×

பக்தனுக்காக அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய அபிராமி

திருக்கடையூர், நாகை

திருக்கடையூரில் கோயில் கொண்டருளும் அபிராமி அம்பிகையின் தீவிர பக்தர் சுப்பிரமணிய பட்டர். ஒரு நாள் சரபோஜி மன்னன் கோயிலுக்கு தன் பரிவாரங்களுடன் வரும் போது சுப்பிரமணிய பட்டர். அம்பிகையின் முன் அமர்ந்து வணங்கி கொண்டிருந்தார். மன்னன் நான் வந்திருப்பதை கண்டு கொள்ளாமல் இருந்ததை எண்ணி, யார் இவன்? என்று கோபத்துடன் மன்னன் கேட்க, உடன் வந்த மந்திரியாரோ மனநிலை சரியில்லாதவன். என்று கூற, அர்ச்சகர், மன்னா இவன் அம்பிகையின் மீது அளவற்ற பக்தி கொண்டவன் என்று கூறுகிறார்.

உடனே அவரை சோதிக்க எண்ணிய மன்னன், சுப்பிரமணிய பட்டரிடம் நாளை என்ன திதி என்று கேட்கிறார். நிறைந்த அமாவாசை என்று இருக்க,
சுப்பிரமணிய பட்டர் அம்பாளின் முகம் முழுநிலவாக இருப்பதைக் கண்டு, அம்பிகையின் முகத்தை நினைத்துக் கொண்டே, சரபோஜி மன்னரிடம் நாளை பௌர்ணமி திதி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், நாளை பௌர்ணமி என்றால் நிலவு வருமா எனக் கேட்க, வரும் போடா என ஒருமையில் சுப்பிரமணிய பட்டர் உரைக்க, நாளை நிலவு வரவில்லை என்றால் உனக்கு மரண தண்டனை. எரியும் நெருப்பில் இறக்குங்கள் இவனை என்று காவலர்களுக்கு உத்தரவிட்டார் மன்னர்.

மறுநாள் இரவு ஊஞ்சலில் சுப்பிரமணிய பட்டரை நிற்க வைத்து அதன் கீழ் நெருப்பை பற்ற வைத்து விட்டனர். பட்டர் அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அம்பாள் அபிராமி, சுப்பிரமணிய பட்டருக்கு அருளிய திருத்தலம். திருக்கடையூர். இத்தலத்தில் அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.

அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். மூலவர் அமிர்தகடேஸ்வரர், அம்பாள் அபிராமி. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இக்கோயில் அமைந்துள்ளது.

Tags : Abrami ,moon ,devotee ,
× RELATED கும்பம்