குழந்தைப்பேறு நல்குவான் குட்டி நவநீத கிருஷ்ணன்

மதுரையில் எத்தனையோ கிருஷ்ணன் கோயில்கள் இருந்தாலும் பந்தடி 5-வதுதெரு, விளக்குத் தூண் அருகே உள்ள நவநீத கிருஷ்ணன் கோயிலுக்குத் தனிச்சிறப்பு உண்டு. இங்கு அருட்பாலிக்கும் குட்டி நவநீத கிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெயை ஏந்தியபடி சிரித்த முகத்துடன் பாலகனாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த நவநீத கிருஷ்ணன் வீதி உலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரத்திலும் இத்தல குட்டி நவநீத கிருஷ்ணனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. தினமும் காலையில் கிருஷ்ணருக்குப் பூஜை செய்யும் போது இருபத்தியேழு நட்சத்திர தீபம் மற்றும் நூற்றியெட்டு தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர்.

இந்தக் கோயிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராமக் கற்கள் இருக்கின்றன. இவைகளுக்கு தினமும் பாலாபிஷேகம் நடக்கிறது. இங்கு கிருஷ்ணரை தரிசனம் செய்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை அடுத்துள்ள வடக்கு மாசி வீதி மையப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் அவ்விடம் வசித்து வந்த ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்டது இக்கோயில். கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் கம்பத்தின் கீழ் கிருஷ்ணன் இருப்பதால் கம்பத்தடி கிருஷ்ணன் கோயில் என்று முன்பு அழைக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் கிருஷ்ணன் கோயில் இருந்ததால் வடக்கு கிருஷ்ணன்கோயில் என்றும் அழைக்கப்பட்டது. மூலவர் கிருஷ்ணன் இரண்டு கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய கோலத்தில் அருள்கிறார். அருகில் பாமா, ருக்மிணி தேவியரும் உடனிருக்கிறார்கள். இத்தலத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. எது என்னவென்றால் குருவாயூரப்பன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டவர்கள் அங்கு போக முடியவில்லை என்றால் இந்தக்கோயிலில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ளலாம். குழந்தை பாக்யம் வேண்டி இத்தல குட்டி கிருஷ்ணனுக்கு காலில் கொலுசு வாங்கி கட்டினாலும் அல்லது தொட்டில் கட்டி வைத்தாலும் மறு ஆண்டே குட்டி நவநீத கிருஷ்ணன் அருளால் குழந்தை பாக்யம் கிட்டுகிறது. இக்கோயில் மதுரை வடக்கு மாசிவீதியில் உள்ளது.

- ச.சுடலை ரத்தினம

Related Stories:

>