×

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்; திருச்சி மலைக்கோட்டை கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்.! திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென் கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 14 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா இன்று காலை 8 மணிக்கு கஜ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் 150 கிலோ எடையில் மெகா கொழுக்கட்டை படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது.இதற்காக கோயில் மடப்பள்ளி பணியாளர்கள் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 18 மணி நேரம் அவித்தனர். இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் தாயுமான சுவாமி கோயிலில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மலையின் கீழ் உள்ள மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோ எடையிலான 150 கிலோ கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்ட பின், தொட்டில் போன்ற அமைப்பில் வைத்து சுமந்து உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு எடுத்து சென்று நிவேதனம் செய்தனர். சுவாமிக்கு படைக்கப்பட்ட பிரமாண்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவையொட்டி வரும் 12ம் தேதி வரை தினமும் பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர், சித்திபுத்தி கணபதி, நர்த்தன கணபதி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 13ம் தேதி மாணிக்க விநாயகர் சன்னதியில் ஏகாதின லட்சார்ச்சனை காலை 7 மணிக்கு நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்று காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் 14 நாட்களும் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும். விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து விநாயகர் கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது….

The post விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்; திருச்சி மலைக்கோட்டை கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்.! திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ganesha Chaturthi festival ,Kgs ,Kollukatta ,Tiruchi Malaikot Temple ,Tiruchi ,Tiruchi Malaikotta ,Manikka ,Vinayaka ,Vinayagar Chaturthi festival ,
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...