×

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஒன்றிய அரசு மீது முதல்வர் கெஜ்ரிவால் கடும் தாக்கு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் கெஜ்ரிவால், ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய புதிய கலால் கொள்கையில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்பதாக பாஜ குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சிசோடியாவின் வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடத்தினர். அதேநேரத்தில், எம்எல்ஏக்களை வளைத்து டெல்லி ஆட்சியை கலைக்க பாஜ முயற்சிப்பதாக ஆம் ஆத்மியும் புகார் கூறியது. இந்நிலையில், பாஜவின் ஆபரேசன் தாமரையால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒருவரை கூட கட்சியிலிருந்து வளைக்க முடியவில்லை என்று தெரிவித்த முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் ஒற்றுமையை நிரூபிக்க டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்டினார். இதன்படி, வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரவை கூட்டம் நேற்றும் தொடர்ந்தது. நேற்றைய பேரவை கூட்டத்தின் போது, தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். அப்போது பா.ஜ எம்எல்ஏக்கள் புதிய கலால் கொள்கை ஊழல் பற்றி பேச முற்பட்டனர். அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற துணை சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் பங்கெடுத்து   முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: பாஜவின் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில்  வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் டெல்லியில் தோல்வியடைந்தது என்பதைக் காட்டவே  இந்த நம்பிக்கைத் தீர்மானம். ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்எல்ஏவும்  நேர்மையானவர்கள். மணிப்பூர், பீகார், அசாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜ ஆட்சியைக் கவிழ்த்துள்ளது. இதற்காக சில இடங்களில் எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை கொடுத்துள்ளது. ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறீர்கள். தற்போதைய ஒன்றிய அரசு தான் ஊழலில் கரை கண்ட அரசாகும். அடுத்த 15 நாளில் ஜார்கண்ட் மாநில அரசை கவிழ்த்துவிடுவார்கள். அதன்பின்னர் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவார்கள். அந்த பணம் யாருக்கு போகும் என்பது மக்களுக்கு தெரியும். விலைவாசி உயர்வுக்கு ஒன்றியஅரசே காரணம். ஒன்றிய அரசு  விதித்துள்ள அதிக வரி விதிப்பே இதற்குக் காரணம் தயிர், லஸ்ஸி, கோதுமை, தேன் ஆகியவற்றுக்குக் கூட வரி  விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 75 வருடங்களில் நடக்காத ஒன்று. ஆங்கிலேயர்  ஆட்சியில் கூட நடக்கவில்லை. இந்தப் பணத்தை அவர்கள் தங்கள் கோடீஸ்வர  நண்பர்களின் கடனைத் தள்ளுபடி செய்யப் பயன்படுத்துகிறார்கள். ஒன்றிய அரசு தனது கோடீஸ்வர  நண்பர்களிடம் தள்ளுபடி செய்த கடனை மீட்டுத் தந்தால் விலைவாசி உயர்வு  பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வரி விதித்து மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். ஆனால் பள்ளிகள்  மற்றும் மருத்துவமனைகள் கட்ட செலவிடுவதில்லை. டெல்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும்  கழிப்பறைகள் கட்டுவது தொடர்பான மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி)  அறிக்கையை பொறுத்தவரை ஆம் ஆத்மி அரசு அதிக கழிப்பறைகளை  கட்டியதாக பாஜக இப்போது கூறுகிறது. எங்கள்  மகள்களுக்கு அரசுப் பள்ளிகளில் அதிக கழிப்பறைகள் கட்டினோம். இதில் என்ன தவறு  செய்தோம்? (சிபிஐ) ரெய்டில் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் சிசோடியாவை கைது செய்வார்கள். இவ்வாறு கூறினார். செவ்வாய்கிழமையான இன்றும் பேரவை கூட்டம் நடக்கிறது. இன்று அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது….

The post டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஒன்றிய அரசு மீது முதல்வர் கெஜ்ரிவால் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,Union Govt ,New Delhi ,Aam Aadmy Government ,Delhi Legislation ,Principal ,Union Government ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்