சென்னை: சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் நடிகை சமந்தா. இது குறித்து அவர் கூறியது: சினிமாவில் பதினைந்து வருடங்கள் என்பது நீண்ட காலம். இப்போது நான் நடித்த சில படங்களைப் பார்க்கும்போது, இவ்வளவு மோசமாகவா நடித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஆனால் நான் அப்படித்தான் கற்றுக்கொண்டேன். எனக்கு சினிமாவில் வழிகாட்ட யாருமில்லை. வேறு மொழிகள் கூட தெரியாமல்தான் இருந்தேன்.
எல்லாவற்றையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு சினிமாவில் நண்பர்கள் இல்லை, தொடர்புகள் இல்லை, உறவினர்கள் இல்லை. எல்லாம் புதிதாக இருந்தது. அதையெல்லாம் கடந்துதான் இதுவரை பயணித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.
