×

குப்பைகள் கலந்து தண்ணீர் மாசடைவதால் பெரிய ஊருணியில் வேலி அமைக்க வேண்டும்: ஆனந்தூர் பொதுமக்கள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் பெரிய ஊருணியில் குப்பைகள் கலந்து தண்ணீர் மாசடைகிறது. எனவே ஊருணியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியன் ஆனந்தூர் கிராமத்தின் நடுவில் மிகவும் பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த பெரிய ஊருணி உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை ஆனந்தூர் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராமலும், பராமரிப்பின்றி போனதாலும் குளத்தில் உள்ள தண்ணீரில் கழிவுநீர், குப்பை கலந்து மாசடைந்து காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் இந்த ஊரணி நிரம்பியுள்ளது. ஆனால் நிரம்பி இருந்தாலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. காரணம் குடியிருப்பு பகுதி மற்றும் கடைத்தெரு பஜார், பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு மத்தியில் அமைந்துள்ளதாலும், முள்வேலி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளதாலும் காற்றில் பாலித்தீன் கவர்கள், குப்பை உள்ளிட்டவை ஊருணிக்குள் சென்று தண்ணீர் மாசடைந்தது. மேலும் தற்சமயம் ஊருணியில் இருந்த மீன்கள் ஏராளமாக செத்து மிதப்பதால் தண்ணீர் மேலும் மாசடைந்துள்ளது. இந்த ஊருணியின் மேல் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவரின் சொந்த செலவில் சுமார் 100 அடிக்கு மேல் முள்வேலி அமைத்துள்ளனர். அதேபோல் எஞ்சிய மற்ற பகுதிகளிலும் முள்வேலி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். தற்போது ஊருணியில் உள்ள தண்ணீரை பயன்படுத்தினால் நோய் தொற்று ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்தாமல் தவிர்த்து வருகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், ‘‘சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள் மூலமாக ஊருணி தண்ணீரில் மிதந்து வந்த பாலித்தீன் கவர்கள், பாட்டில்கள் மற்றும் அடர்ந்து காணப்பட்ட புல், புதர்கள் ஆகியவற்றை அகற்றினர். ஆனால் மீண்டும் காற்றில் பறந்து வரும் பாலித்தீன் கவர்கள் மற்றும் பாட்டில்கள் ஊருணிக்குள் சேர்கின்றன. இதனால் தண்ணீரின் நிறம் உருமாறி மாசடைந்து காணப்படுகிறது. தற்போது மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி மழைக்காலம் வருவதற்கு முன்பாக ஊருணியில் மாசடைந்து உள்ள தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஊரணியில் குப்பைகள் கலக்காதவாறு முழுவதுமாக தடுப்புவேலி அமைக்க வேண்டும்’’ என்றனர்.தமுமுக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டுள்ள பெரிய ஊருணியில் உள்ள தண்ணீரில் சாக்கடை நீர் கலந்ததாலும், மீன்கள் செத்து மிதப்பதாலும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதற்கு ஓர் நல்ல தீர்வு காணும் விதமாக ஊரணியில் உள்ள மாசடைந்த தண்ணீரை வெளியேற்றி தந்து உதவிட வேண்டும்’’ என்றார்….

The post குப்பைகள் கலந்து தண்ணீர் மாசடைவதால் பெரிய ஊருணியில் வேலி அமைக்க வேண்டும்: ஆனந்தூர் பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anandur ,R. S.S. Anandur ,Mangalam ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு