×

‘‘இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்'

இயற்பகை நாயனார் - குருபூஜை. 5 - 1 - 2021

இயற்பகை  நாயனார் நாகை மாவட்டம் பூம்புகாரில் அமைந்துள்ள திருச்சாய்க்காடு என்னும்  ஊரில் வணிகர் (செட்டியார்) குலத்தில் பிறந்தார். இவர், ஒரு சிவத்தொண்டர்.  இயற்கைக்கு மாறாக வாழ்ந்ததால், இவரை   அனைவரும் இயற்பகை (இயற்கைக்கு பகையானவர்) என்று அழைத்தனர். இவர், தன்னிடம்   யார் வந்து எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து வந்தார். இயற்பகை நாயனாரும் அவர் மனைவியும் எந்நேரமும் சிவனை வணங்கி சிவனடியார்களுக்கு  பணிவிடை செய்து பாதபூஜை செய்தார்கள். இயற்பகை நாயனாரின் இறைத் தொண்டை எண்ணி வியந்த சிவபெருமான். அவரை சோதித்து ஆட்கொள்ள விரும்பினார்.

ஒருமுறை  சிவபெருமான் அந்தணர் வேடம் பூண்டு இயற்பகை நாயனார் இல்லத்திற்கு வந்தார். இயற்பகைநாயனார் முறைப்படி சிவனாரை வணங்கி வரவேற்றார். சிவனும் அவரிடம் யாம்  விரும்பும் ஒன்றை உம்மிடமிருந்து பெற்றுப் போகலாம் என்று வந்தேன் என்றார்.  அதற்கு இயற்பகை நாயனார் தாங்கள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பேன் என்றார். நிச்சயமாக… என்றதற்கு சிவனடியார் கேட்டால் என் உயிரைக்கூட தருவேன்  என்றார் இயற்பகை நாயனார். உடனே சிவனடியார் ரூபத்தில் இருந்த சிவபெருமான்,  ‘‘இயற்பகையாரே, எமக்கு பணிவிடை செய்ய உமது மனைவியைத்தாரும். உம் மனைவியை  அழைத்துப் போகவே நான் வந்தேன்’’ என்று கூறினார். இயற்பகை நாயனார், தனது  மனைவியைப் பார்க்க,இயற்பகை நாயனாரின் மனைவியார் கணவரின் விருப்பப்படி  சிவனடியாரின் திருவடியை வணங்கி நின்றார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்  என்று இயற்பகை நாயனார் கேட்டார்.

‘‘உன்  மனைவியைக் கூட்டிச் செல்லும்போது உன் சுற்றத்தார் என் மீது வெறுப்பு  கொள்ளலாம். அதனால் இவ்வூர் எல்லையைக் கடக்கும் வரை நீவிர் எமக்கு துணையாக  வரவேண்டும்’’ என்றார். இயற்பகை நாயனாரும் சரி என்று ஊரின் எல்லையிலுள்ள சாய்க்காடு என்ற இடத்தை அடைந்தனர். அப்போது அவரது உறவினர்கள் மற்றும்  ஊர்க்காரர்கள் தடுக்க முயன்று கேலி பேசினர். ஊர்க்காரர்கள்,  ஆயுதங்களைக்கொண்டு சிவனடியாரைத் தாக்க முயன்றனர்.  இயற்பகை நாயனார், தனது  கூர்வாளால் ஊர்க்காரர்களை வெட்டிச் சாய்த்தார்.   அவரின் கொள்கைப் பிடிப்பைக்கண்டு வியந்த இறைவன், தனது அடியார்   வேடத்தை விடுவித்து இயற்பகை நாயனாருக்கும் அவரது மனைவிக்கும் ரிஷப  வாகனத்தில்   உமையாளுடன் எழுந்தருளிக் காட்சியளித்து, தன்னுடன்  ஐக்கியப்
படுத்திக் கொண்டார். கொலையுண்ட ஊர்க்காரர்களுக்கும் சொர்க்கத்தில் இடம் கொடுத்தார். இயற்பகை  நாயனார் இறைவனுடன் ஐக்கியமான நாள்தான், ‘மார்கழிமாதம் உத்திரம் நட்சத்திரம் ஆகும்’. அதனால், வரும் 5.1.2021 அன்று இயற்பகை நாயனாருக்கு  உரிய தலமான   பூம்புகார் திருச்சாய்காட்டிலுள்ள சாயாவனேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

- R.ராதாகிருஷ்ணன்

Tags : servant ,
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...