×

சதயம்

ராகுவின் நட்சத்திரத்தில் மிகவும் வலுவான நட்சத்திரமே சதயமாகும். உங்களைப்போல அனுபவப்பாடம் படிப்பவர்கள் எவரும் கிடையாது. மனிதாபிமானம் பார்க்கக் கூடியவர்கள். வேலையையே விட்டுக் கொடுக்கும் அளவிற்கு உங்களில் சிலர் இருப்பார்கள். விவரமறியா வயதிலிருந்து விவகாரங்களை எதிர் கொண்டிருப்பீர்கள். வாலிப வயதிற்கு முன்பே தாயையோ, தந்தையையோ விட்டு பிரிந்து சில காலங்கள் இருக்க வேண்டியிருக்கும். அதனாலேயே உங்களுக்கு முதிர்ச்சி அதிகம். விதை விதைத்து செடி முளைத்து கிளைத்து பூத்து காய்க்கும் நேரத்தில் கை நழுவிப்போகும் வாய்ப்புகள் ஏராளம். கடந்த கால கசந்த நினைவு
களில் எண்ணி மூழ்கித் தவிப்பீர்கள். உங்களை ஏதோ ஒரு சக்தி தடுப்பதுபோல உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்கும். ‘‘எல்லாந்தான் நல்லா பண்றோம் ஏன் ரொம்ப உயரத்துக்கு போக முடியலை’’ என்று புலம்புவீர்கள். அருங்குணங்களின் பெட்டகமாக இருப்பீர்கள்.

மரபுகளையும், கலாச்சாரத்தையும் காப்பீர்கள். எவ்வளவு திறமைகள் இருந்தாலும், ‘‘என்னை யாரும் புரிஞ்சிக்கலை’’ என்று உள்ளுக்குள் அழுவீர்கள். வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் சாப்பிடும் நீங்கள், உறக்கத்தையும் தள்ளிப் போடமாட்டீர்கள். ஒருவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில் உங்களிடம்தான் வரவேண்டும். உங்களின் கணிப்பு சரியாக இருக்கும். முடியாது என்ற சொல் உங்கள் அகராதியிலேயே இல்லை. கற்றலில் ஆர்வம் அதிகமாக இருக்கும். எதையும் நுணுக்கமாக தெரிந்து கொள்வீர்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை காட்டிலும், தெரியாத விஷயத்தில்தான் ஆர்வம் காட்டுவீர்கள்.
ராசியாதிபதியாக கும்பச் சனியும், நட்சத்திர அதிபதியாக ராகுவும் வருகிறார்.

சதய நட்சத்திரத்தில் இருப்பவர்களான நீங்கள் எல்லோரும் எல்லா சக்திகளையும் அடக்கி வைத்திருப்பீர்கள். மண்ணை ஆள்பவரும் உண்டு. மண்ணைப் பார்த்து எல்லாம் மகேசன் செயல் என்று போகும் வெள்ளந்திகளும் உண்டு. ராஜநாகத்தின் அம்சம் உண்டு. எல்லா சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற நீங்கள் செல்ல வேண்டிய கோயிலே சங்கரன்கோயில் கோமதி அம்பிகை திருக்கோயில். ஏனெனில் ராகு உங்களின் நட்சத்திர அதிபதியாக வருகிறது. இக்கோயிலுக்குள் புற்றும் அமைந்திருக்கிறது. மேலும், கோமதி அம்பிகையின் முன்பு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒரு சக்தியின் கிளர்ச்சியை இத்தலம் அருள்வதால் உங்கள் வாழ்க்கை ஸ்திரமானதாக மாறும். இத்தலம் திருநெல்வேலியிலிருந்து 56 கி.மீ. தொலைவில்  உள்ளது.  

Tags :
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்