×

நாய்க்கு மோட்சம்!

தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் விடியலில் எழுந்து ஆற்றில் குளித்து. தென் கரையில் இருக்கும் எம்பெருமானை இக்கரையில் இருந்தே வணங்குவார். அவருக்கு பிராணிகளிடம் அன்புண்டு. விலங்குகளை இம்சிப்பது பிடிக்காது. எம்பெருமான் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தார். தன்னைச் சரணடைந்த பெரிய ஜீவனுக்குமா? வைணவ அடியாருக்கு மட்டுமா தன் கருணை பார்வையைக் காட்டினான்? இல்லையே, அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ளிருப்பது அந்தக் கருணாமூர்த்தி அல்லவா? பிறர் துன்பம் கண்டு மனம் பொறுக்காது அவரவர் புண்ணிய கோபத்திற்கு (பாபத்திற்கு) ஏற்ப ரட்சித்து அருள்கிறார்.

வைணவ யோகி வசித்த திண்ணை முன்  ஒரு அறிவுள்ள நாய் வந்து தங்கியது. அது பிரதி தினமும் யோகியார் செயல்களை உற்று நோக்கும். அவர் தவத்தில் இருக்கும்போது அதுவும் உடன் கண்மூடி செவிசாய்க்கும். பின்னர், மதிய உணவிற்குத் தென்கரைக்குச் சென்று அங்குள்ள வைணவப் பெரியார் வீடுகளின் முன்னே உள்ள எச்சில் இலையிலுள்ள (சோறு) உணவை உண்டு விட்டு பின்னர் திரும்பி வரும். அவ்வாறு இருக்கையில் ஒருநாள் அக்கரைக்கு சென்ற நாய் வெகுநேரம் வரையில் திரும்பி வரவில்லை. அதனால் யோகி பெரிதும் மனம் வருந்தினார்.

நேரம் செல்லச் செல்ல நிம்மதியாக தவம் புரிய முடியாமல், பாசத்திற்கும் இரக்கத்திற்கும் இடையே போராடினார். ஏனெனில், விடாது மழை பொழிந்துகொண்டிருந்தது. தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் சற்று ஏறியது. நெஞ்சு பொறுக்காமல் வடகரையில் நின்று தென்கரையில் இருக்கும் அத்திருநகரை நோக்கி நாயின் வரவை எதிர்பாத்துக் காத்திருந்தார். அப்போது அந்த நாய் நட்டாற்றில் வந்துகொண்டிருந்ததைக் கண்டார். மனம் நிம்மதி அடைந்தார்.

அச்சமயம் திடீரென ஆற்றில் பெருவெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது. அந்த வெள்ளத்தில் நாய் நீச்சலடித்து நீந்தி வருவதை கண்ணுற்றார்.
எம்பெருமானே! அது படும்பாடு கண்டார். சற்று நேரத்தில் நாயால் வெகு நேரம் வெள்ளத்தின் முன் நீந்த முடியாமல் கால்கள் தளர்ந்து சோர்வடைந்தது.

மிதக்க முடியாமல் அமிழ்ந்தும் மேலேயும் ஏறி இறங்கி நிரம்ப தண்ணீரையும் குடித்துவிட்டது. அதன் உயிர் ஊசலாடியது. தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி மேலே எம்பியது. அதேநேரம் நாயின் மண்டை வெடித்தது. உடனே மண்டை வெளியே நாயின் ஆத்மா பெரும் பேரொளியுடன் ஜீவனின் (ஆத்மா) வெளிநோக்கிச் சென்றது. இக்காட்சியை கரையில் நின்ற யோகி கவனித்தார். அவருடைய
கண்கள் குளமாக வியப்படைந்தார். நாய் வீடுபேறு (முக்தி) அடைந்தது.

எதனால் இதற்கு மோட்ச சக்தி கிடைத்தது? என்று சிந்தித்தார். தாம் தவம் செய்யும்போது தன் அருகே பிறந்து தவம் புரிந்து நற்கதி அடையவில்லை. பின் சிந்தித்தார். ஆழ்வார் திருநகரியில் வாழும் வைணவர்களின் எச்சிலை உண்டதால்தான் அந்த நாய்க்கு இந்த அரும்பாக்கியம் கிடைத்தது என்பதை முடிவில் உணர்ந்தார். அதை எண்ணியதும் தம் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்தன. ஐயனே! நாய்க்கு அளித்த வீடுபேற்றை இந்த பேய்க்கும் தந்தருளுமாறு வேண்டினார்.

வாய்க்கும் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் இடமளித்தால் பழுதோ? பெருமான் மகுடம்
சாய்க்கும் படிக்கும் கவி சொல்லு ஞானத் தமிழ்க் கடலே.

 - என்று போற்றி மேலும் பல பாடல்களைப்  பாடிப் பணிந்தார். அதுமுதல்  நம்மாழ்வார் மீது தீவிர பக்தியும் காதலும் கொண்டார். தம் தவ வாழ்க்கை சடகோபரால் முடிவு பெறும் என்பதையும் அறிந்தார். நாம் நேரிடையாக இறைவனிடம் பேசுவது சிறந்தது. ஆனால், தம்மையே ஆராதித்து ஆழங்கால்பட்ட ஆழ்வார்கள் பேற்றினை புகழ்ந்து பாடி பெற்றாலும் சரி ஆச்சாரியர் வழிகாட்டுதலுடன் தன் திருவடியை பற்றுவோரை எம்பெருமானுக்கு மிகவும் பிடிக்கும். அவ்வழியில் நம்மாழ்வார் ஆழ்வாராக பாசுரங்கள் இயற்றினாலும் அவருக்கு ஆச்சாரியர் எம்பெருமானே!

தவயோகி நம்மாழ்வாரின் அடியொற்றி ஆச்சாரியார் சம்பந்தத்தைப் பெற்றபின் அருட்திறத்தால் யோகிபரமபதம் அடைந்தார். ஞானத் தமிழ்க் கடலின் அருளைப் பெற்றோர் மோட்சத்தை அடைவது திண்ணமாகும்.

பொன்முகரியன்

Tags :
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி