×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

304. மஹாசனாய நமஹ
(Mahaashanaaya namaha)
(திருநாமங்கள் 301 முதல் 314 வரை -
ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)

திருமலையில் கோவில் கொண்டிருக்கும் மலையப்பனின் திருவடிகளில் நம்மாழ்வார் சரணாகதி செய்து, தமக்கு முக்தியை அருளுமாறு பிரார்த்தனை செய்தார். அவ்வாறு மலையப்பனிடம் வேண்டி ஆழ்வார் விண்ணப்பித்த பாடல்:

“உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற
திருவேங்கடத்து எம்பெருமானே
குலதொல் அடியேன் உன்பாதம் கூடுமாறு கூறாயே”
“ஊழிக் காலத்தில் உலகங்களை எல்லாம் உண்ட பெரிய திருவாயை உடையவனே!

முடிவில்லாத புகழ் உடையவனே!  உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒளிமிக்க திருமேனி கொண்டவனே! மிகப்பெரியவனே! எனது உயிரானவனே! உலகுக்கே திலகமாய்த் திகழும் திருமலையில் கோவில்கொண்ட எம்பெருமானே! பரம்பரை பரம்பரையாக உனக்கு அடிமைப்பட்டு இருக்கும் அடியேன், உன் திருவடிகளை அடைந்து முக்தி பெறும்படி நீயே அருள்புரிய வேண்டும்!” என்பது இப்பாடலின் பொருள்.
இப்பாடலைக் கேட்ட மலையப்பன், ஆழ்வாரைப் பார்த்து, “நீங்கள் சரணம் என்று சொல்லிக் கொண்டு வந்தவுடன் நான் ஏற்று அருள்புரிய வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லையே!” என்று தெரிவித்தான்.

அதற்கு ஆழ்வார், “நீ அப்படிச் சொல்ல முடியாது!” என்றார்.“ஏன்?” என்று இறைவன் கேட்க, “என் பாடலை நன்றாகக் கவனித்துப் பார்! ‘உலகம் உண்ட பெருவாயா’ என்று தொடங்கி இருக்கிறேன் அல்லவா? அதாவது, ஊழிக் காலத்தில் பிரளய வெள்ளத்திலிருந்து உலகங்களையும் உயிர்களையும் காக்க வேண்டும் என்பதற்காகத் தானே ஆலிலைக் கண்ணனாக அவதாரம் செய்து, உலகங்களையும் உயிர்களையும் எல்லாம் உண்டு உனது வயிற்றில் வைத்து நீ காப்பாற்றினாய்? அதனால்தான் உன்னை உலகமுண்ட பெருவாயா என்றழைத்தேன்!” என்றார் ஆழ்வார்.

“அன்று ஆலிலைக் கண்ணனாக வந்து உலகங்களை உண்டு வயிற்றில் வைத்துக் காத்ததற்கும், இன்று திருமலையப்பனாக நின்று நான் உங்களைக் காப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் மலையப்பன்.அதற்கு ஆழ்வார், “உலகுக்கே ஊழி வெள்ளத்தால் ஆபத்து வரும் போது அதைப் போக்கவல்லவனாக நீ இருக்கும்போது, உலகில் வாழும் ஒற்றை மனிதனான எனக்கு வரும் ஆபத்தைப் போக்கும் வல்லமை உனக்கு நிச்சயமாக உண்டு என்றுதானே பொருள்? ஊழி வெள்ளத்தில் அழுந்துவோரைக் காக்கும் நீ பிறவிப் பெருங்கடலில் அழுந்தித் தவிக்கும் என்னையும் காப்பாற்றித் தானே தீர வேண்டும்? ஊழிக் காலத்தில் யாரும் உன்னிடம் காப்பாற்றும்படிக் கேட்காதபோதே நீ காப்பாற்றினாய். இன்று நீ காக்க வேண்டும் என்று நான் கதறிக் கொண்டிருக்கையில் நீ காப்பாற்றாமல் கைவிட முடியுமா? ஊழிக் காலத்தில் மக்களின் உடலுக்கு வந்த ஆபத்தைப் போக்கிய நீ, இப்போது பிறவிப் பிணியால் என் ஆத்மாவுக்கு வந்த ஆபத்தைப் போக்க வேண்டாமா? இதை எல்லாம் உனக்கு நினைவூட்டவே நீ உலகம் உண்ட வரலாற்றைச் சொன்னேன்!” என்றார்.

ஆழ்வாரின் விளக்கங்களைக் கேட்டு மகிழ்ந்த திருமலையப்பன், “நீங்கள் கேட்டபடி நிச்சயமாக உங்களுக்கு முக்தியை அருள்கிறேன். ஆனால் நீங்கள் தொடங்கிய திருவாய்மொழி என்னும் பிரபந்தத்தில் இதுவரை 600 பாடல்கள் பாடி விட்டீர்கள். மேற்கொண்டு 400 பாடல்கள் பாடி ஆயிரம் பாடல்களையும் நிறைவுசெய்தவுடன் உங்களை முக்திக்கு அழைத்துச் செல்கிறேன்!” என்று விடையளித்து அருள்புரிந்தார்.

எனவே, ‘உலகம் உண்ட பெருவாயா’ என்ற நம்மாழ்வாரின் பாடலில் இருந்து அனைத்து உலகங்களையும் காக்க வேண்டும் என்ற நோக்கில் ஊழிக்காலத்தில் அவற்றை உண்டு தன் வயிற்றில் திருமால் வைத்துக் கொண்டார் என்பதை நாம் அறிய முடிகிறதல்லவா? இதே கருத்தைக் கடோபநிஷத்,“யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதன:ம்ருத்யு: யஸ்ய உபஸேசனம் க இத்தா வேத யத்ர ஸ:”
என்று சொல்கிறது. உலகை எல்லாம் தனக்கு உணவாகவும், யமனை ஊறுகாயாகவும் கொண்டிருக்கிறார் திருமால். ஊறுகாயைத் தொட்டுத் தொட்டு உணவை உட்கொள்வது போல், யமன் என்னும் ஊறுகாயை வைத்து, திருமால் உலகையே உண்டுவிடுகிறார் என்பது இதன் பொருள். அவ்வாறு உண்ட உலகங்களைத் தனது வயிற்றில் வைத்துக் காக்கிறார் திருமால்.

‘அசன’ என்றால் உணவு என்று பொருள். ‘மஹாசன:’ என்றால் பெரிய உணவு என்று பொருள். ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாக வந்து ஒட்டுமொத்த உலகங்களையுமே தனக்கு உணவாகக் கொண்டு உண்டபடியால், திருமால் ‘மஹாசன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 304-வது திருநாமம். இங்கே ‘மஹாசன:’ என்பதற்கு மிகப்பெரிய உணவை உண்டவர் என்று பொருள்.“மஹாசனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பசி நோயால் துன்புறாதபடித் திருமால் காத்தருள்வார்.

305. அத்ருச்யாய நமஹ (Adhrushyaaya namaha)
(திருநாமங்கள் 301 முதல் 314 வரை -
ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)

பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் இருந்த காலத்தில், அவர்கள் தங்கியிருந்த குடிலுக்கு வந்த மார்க்கண்டேயர், தருமபுத்திரனுக்குப் பற்பல நல்விஷயங்களை உபதேசம் செய்தார். அவற்றின் ஓர் அங்கமாக ஊழிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் தருமபுத்திரனுக்கு விளக்கினார்.
ஊழிக்காலம் நெருங்கிய வேளையில், பூமியில் பல ஆண்டுகள் மழையில்லாமல் போனது. நதிகளும் கடல்களும் வற்றிப்போயின. அதன்பின் காற்றோடு சேர்ந்து வரும் அக்னி உலகங்களை உலர்த்தியது. கொடூர வடிவம் கொண்ட பற்பல மேகங்கள் இடிமின்னலோடு வானில் எழுந்தன. அந்த மேகங்கள் பொழியும் மழையால் உலகனைத்தும் நிரம்பியது. உலகமே அந்த வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், காற்றடித்து அம்மேகங்களைக் கலைத்து விட்டது. உலகெங்கிலும் வெறும் பிரளய வெள்ளம் மட்டுமே காணப்பட்டது.

ஆனால் திடீரென அந்த ஊழி வெள்ளத்தில் ஓர் ஆலமரத்தை நான் கண்டேன். அந்த ஆலமரத்தின் கிளையிலே ஒரு சிறிய இலை. அந்த இலையில் ஒரு குழந்தையை நான் கண்டேன். தனது தாமரை போன்ற திருக்கரத்தால், தனது தாமரை போன்ற திருவடியின் கட்டைவிரலை எடுத்து, தனது தாமரை போன்ற முகத்தில் உள்ள திருவாயில் வைத்தபடி அந்தக் குழந்தை ஆல மர இலையில் சயனித்திருந்தது.

 “உலகமே நாசம் அடைந்து அழிந்து போன நிலையில் இந்த ஆலமரம் மட்டும் இங்கே எப்படி இருக்கிறது? இந்தக் குழந்தை மட்டும் ஏன் அழியவில்லை?” என்று நான் சிந்தித்தேன். எனது தவ வலிமையைப் பயன்படுத்தி அக்குழந்தை யார் என்று அறிய முயன்றேன். ஆனால் என் தவ வலிமையால் அக்குழந்தையைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

அக்குழந்தை பள்ளி கொண்டிருந்த ஆலிலை மெல்ல மெல்ல ஊழிவெள்ளத்தில் மிதந்து என்னை நோக்கி வரவே, அந்தக் குழந்தையை நன்றாகக் கவனித்தேன். தாமரை போன்ற திருக்கண்கள், காயாம்பூ போன்ற திருமேனி நிறம், மார்பிலே ஸ்ரீவத்சம் என்ற மறு ஆகியவற்றை உடைய அந்தக் குழந்தை திருமாலைப் போல இருக்கிறதே என்று எண்ணினேன்.

என் அருகில் வந்த அந்தக் குழந்தை, “முனிவரே! என் உடலுக்குள் நீங்கள் இப்போது புகுந்துவிடுங்கள்!” என்று சொல்லிவிட்டு, தனது வாயைப் பிளந்தது. நான் என் வசத்தை இழந்தவனாக அக்குழந்தையின் வாய்க்குள்ளே புகுந்தேன். அதன் வயிற்றுக்குள் நான் சென்ற போது, பூமியில் உள்ள கண்டங்கள், கடல்கள், நாடுகள், நகரங்கள், நதிகள், மலைகள், காடுகள் அத்தனையும் நான் அங்கே கண்டேன். அக்குழந்தையின் திருமேனி முழுவதும் நான் சுற்றிச் சுற்றிப் பார்த்தும், அந்தத் திருமேனியின் எல்லையை என்னால் காண முடியவில்லை.

அந்தத் திருமேனியிலிருந்து எப்படி வெளியே வருவது எனத் தெரியாமல் பலகாலம் தவித்த நான், அந்தக் குழந்தையிடமே சரணாகதி செய்தேன். உடனே வாயு வேகத்தில் அதன் திருவாய் வழியாக வெளியே வந்துவிட்டேன். அந்தக் குழந்தை எனக்குத் திவ்வியமான பார்வையையும் தத்துவஞானத்தையும் அருளியது. அதன் விளைவாக, அவர் திருமாலின் அவதாரமான ஆலிலைக் கண்ணன் என்பதையும், ஊழிக் காலத்தில் உயிர்களையும் உலகங்களையும் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காக்க அவதரித்தவர் என்பதையும் உணர்ந்தேன். மீண்டும் படைக்கும் காலம் வந்தபோது, தான் உண்டவற்றை எல்லாம் வெளிப்படுத்தி உலகைப் படைத்தார் திருமால்.

தருமபுத்திரா! அன்று ஆலிலைக் கண்ணனாக நான் எந்த ஒரு தேவனைக் கண்டேனோ, அதே தேவன்தான் உங்களின் மாமன் மகனான கண்ணனாக அவதரித்திருக்கிறான். அவர் செய்த அருளால்தான் அன்று ஊழிக் காலத்தில் நடந்த என் நினைவில்
உள்ளன! எனவே நீங்கள் கண்ணனைச் சரணடையுங்கள் உங்களது கஷ்டங்கள் அனைத்தும் தீரும்!
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்:

“கதம் நு அயம் சிசு: சேதே லோகே நாசுமுபாகதே
தபஸா சிந்தயன் சாபி தம் சிசும் நோபலக்ஷயே”
என் தவ வலிமையால் எத்தனை முயற்சிகளை நான் செய்த போதும், அந்த ஆலிலைக் கண்ணனை அறியமுடியவில்லை. அவனைச் சரணடைந்த போது தான், அவன் அருளால் அவனை அறிந்து கொண்டேன்.

இதுவே மார்க்கண்டேயர் செய்த உபதேசமாகும். இதில் சொல்லப்பட்ட படி, சாதாரண மனிதர்களாலோ அல்லது மார்க்கண்டேயர் தவம் மிக்கவர்களாலோ கூட அறியமுடியாத மேன்மை பெற்றவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘அத்ருச்ய:’ என்றழைக்கப்படுகிறார். ‘த்ருச்ய’ என்றால் (இவ்விடத்தில்) அறியப்படுபவர் என்று பொருள். ‘அத்ருச்ய:’ என்றால் அறிவதற்கு அரியவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 305-வது திருநாமம்.
“அத்ருச்யாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அறியாததை அறிவிக்கும் குருவாகத் திருமால் இருந்து, நல்லறிவை அருள்வார்.

306. வ்யக்தரூபாய நமஹ (Vyaktharoopaaya namaha)
(திருநாமங்கள் 301 முதல் 314 வரை - ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)
நான்கு வேதங்களுக்கு இணையாக நான்கு நூல்களைத் தமிழில் பாடி அருளினார் நம்மாழ்வார் - ரிக் வேதத்துக்கு இணையான திருவிருத்தம், யஜுர் வேதத்துக்கு இணையான திருவாசிரியம், சாம வேதத்துக்கு இணையான திருவாய்மொழி, அதர்வண வேதத்துக்கு இணையான பெரிய திருவந்தாதி.

அவற்றுள் சாம வேத சாரமாகத் திகழ்வதும், இன்னிசையோடு கூடியதும், அமுதை விட இனியதுமான திருவாய்மொழி என்னும் பிரபந்தத்தில் அடிக்கடி நம்மாழ்வாருக்கும் திருமாலுக்கும் இடையே பல சுவையான உரையாடல்கள் நிகழ்வதுண்டு. அத்தகைய ஓர் உரையாடலை இப்போது காண்போம்.
திருவாய்மொழியில் ஏழாம் பத்து, இரண்டாம் பதிகத்தில், திருமாலைப் பிரிந்து ஏங்கிய நம்மாழ்வார், “இறைவா! நீ விரைவில் எனக்குத் தரிசனம் தர வேண்டும்!” என்று பிரார்த்தித்தார். அந்நிலையில்,
“கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்!”
என்று திருமாலிடம் வேண்டினார்.

இவ்வாறு ஆழ்வார் பாடியவாறே, அவரது மனதுக்குள் ஒளிந்திருக்கும் திருமால், “என்ன ஆழ்வீர் உங்களது பாடல் வரிகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளனவே! ‘கட்கிலீ’ என்றால் யாராலும் காண முடியாதவன் என்று பொருள். யாராலும் காண முடியாதவனே! உன்னை நான் காணும்படி நீ அருள்புரிய வேண்டும் என்று பாடியுள்ளீர்களே! மேலும் உபநிஷத்துகளில்,

“ந சக்ஷுஷா பச்யதி கச்சன ஏனம்”
இறைவனை மாமிசக் கண்களைக் கொண்டு யாராலும் காண இயலாது என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதே! அதை அறிந்து கொண்டு கட்கிலீ - காண முடியாதவன் என்று நீங்களும் என்னைக் குறிப்பிட்டு விட்டு ஆனாலும் என்னைக் காண வேண்டும் என்று பாடுகிறீர்களே!” என்று கேட்டார்.
அதற்கு ஆழ்வார், “உன்னை இந்த மாமிசக் கண்ணால் காண முடியாது என்பதை அறிந்தபடியால் தானே கட்கிலீ என்று பாடியுள்ளேன்!” என்றார். “அப்புறம் ஏன் ‘உன்னைக் காணுமாறு அருளாய்’ என்று கோருகிறீர்கள்?” என்று திருமால் கேட்க, “உன்னைக் காண முடியாது என்று சொன்ன அதே உபநிஷத்துகள் தான்,“யம் ஏவ ஏஷ வ்ருணுதே தேன லப்ய:

தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்”
ஒருவனுக்குத் தரிசனம் தரவேண்டும் என்று இறைவன் எண்ணினால், தனது கருணையால் இறைவன் தன்னைக் காட்டுவான் என்றும் சொல்கின்றனவே! மாமிசக் கண்களால் காண முடியாது என்றால், எங்கள் முயற்சியால் உன்னைக் காணமுடியாது என்று பொருள். ஆனால் உனது அருளால் உன்னைக் காண இயலுமே! நீ நினைத்தால் எங்களுக்குத் தரிசனம் தரலாமே! அதனால் தான் உன்னைக் காணுமாறு அருளாய் என்று கோரினேன். ‘எங்கள் முயற்சியால் காணமுடியாதவனே! உன் அருளால் உன்னைக் காணமுடியும்! ஆதலால் நீயே உன்னை நான் காணுமாறு அருளவேண்டும்!’ என்பதே என் பாடலின் கருத்து.

குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் நீ விச்வரூபம் எடுத்தாயே! அதை அங்கிருந்த போர்வீரர்கள் யாராலும் காண முடியவில்லை. ஆனாலும் உனது அருள்பெற்ற அர்ஜுனன் அந்த விச்வரூபத்தைத் தரிசித்தானே! உனது அம்சமான வியாசரின் அருள்பெற்ற சஞ்ஜயனும்
விச்வரூபத்தைத் தரிசித்தானே!

ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாக நீ வந்தாயே! அப்போது உலகில் உள்ள யாராலும் உன்னைக் காண முடியவில்லை! ஏனெனில், உலகனைத்தும் உன் வயிற்றுக்குள் சென்று விட்டது! இருந்தபோதும், நீ மார்க்கண்டேயரிடம் கருணை காட்டியதால், அவர் மட்டும் உனக்கு வெளியே இருந்து கொண்டு, உனது ஆலிலைக் கண்ணன் திருக்கோலத்தைத் தரிசித்து மகிழ்ந்தாரே! அதன்பின் உனக்குள்ளே சென்று உனக்குள் இருக்கும் உலகங்களையும் கண்டு வந்தாரே!

எனவே இறைவா! நாங்கள் எவ்வளவு முயன்றாலும் இந்தக் கண்களால் உன்னைக் காண இயலாது! நீ அருள்புரிந்தால் நிச்சயம்
காணலாம்!” என்று விடையளித்தார்.‘வ்யக்த’ என்றால் வெளிப்படுத்தப்பட்ட என்று பொருள். ‘ரூப’ என்றால் வடிவம். ‘வ்யக்தரூப:’ என்றால் வடிவத்தை வெளிப்படுத்துபவர் என்று பொருள். தனது கருணையால் தன் பக்தர்களுக்குத் தன் வடிவத்தைத் திருமால் வெளிப்படுத்திக் காட்டுவதால், ‘வ்யக்தரூப:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 306-வது திருநாமம்.“வ்யக்தரூபாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தன் வடிவையும் மேன்மைகளையும் திருமால் நன்கு வெளிப்படுத்திக் காட்டுவார்.

307. ஸஹஸ்ரஜிதே நமஹ (Sahasrajithe namaha)
(திருநாமங்கள் 301 முதல் 314 வரை - ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)
மேகை: மேதுரம் அம்பரம் வனபுவ: ச்யாம: தமால த்ருமை:
நக்தம் பீரு: அயம் த்வம் ஏவ தத் இமம் ராதே க்ருஹம் ப்ராபய
இத்தம் நந்த நிதேசத: சலிதயோ: ப்ரத்யத்வ குஞ்ஜ த்ருமம்
ராதா மாதவயோ: ஜயந்தி யமுனா கூலே ரஹ கேலய:

என்பது அஷ்டபதியில் ஜயதேவர் பாடிய சுலோகம். இதன் பொருளைச் சற்றே ஆராய்வோம்.கண்ணனுக்கு இரண்டு வயது இருக்கும். ஒருநாள் மதியம் தனது தோட்டங்களைப் பார்வையிட நந்தகோபர் புறப்பட்டார். குழந்தை கண்ணன் தானும் தந்தையுடன் வருவேன் என்று அடம் பிடித்தான். அதைக் கண்ட யசோதை, “கண்ணா! உன் தந்தைக்குப் பொறுப்பே கிடையாது. அவரை நம்பி நீ சென்றால், வரும்போது உன்னை எங்காவது தொலைத்து விட்டு வெறுங்கையோடு திரும்பி வருவார்! எனவே இவரை நம்பி உன்னை நான் அனுப்பி வைக்க மாட்டேன்!” என்றாள்.

ஆனால் கண்ணன் ‘வீல்’ ‘வீல்’ என்று அழத் தொடங்கி விட்டான். அப்போது எதிர் வீட்டில் வாழ்ந்த விருஷபானுவின் மகள் ராதை அங்கே வந்தாள். அச்சமயம் ராதைக்குச் சுமார் பதினெட்டு வயது இருக்கும். “என்ன ஒரே சத்தமாக இருக்கிறதே!” என்று யசோதையைப் பார்த்துக் கேட்டாள் ராதை. யசோதை நடந்தவற்றைச் சொல்ல, “நான் குழந்தையைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் திரும்ப வந்து வீட்டில் சேர்க்கிறேன்!” என்றாள் ராதை.

அதை யசோதையும் ஏற்கவே, கண்ணனைத் தனது இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு நந்தகோபனுடன் தோட்டத்துக்குச் சென்றாள் ராதை. நந்தகோபர் தோட்டங்களைப் பார்வையிட்டு வந்த போது, திடீரென வானில் கார்மேகக் கூட்டங்கள் தோன்றி விட்டன. அதைக் கண்ட நந்தகோபர், “ராதா! இருட்டைப் பார்த்தால் கண்ணன் பயப்படுவான்! நீ இவனை வீட்டுக்கு அழைத்துச் செல்! நான் பின்னால் வருகிறேன்!” என்றார். ராதையும் கண்ணனை வீட்டுக்குத் தூக்கிச் சென்றாள்.

தன் வேலைகளை முடித்து விட்டு நந்தகோபர் இரவு வீடு திரும்பினார். “கண்ணா!” என்று வீட்டு வாசலில் நின்றபடி ஆவலோடு அழைத்தார். கோபத்துடன் வந்த யசோதை, “கண்ணனை நீங்கள் அழைத்துச் சென்று விட்டு இங்கே வந்து கண்ணா என்று கூப்பிடுகிறீர்களே! குழந்தை எங்கே?” என்று கேட்டாள். “ராதையையும் கண்ணனையும் மதியமே வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டேனே!” என்றார் நந்தகோபர். “இன்னும் அவர்கள் வரவில்லையே!” என்று யசோதை பதறிப் போனாள்.

அப்போது கண்ணனோடு ராதை வந்து சேர்ந்தாள். “எங்கே அம்மா போனாய்?” என்று கேட்டார் நந்தகோபர். அதற்கு ராதை, “நாங்கள் வீடு திரும்பி வரும்போது வழியில் ஒரு பூங்காவைக் கண்ட கண்ணன், அங்கே விளையாட வேண்டும் என்று அடம் பிடித்தான். அவனைப் பூங்காவுக்குள் அழைத்துச் சென்று விளையாட்டு காட்டி விட்டு அழைத்து வந்தேன். அதனால் தான் தாமதம் ஆகி விட்டது!” என்று விடையளித்தாள். கண்ணனைப் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுத் தன் வீட்டுக்குச் சென்றாள் ராதை.

ஆனால் இங்கே ஒரு ரகசியம் உள்ளது. பூங்காவுக்குள் நுழையும் முன் ராதையின் வயது பதினெட்டு, கண்ணனின் வயது இரண்டு. ஆனால் பூங்காவுக்குள் நுழைந்தபின் கண்ணனின் வயது இருபது. பூங்காவிலிருந்து வெளியே வருகையில் கண்ணனின் வயது இரண்டு. எனவே இடைப்பட்ட காலத்தில் ராதையோடு காதலனாக உறவாடி இருக்கிறான் கண்ணன்.

ஆம். நினைத்த நேரத்தில் இரண்டு வயதுக் குழந்தையிலிருந்து இருபது வயது வாலிபனாகவும் கண்ணன் மாறுவான். இருபது வயது வாலிபனிலிருந்து இரண்டு வயதுக் குழந்தையாகவும் மாறுவான். நாம் இரண்டிலிருந்து இருபதுக்கு மெல்ல நகரலாம். ஆனால் இருபதிலிருந்து இரண்டுக்கு நம்மால் வரமுடியாது. கண்ணனால் முடிகிறதே! ஏன்? ஏனெனில் திருமால் காலத்தை வென்றவர். மனிதர்களான நாம் தான் காலத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆனால் இறைவன் இந்தக் காலத்துக்குக் கட்டுப்படாதவர். காலத்தை வென்று அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

இவ்வாறு காலம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை ஆலிலைக் கண்ணனாக அவதரித்த போது திருமால் காட்டினார். ஊழிக் காலம் என்பது ஆயிரம் சதுர்யுகங்கள் நீடித்திருந்தது. அந்த ஆயிரம் சதுர்யுகங்களும் ஆலிலையில் சயனித்துக் கொண்டிருந்து, அக்காலத்தை வென்று, அந்த ஊழிக் காலம் முடிந்தபின் மீண்டும் உலகின் படைப்பைத் தொடங்கினார் திருமால். முதன்முதலில் படுத்திருந்தே வென்றவர் திருமால் தான்.

‘ஜித்’ என்றால் வென்றவர். ‘ஸஹஸ்ர’ என்றால் ஆயிரம். ஆயிரம் சதுர்யுகங்கள் அளவுகொண்ட ஊழிக் காலத்தை ஆலிலையில் படுத்திருந்த படியே வென்று, காலத்தை வென்றவராகத் திருமால் திகழ்வதால் அவர் ‘ஸஹஸ்ரஜித்’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸஹஸ்ரஜித்’ என்றால் ஆயிரம் சதுர்யுகக் காலத்தை வென்றவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 307-வது திருநாமம்.

“ஸஹஸ்ரஜிதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் காலத்தை வென்று காவியம் ஆகி வேதனை தீர்க்கும் வெற்றித் திருமகன்களாகத் திகழ்வார்கள்.

308. அனந்தஜிதே நமஹ (Ananthajithe namaha)
ஊழிக் காலத்தில் உண்டாகும் ஊழிக் கடல் வெள்ளத்தில் இருந்து உலகங்களையும் உயிர்களையும் காக்க வேண்டி ஆலிலைக் கண்ணனாக வந்த திருமால், உலகங்களையும் உயிர்களையும் எல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காத்தார். இந்த அவதாரக் காட்சியை மார்க்கண்டேய முனிவருக்குக் காட்டினார் திருமால்.ஆலிலைக் கண்ணனின் அவதாரத்தையும் செயல்களையும் கண்ட மார்க்கண்டேயர், “முள்ளை முள்ளால் எடுப்பது போல், கடலில் இருந்து காப்பதற்காக நீயே கடல் போல் வந்துள்ளாயே!” என்று ஆலிலைக் கண்ணனைத் துதித்தார்.

ஆலிலைக் கண்ணன் மார்க்கண்டேயரைப் பார்த்து, “சிறிய வடிவத்துடன் வந்திருக்கும் என்னை ஏன் கடலோடு ஒப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு மார்க்கண்டேயர், “கண்ணா! கடலை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. கடற்கரைக்கு அருகில் வாழ்பவர்கள் தினந்தோறும் கடற்கரைக்குச் சென்று ஆனந்தமாக அந்தக் கடலைக் கண்டு ரசித்து விட்டு வருவார்கள். அதுபோலத் தான் உன்னையும் எத்தனை முறை பார்த்தாலும் மனதில் அலுப்பு ஏற்படாது. அப்போதைக்கு அப்போது நீ ஆராவமுதமாக இருக்கிறாய்.

மழை பொழிந்து தான் கடலுக்குத் தண்ணீர் வர வேண்டும் என்று அவசியம் இல்லை. அது எப்போதுமே தன்னிறைவோடு இருக்கும். அதுபோலத் தான் நாங்கள் தொண்டு செய்வதால் தான் உனக்குப் புதிதாகப் பெருமை வரவேண்டும் என்பதில்லை. நீ எப்போதுமே ஆனந்தமே வடிவெடுத்தவனாய் இருக்கிறாய்.கடல் தேவர்களுக்கு அமுதத்தைக்கொடுத்தது. நீயோ உன் அடியார்களுக்கு உன்னையே ஆராவமுதமாகத் தந்து விடுகிறாய்.

மதியைக் (சந்திரனை) கண்டால் கடல் பொங்குகிறது. நீ மதி (ஞானம்) மிக்க ஞானியர்களைக் கண்டால் மகிழ்ச்சியால் பொங்குகிறாய்.கடலை எத்தனை பேர் வேண்டுமானாலும் வேடிக்கை பார்க்கலாம். ஆனால் எல்லோராலும் கடலுக்குள் மூழ்கி முத்தெடுத்து வர இயலாது. அது போலத் தான் உன்னைத் தூரத்தில் இருந்து எத்தனையோ பேர் காண்கிறார்கள். ஆனால் உனது பெருமைகளின் ஆழத்தையும், நீ யார் என்பதையும் யாராலும் முழுமையாக அறிய முடியாது.

முக்கியமாக, கண்ணா! கடலுக்கும் எல்லை இல்லை! உனக்கும் எல்லை இல்லை. தூரத்தில் இருந்து நாம் பார்க்கையில், ஏதோ கடலுக்கு எல்லை இருப்பது போல் கூடச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் கடலில் இறங்கிப் பயணிக்கப் பயணிக்க, அதன் எல்லையைக் காணவே முடியாது என்பதை உணர்வார்கள்.

அதுபோலத் தான் நீ பார்ப்பதற்குச் சிறு குழந்தை போலத் தெரிகிறாய். ஆனால் நானும் உனது வாய்க்குள்ளே நுழைந்து உனது திருமேனி முழுவதும் நூறு ஆண்டுகளுக்கு மேல் தேடிப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும் போது குழந்தையாகத் தோன்றும் உனது திருமேனிக்கு உண்மையில் உள்ளே எல்லை என்பதே இல்லை என அறிந்து கொண்டேன்.

அந்த: சரீரே தஸ்யாஹம் வர்ஷணாம் அதிகம் சதம்
ந ஹி பச்யாமி தஸ்யாஹம் அந்தம் தேவஸ்ய கர்ஹிசித்
ஆஸாதயாமி நைவாந்தம் தஸ்ய ராஜன் மஹாத்மன:”
என்று விடையளித்தார் மார்க்கண்டேயர்.

ஆல மர விதை சிறியதாக இருந்தாலும், அந்தச் சிறிய விதைக்குள் பெரிய ஆல மரமே அடங்கி இருக்கும் அல்லவா? அதுபோல ஆலிலைக் கண்ணனின் தோற்றம் சிறு குழந்தை போலத் தெரிந்தாலும், அத்தனை உலகங்களும் அந்தச் சிறு வடிவத்துக்குள் அடங்கி இருக்கிறது. உண்மையில் அவரது மகிமைக்கு எல்லை என்பதே இல்லை.

‘அந்தம்’ என்றால் எல்லை என்று பொருள். ‘அனந்தம்’ என்றால் எல்லையற்றது என்று பொருள். யாராலும் எல்லை காண முடியாத
படியான உயர்ந்த மகிமை கொண்டவராகத் திருமால் திகழ்வதால், ‘அனந்தஜித்’ என்று அவர் போற்றப்படுகிறார். ‘அனந்தஜித்’ என்றால் எல்லையில்லாத மகிமை பெற்றவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 308-வது திருநாமம்.

“அனந்தஜிதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் சிறந்த
மகிமைகளும் திறமைகளும் பெருமைகளும் கிடைக்கும்படி திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!