×

அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருக்கடையூர் அபிராமி

தை அமாவாசை 11-2-2021

அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அடங்கும். இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து
18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது.சிவபெருமானின் அஷ்ட வீர தலங்களில் எட்டாவது வீரத் தலமாகத் திகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல்பெற்ற தலமாக திகழ்கிறது.முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயலும்போது முழு முதற் கடவுளான விநாயகரை வழிபடாத காரணத்தால் சினம் கொண்ட விநாயக பெருமான் இத்திருக்கோயிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்து வைத்தார். அக்குடமே பிற்காலத்தில் இத்திருக்கோயிலில் சிவலிங்கமாக உருவானதால் (மாறியதால்) அமிர்தம்+கடம் ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார் இங்குள்ள மூலவர். இப்படி செய்த விநாயகர் இத்திருக்கோயிலில் ‘கள்ளவிநாயகர்’ என்று ஒரு தனி சந்நதி பெற்று ‘கள்ளவாரணம்’ என பெயர் பெற்று அபிராமிபட்டர் மூலமாக ஒரு பதிகம் பாடல் பெற்றார் இவ்விநாயகர். இத்தலத்தில் 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ள குங்கிலிய நாயனார் மற்றும்  காரிநாயனார் அருள் பெற்று சிவதொண்டு மேற்கொண்ட தலம் இதுவே.

மேலும் சரபோஜி மன்னர் ஆட்சிகாலத்தில் பக்தன் ஒருவருக்காக அபிராமி அம்பாள் ‘தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி ‘அபிராமி அந்தாதி’ அருள செய்த தலமும் இத்தலமே. அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லி விட்டார். பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை பவுர்ணமி நிலவைப் போல எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.

அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின்போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள்.
மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார். 16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது. தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. இங்கு சிவனை வேண்டினார். எமன் அவரது உயிரைப்பறிக்க வந்த போது, எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேஸ்வரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது. சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்துவிட்டார்.

அத்தோடு, ‘‘மார்க்கண்டேயா!  நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு’’ என்று அருளினார். பின்னர் காலன் சம்ஹாரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது.  பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை ‘சம்ஹார கோலம்’ என்றும், எமனுடன் இருப்பதை ‘உயிர்ப்பித்த கோலம்’ என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் ‘சம்ஹார’ மற்றும் ‘அனுக்கிர மூர்த்தியை’ தரிசிக்கலாம். இச்சந்நதியிலுள்ள பாலாம்பிகை பால சிறுமி வடிவில், இருகரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர். சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, ‘திருக்கடையூர் ரகசியம்’ என்கிறார்கள். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.

Tags : Tirukkadaiyur Abrami ,moon ,
× RELATED கும்பம்