிலையிலிருந்து வீழாதவராகத் திகழ்ந்தார்.‘ச்யவன’ என்றால் நழுவி விழுதல் என்று பொருள். ‘ச்யுத:’ என்றால் நழுவி விழுபவர் என்று பொருள். ‘அச்யுத:’ என்றால் நழுவி விழாதவர் என்று பொருள். பரசுராமர் இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார்.

ஆனாலும் அவருக்குள் திருமாலின் ஆவேசம் இருந்ததாலும், உலகின் நன்மையைக் கருதியே அவர் இச்செயலைச் செய்ததாலும், இத்தனை உயிர்களை அழித்த பாபம் அவருக்கு வரவில்லை. அவர் தன்நிலையிலிருந்து நழுவி விழாமல் திகழ்ந்தார். எனவே அவர் ‘அச்யுத:’ - ‘என்றும் நழுவி விழாதவர்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 320-வது திருநாமம்.“அச்யுதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தங்கள் உயர்நிலையில் இருந்து என்றுமே நழுவி விழாமல் இருக்கத் திருமால் அருள்புரிவார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!