அலங்கார ரூபிணி அன்னை புவனேஸ்வரி

சென்னை - ஆதம்பாக்கம்

உத்தர நவசாலபுரி என்று பெரியோர்களால் அழைக்கப்பட்ட ஆதம்பாக்கத்தின் மேற்குப் பகுதியான ஆண்டாள் நகர், 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வீடுகள் வளர்ந்தன. வருடங்கள் கடந்தன. பல தெருக்கள் அமைந்த ஒரு பகுதியாக அந்தப் பிரதேசம் மாறியது. கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதுபோல தாம் குடியிருக்குமிடத்திலேயே கோயிலையும் அமைப்போம் என மக்கள் உறுதியோடு இருந்தனர். 1982ம் ஆண்டு விக்னம் நீக்கும் விநாயகருக்கு ஆலயம் அமைத்தனர்.

புதுக்கோட்டையில் உள்ளது போன்று அன்னை புவனேஸ்வரிக்கும் ஆலயம் எழுப்பலாம் என எல்லோரும் ஒரு மனதாக சிந்தித்தனர். பிள்ளையாரின் ஆலய கும்பாபிஷேகத்தன்றே அன்னை புவனேஸ்வரியின் ஆலயப் பணியும் தொடங்கியது. புதுக்கோட்டை அதிஷ்டானம் சத்குரு சாந்தானந்த சுவாமிகளின் அருளாசி உடன் இருக்க, கோயில் வளர்ந்தது. 1986ம் ஆண்டு புவனேஸ்வரி ஆயிரம் சூர்ய கோடிப் பிரகாசத்தோடும், பேரழகோடும் அருட்கண்களால் உலகை நோக்கி அமர்ந்தாள். குடநீராட்டு விழா கோலாகலமாக நடைபெற தாயன்பு பெருக குளிர்ந்தாள்.

யாவரையும் அரவணைத்தாள். புவனேஸ்வரியின் தரிசனம் சர்வ பாவங்களையும் பொசுக்க வல்லது. அருளும், பொருளும் அள்ளி வழங்கி, பர

உலகின் ஞானசாம்ராஜ்யத்தை கண நேரத்தில் அருள்வதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. தொடர்ந்து ஆறு பௌர்ணமி மாலை சாத்தி வணங்குபவரின் திருமணத் தடை நீங்கும். பௌர்ணமி அன்று தேவிக்கு சூட்ட வரும் சுமார் இரண்டாயிரம் மாலைகளே அதற்கு சாட்சி. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விதவிதமான அலங்காரத்தில் ஜொலிக்கிறாள்.

வாராஹியாக  வளர்ந்த  புவனேஸ்வரியின் அலங்காரம், அழகு கொஞ்சும். ராஜ ராஜேஸ்வரியின் சேனாநாயகி இவளின் ரதம், கிரிசக்ர ரதம். காட்டுப் பன்றிகள் இதை இழுத்துச் செல்லும். வாராஹியை உபாசிப்பவர்களுடன் வாதாடாதே என்பார்கள், பெரியோர்கள். இரவு நேர வழிபாட்டிற்குரிய தேவி இவள். கிரக பீடைகளை கிழித்தெறிபவள். புவனத்தை ஆள்பவள் பிள்ளை வரம் தரும் தேவியாவதில் ஆனந்தம் கொள்கிறாள். சந்தானலட்சுமியாக சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். தன்னை தரிசிப்போருக்கு தட்டாது தாயாகும் வரம் தருகிறாள், இந்த தேவி.

புவனேஸ்வரி தேவி சரஸ்வதியாக வீணை மீட்டும் அழகு, பார்க்க உள்ளம் கரையும். வெண் தாமரையில் அமர்ந்து வெண்ணிற ஆடையுடுத்தி கல்விச் செல்வத்தை போதிக்கும் குரு இவள். சகல கலைகளையும் தன் விழியில் வழியும் அருளாலே அளிப்பாள். வாக்கு வன்மையை மழையாக வர்ஷிப்பாள். அறிவு பெருக இந்த சரஸ்வதியின் திருப்பாதம் தொழுதாலே போதும். வாக்வாதினி என்று கம்பீர நாமம் தாங்கி, புவனேஸ்வரியினின்று எழுந்தருளும் கோலம் பார்க்க, பக்திக்

கண்ணீர் கன்னம் வழிந்தோடும். ராஜராஜேஸ்வரியின் மந்திரிணியான ராஜமாதங்கியின் அங்கதேவதை, இந்த வாக்வாதினி.

ஒரு கரத்தில் எழுத்தாணியும், மறு கரத்தில் ஓலைச் சுவடியும் ஏந்தியிருப்பாள். சந்த்யா காலங்களில் ஜபதபங்கள் செய்வாள். வித்யாலட்சுமி என்றும் இந்த தேவியை அழைப்பர். இவளை வழிபட ஞாபக சக்தியை பெருக்குவாள். ஞானத்தை நிலை நிறுத்துவாள். இந்தக் கோயில், சென்னை ஆதம்பாக்கம் ஆண்டாள் நகரில் அமைந்துள்ளது. பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

Related Stories:

>