×

தகட்டூர் காசி பைரவர்

இந்தியாவிலேயே அபூர்வமாக மிகச் சில இடங்களில்தான் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது. அப்படிப்பட்ட அபூர்வம் வேதாரண்யத்திற்கு 17 கி.மீ. தொலைவிலுள்ள தகட்டூரில் நிகழ்ந்திருக்கிறது. இப்புண்ணிய பூமியில் பைரவர் அமர்ந்தது, தனி சுவாரசியம் கொண்ட புராண உண்மை. சத்திய சந்தனாக வாழ்ந்த ராமனின் சரிதத்தோடு தொடர்புடையது.

அந்த க்ஷேத்ரத்திற்கு யந்திரபுரி என்று பெயர். அழகிய தமிழில் தகடூர் (தகடு+ஊர்)  என்றழைப்பர். பிரபஞ்ச சக்திகளை, இறைச்சாந்நித்தியத்தை யந்திரத்தில் கணக்கிட்டு, கோடுகளாக வரைந்து, மந்திர சக்திகளை அதில் பொதித்து வைத்திருப்பர். அனுதினமும் அதை பூஜிக்க, அதன் சாந்நித்தியமே அப்பிரதேசத்தையே காக்கும் வலிமையுடையதாக மாறும். யந்திரங்கள் அதாவது தகடுகள் செய்த ஊராதலால் தகடூர் என்றழைக்கப்பட்டு, ‘தகட்டூர்’ என்று நிரந்தரமாக மாறியது.

ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு, அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்யத் தயாரானார் ராமர். அனுமனை நோக்கி, “சிவாம்சத்தையே உனக்குள் கொண்டவன் நீ. நான் மேற்கொள்ளபோகும் சிவபூஜைக்காக காசியிலிருந்து நீயே லிங்கம் கொண்டு வாயேன்” என்றார். அந்த உத்தரவுக்கு உடனே அடிபணிந்த ஆஞ்சநேயர், அப்போதே வானை நோக்கிப் பறந்தார்.

சஞ்சீவி மூலிகைக்காக சஞ்சீவி பர்வதத்தையே சுமந்து வந்தவன் அல்லவா அவன்? இப்போது காசிலிங்கம் கேட்ட தன் தலைவனுக்காக, சிவாலயத்தையே கைகளில் ஏந்தி ராமரின் இருப்பிடம் திரும்பினார். அதிவேகமாக வந்த அனுமனை யந்திரபுரியின் சாந்நித்யம் வசீகரித்தது. இங்கேயே தங்கிவிடலாமோ என்று ஒரு கணம் உள்ளுக்குள் ஆசை கிளர்ந்தது.

உறக்கம் மேலிட, சற்றே அயர்ந்தார். தான் சுமந்து வந்த சிவாலயத்து பைரவரை அங்கேயே அமர்த்திவிட்டு ராமரை அடைந்தார். அந்த பைரவரை ஆஞ்சநேயரே பிரதிஷ்டை செய்ததுபோல அந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது. தம் மனம் புரிந்து ஆஞ்சநேயர் செய்ததை எண்ணி ராமர் மகிழ்ந்தார். அத்தலம் ஆஞ்சநேயரின் திருப்பாதம் பட்டும், ராமனின் பார்வையாலும் மலர்ந்தது.

மகாக்ஷேத்ரங்களின் எண் திக்குகளிலும் அதற்குரிய தேவதைகளை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்த பெருந்தலத்தின் அருட்வீச்சு பரந்திருக்கும். சில தலங்களுக்கு அவற்றின் எல்லை ஐம்பது, அறுபது கி.மீ. தூரம் வரை விரிந்திருக்கும். அந்த தலத்திற்கான காவல் தெய்வங்களை தனிக்கோயிலில் அமர்த்தினார்கள். அப்படிப்பட்ட திருமறைக்காடு எனும் வேதாரண்யத்திற்கு காவலாக அல்லது க்ஷேத்ர பாலகராக அமைந்த தலமே தகட்டூர் என்கிறார்கள், சான்றோர்கள்.  

தகட்டூர், சவுக்குக் காடுகளுக்கு மத்தியில் அமானுஷ்ய அமைதியுடன் விளங்குகிறது. வேதாரண்யத்தின் கடற் காற்று எப்போதும் அவ்விடத்தை குளிரூட்டிக் கொண்டிருக்கிறது. பரந்த மணற்பரப்பில் ஆங்காங்கு வீடுகள். தனிக்கோயிலாக தகட்டூர் பைரவர் கோயில் விளங்குகிறது. உள்ளே நுழைய, நேரே கருவறை மூர்த்தியாக, மூலஸ்தானத்திலேயே பைரவர் வீற்றிருக்கிறார். வேறெங்கும் காணமுடியாத அபூர்வ காட்சி இது. கைகளில் சூலம், கபாலம், கயிறு, உடுக்கை தாங்கி, பாம்புகளை தன் மேனி முழுவதும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். திகம்பர மூர்த்தியாக காட்சி தரும் பைரவர், நாய் வாகனத்தை கொண்டுள்ளார். அந்தச் சந்நதியில் எப்போதும் வெம்மையும் ஆகர்ஷணமும் நிறைந்திருக்கிறது.

பைரவரை வழிபடுவோர் பிணியிலா வாழ்க்கை வாழ்வர். தீய சக்திகளின் பாதிப்புடையோர் இத்தலத்தை அடைய தீயவை தீய்ந்துபோகும். ஞானபீடமாகத் திகழும் இக்கோயிலில் சிவபஞ்சாட்சர யந்திரத்தை கருவறை வாயிலுக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் நிலைப்படுத்தியுள்ளனர். காசிலிங்கத்தையும், விசாலாட்சியையும் கோயிலின் வடபாகத்தில் நிறுவியுள்ளனர்.

பிராகாரத்தில் கணபதி, வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியும் கோயில் கொண்டுள்ளனர். கோயிலுக்கு எதிரேயே தீர்த்தக்குளம் ஒன்றுள்ளது. அதன் ஒரு கரையில் காத்தாயிகருப்பாயி சமேத ராவுத்தர் சந்நதி உள்ளது. இத்தலத்தின் காவல் தெய்வமாக இவர்கள் திகழ்கிறார்கள். இங்கு பலியிடும் வழக்கம் உள்ளது. இங்கும் ஒரு யந்திர மேடை உள்ளது.

தகட்டூர் காசிக்கு நிகரான பைரவத் தலம். ஒருமுறை தரிசித்தோரை பலமுறை அழைக்கும் அருட்திறன் வாய்ந்தது. தஞ்சாவூரிலிருந்து, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில் வாயுமேடு என்ற கிராமம் இருக்கிறது. இவ்வூரிலிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்றால் தகட்டூரை அடையலாம்.

படம்: சி.எஸ். ஆறுமுகம்

கிருஷ்ணா

Tags : Thaktur Kasi Byrver ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்