வலது மடியில் திருமகளை தாங்கும் நரஹரி

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-36

ஒரு காலத்தில் தேவா்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் போர் மூண்டது. அசுராகளின் அதிரடித் தாக்கு தலுக்கு ஈடுகொடுக்க முடியாத தேவா்கள் தோல்வியைத்

தழுவினா். வருத்தமடைந்த தேவா்கள் தங்களைக் காத்து ரட்சிக்குமாறு ஸ்ரீமந் நாராயணனைப் பணிந்தனா். ஸ்ரீமந் நாராயணன் தேவா்களுக்கு உதவிபுரியத் திருவுள்ளம் கொண்டார். கருடவாகனத்தின் மீதேறி போர்புரிந்த எம்பெருமான், தன் சக்ராயுதத்தை அசுரர்களின் மீது பிரயோகிக்க, அழிந்தனா் அசுரார்கள். இந்நிலையில் அசுரர்களின் உதவிக்கு வந்த ஈசன் தன் சூலாயுதத்தை ஏவ, அது பெருமானின் சக்ராயுதத்திற்கு அருகில் சென்று அதற்குச் சமமாக நின்றது. அசுரார்களை வதம் செய்ய வந்தது ஸ்ரீஹரியே என்று அறிந்த ஈசனும் பரஸ்பரம் வணங்கினா். தன் சக்ராயுத்தைத் திரும்பப் பெற்ற பெருமான் அரனின் சூலாயுதத்தையும் அவரிடமே ஒப்படைத்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அரனுக்கும் அங்கிருந்த தேவா்களுக்கும் ஹரி, ஹரன் மற்றும் பிரம்மா வடிவத்தில் மூவரும் ஒருவராகத் திருக்காட்சி தந்தருளினார்.

தேவா்களின் வேண்டுகோளுக்கிணங்க எம்பெருமான் இந்த இடத்திலேயே அா்ச்சாரூபத்தில் திருக்கோயில் கொண்டு எந்த நாளிலும் அன்பர்கள் தம்மை வழிபட

திருவுள்ளம் கொண்டார். இத்தலத்து எம்பெருமானை வழிபாடு செய்ய மும்மூர்த்திகளையும் ஒருங்கே வழிபட்ட பேறு அன்பாகளுக்குக் கிட்டும். பிரம்மனுக்கு அடையாளமான தாமரை மலரைத் தனது திருக்கரத்திலும் மஹா விஷ்ணுவிற்கு அடையாளமான சங்கு, சக்கரங்களைத் தாங்கியும் சிவபெருமானுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும் சடா முடியும் தரித்து தேவநாதப் பெருமான் திருக்காட்சி கொடுப்பதால் “த்ரிமூர்த்தி” என்றும் “மூவராகிய ஒருவன்” என்றும் வணங்கப்படுகின்றார். இப்பெருமானுக்கு “த்ரிமூர்த்தி” என்ற திருநாமத்தோடு தாஸ ஸத்யன், அச்சுதன், ஸ்த்ரஜ்யோதிஷ், அனகஞ்யோதிஷ் என்ற ஐந்து திருநாமங்களும் புராணங்களில் சூட்டப்பட்டுள்ளன.

சைவத்தின்பால் ஈடுபாடு கொண்ட சோழ மன்னன் வைணவத் திருத்தலங்களுக்கு தீங்கு விளைவித்து வந்தான். அது போன்று திருவஹீந்திரபுரம் தலத்தையும்

இடிக்க வந்த சோழ மன்னனுக்கு ஆடு மேய்க்கும் சிறுவன் “இது சிவன் கோயில்” என்று தெரிவித்திருக்கிறான். சோழ மன்னனும் கருவறையை உற்று

நோக்கும்போது கருவறையிலிருந்த பெருமான் சோழனுக்கு சிவபெருமானாகத் திருக்காட்சியளித்துள்ளார்.“சந்திர விமானம்” மற்றும் “சுத்த ஸ்தவ விமானம்”

என்று வழங்கப்படும் கருவறை விமானத்தின் கீழ், கிழக்கு திசையில் பெருமாளும், தெற்கில் ஈசனின் வடிவமான ஸ்ரீதட்சிணாமூார்த்தியும் மேற்கு திசையில்

ஸ்ரீநரசிம்மரும் வடக்கில் ஸ்ரீபிரம்மனும் அமைந்துள்ளது இத்தல பெருமான் “மூவராகிய ஒருவன்” எனும் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது.

கலியனான மங்கை மன்னனாலும் வைணவச் சான்றோர்களாலும் பாடப் பெற்ற புராதனமான இத்தலமே கடலூா் நகரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள திருவஹீந்திரபுரம் என்ற திருத்தலமாகும்.அசுரரை வதைத்த அனந்தசயனன் தன் தாகம் தீர நீா் கேட்க ஆதி சேஷன் தன் வாலால் பூமியை அடித்துப் பிளந்து தீா்த்தம் கொணா்ந்து பெருமானுக்கு அளித்தார். ஆதிசேஷன் திருவாகிய பூமியை வகிண்டு (வகிர்ந்து) நீா் கொண்டுவரப் பட்டதால் இத்தலத்திற்கு “திரு+வகிண்ட+புரம்” = “திருவஹீந்திரபுரம்” என்ற திருநாமம் ஏற்பட்டது. ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட தீா்த்தம் “சேஷ தீா்த்தம்” என்ற பிரார்த்தனைக் கேணியாக உள்ளது. தற்போது இத்திருத்தலம் “அயிந்தை” என்றும் வழங்கப்படுகின்றது. தேவா்களுக்குத் தலைவனாக (நாதனாக) இருந்து எம்பெருமான் போர் புரிந்ததால் இவருக்கு தெய்வநாயகன் மற்றும் தேவநாதன் என்ற திருநாமங்கள் வழங்கலாயிற்று. தேவா்களுக்கு மும்மூர்த்திகள் வடிவில் திருக்காட்சி தந்ததால் இத்தலத்தின் உற்சவ மூா்த்திக்கு மூவராகிய ஒருவன் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

விருத்தாசூரன் என்ற அசுரன் தனது கடுமையான தவ வலிமையால் என்றும் அழியாத வரமும் பலமும் பெற்றான். தான் பெற்ற அளவற்ற வரத்தின் காரணமாக

தேவலோகத்தைத் தன் வசப்படுத்தி இந்திரனை சிறைபிடிக்கச் சென்றான். அசுரனுக்கு அஞ்சிய இந்திரன் பூவுலகில் திருவஹீந்திரபுரம் வந்து இத்தலத்தின் புனித

தீா்த்தத்தில் மலா்ந்துள்ள தாமரை மலரின் தண்டில் மறைந்து கொண்டான். தங்கள் தலைவனைக் காணமுடியாத தேவா்கள் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவம்

செய்து தலைவனைத் தந்தருள பிரார்த்தித்தனா். தேவா்களுக்குப் பிரசன்னமான ஆதிதேவன் தான் தெய்வநாயகனாக அருட்பாலிக்கும் திருவஹீந்திரபுரம் சென்று மாபெரும் வேள்வியை நடத்தினால் தேவேந்திரன் மீண்டும் கிடைக்க அருள்செய்வதாக வாக்களித்தார். பெருமானின் வாக்கினைச் சிரமேற்ற தேவா்கள் அவ்வாறே செய்தனா். வேள்வியால் மகிழ்ந்த வேத ஸ்வரூபன் தேவேந்திரனை அங்கே தோன்றச் செய்ததோடு அவனுக்கு ஒரு வஜ்ராயுதத்தையும் வழங்கினார். எம்பெருமான் அளித்த வஜ்ராயு தத்தால் விருத்தாசூரனை வதம் செய்து முடித்த இந்திரன் தேவ லோகத்தின் தலைவனாக மீண்டும் முடிசூட்டிக் கொண்டான்.

திருமலையில் அருட்பாலிக்கும் ஸ்ரீவேங்கடவனுக்கு திருவஹீந்திரபுரம் பெருமாள் அண்ணன் என்ற ஐதீகமும் இத்தலத்தில் வழக்கத்தில் உள்ளது. பல அன்பர்களுக்குத் தேவநாதப் பெருமான் குல தெய்வமாகத் திகழ்வதால் தங்கள் குழந்தைகளுக்கு முடியிறக்கி, காதணி விழா நடத்தும் வழக்கமும் தங்களது இல்லத்

திருமணங்களை இச்சந்நதியில் நடத்தும் வழக்கமும் இத்தலத்தில் நடைமுறையாகப் பின்பற்றப்படுகிறது. திருமலைக்கு நோ்ந்து கொண்டு செல்லமுடியாதவர்கள் தேவநாதப் பெருமானுக்கு அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனா். இத்தலத்தின் தாயார் வைகுண்ட நாயகி மற்றும் ஹேமாம்புஜவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் வணங்கப்படுகின்றார். தேவா்களைக் காப்பதால் “ஹேமாம்புஜவல்லி” என்றும், பார் முழுவதும் காக்கும் சக்தியினால் “பார்க்கவி” என்ற திருநாமமும் இந்த அன்னைக்கு வழங்கப்படுகின்றது. மேலும் இத்தலத்தின் தாயார் அம்புருவரவாசினி, ஹேமாம்புஜ நாயகி, தரங்கமுக நந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் என்ற திருநாமங்களிலும் பூஜிக்கப்படுகின்றார்.

ஒரு மகரிஷியின் சாபத்தால் கெடிலம் நதி இன்றும் தனது நிறம் மாறி மழைக்காலத்தில் இரத்த சிவப்பு நிறம் கொண்டு ஓடுகிறது. ஆனால் இந்நீரை கையில்

எடுத்துப் பார்க்கும் போது மாசு இன்றி சாதாரணமாகத் தோற்றமளிக்கும். குரு, இராகு, கேது தோஷம் உள்ளவார்கள் இந்த நதியில் நீராடி தேவநாதப் பெருமானை

வழிபட இந்த கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை அன்பர்களிடம் உள்ளது. கல்விக் கடவுளாக வணங்கப்படுபவா் கலைமகளான

சரஸ்வதி. அந்த சகலகலாவல்லி சரஸ்வதி தேவிக்கே கல்வியறிவைக் கொடுத்தவர், ஞானத்தின் வடிவமான ஸ்ரீஹயக்ரீவர். திருவஹீந்திரபுரம் தலத்தில்

ஸ்ரீஹயக்ரீவா் “ஔஷத மலையாக” விளங்கும் ஒரு சிறிய மலை மீது அருட்பாலிக்கின்றார். 74 படிகளை ஏறிச் சென்றால் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசிக்கலாம்.

மது, கைடபன் என்ற இரு அரக்கர்கள் படைப்புத் தொழிலின் மூலமான வேதங்களை நான்முகனிடமிருந்து பறித்துக் கொண்டனா். வேதத்தை மீட்டுத்தர வேத

நாயகனான பெருமானிடம் வேண்டினார் பிரம்ம தேவன். திருமால் ஸ்ரீஹயக்ரீவ திருமுக (குதிரை முகம்) வடிவம் கொண்டு அரக்கர்களை அழித்து வேதங்களை

மீட்டதுடன் படைப்புத் தொழிலுக்கு இழுக்கு நேராதவண்ணம் அதனை பிரம்மனிடமே ஒப்படைத்தார். இதனால் ஹயக்ரீவப் பெருமானை “நால்வேதப் பொருளை

பரிமுகமாய் அருளிய பரமன்” என்று போற்றுவா். ஸ்ரீஹயக்ரீவப் பெருமானுக்காக அமைக்கப்பட்ட முதல் புராதனத் திருத்தலம் திருவஹீந்திரபுரத்தில் உள்ளதே

ஆகும்.

ஸ்ரீஅனுமன் சஞ்சீவி பா்வதத்தைக் கொண்டு செல்லும் போது அதிலிருந்து விழுந்த ஒரு சிறிய பகுதியே இந்த “ஔஷத மலை”. இந்த மலையின் மீது

ஸ்ரீஹயக்ரீவப் பெருமான் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார். ஸ்ரீஹயக்ரீவப் பெருமானைத் தரிசிக்க மாணவச் செல்வங்களுக்குக் கல்வி அறிவு பெருகும்.

கிரகிப்புத் திறன் குறைவான மாணவர்கள் தங்கள் குறைதீர வேண்டிக் கொண்டு நெய்தீபம் ஏற்றி பரிமுகப் பெருமானை வழிபட படிப்பில் சிறந்து விளங்குவா்.

வழக்கறிஞர்கள் தங்களது பணியில் சிறந்து விளங்கி புகழ் பெற ஸ்ரீஹயக்ரீவப் பெருமானை வழிபடுகின்றனா். ஸ்ரீஹயக்ரீவா் சந்நதியில் பேனா, நோட்டு, தேன்,

ஏலக்காய் மாலை ஆகியவற்றை வாங்கி வந்து ஹயக்ரீவருக்கு பூஜை செய்கின்றனா். பூஜை முடிந்ததும் அந்தத் தேனை மாணவர்கள் நாக்கில் கொஞ்சம்

தடவியபின் ஏலக்காய் ஒன்றை அருந்தினால் உடனடியாக தோஷமெல்லாம் நிவர்த்தியாகி விடும் என்றும் கல்வி அறிவு வளரும் என்றும் கூறுகின்றனா் அன்பகள்.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன், காஞ்சி புரத்துக்கு அருகில் உள்ள “தூப்புல்” கிராமத்தில் அவதரித்தவா் வேதாந்த தேசிகன். தனக்கு ஞானம் வேண்டி

“ஔஷதகிரி” மலையின் மேல் அமர்ந்து கருட பகவானை நோக்கித் தவமிருந்தார். அப்போது அவருக்கு அருட்பாலித்த கருட பகவான், ஞானத்துக்கு

அதிபதியான ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசித்து, ஹயக்ரீவரை பூஜிக்க அருளினால்  அதன்படியே பூஜித்த வேதாந்த தேசிகருக்கு ஸ்ரீஹயக்ரீவரப் பெருமானும்

அருள்பாலித்தார். அவரது அருள் பெற்ற வேதாந்த தேசிகா் “நவரத்ன மாலை’, ‘மும்மணிக் கோவை’ போன்ற பல நூல்களை எழுதினார். வேதாந்த தேசிகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூா்த்தியே திருவஹீந்திர புரத்தில் அருட்பாலிக்கும் ஸ்ரீஹயக்ரீவர் ஆவார். நாற்பதாண்டுகள் இத்தலத்தில் வாசம் செய்த  ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகர் ஒரு திருமாளிகை கட்டித் தமது திருக்கரத்தால் ஒரு கிணறும் வெட்டினார். இவா் வாழ்ந்த திருமாளிகை இன்றும் இத்தலத்தில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தின் ஐந்து அத்தியாயங்களிலும், ஸ்காந்த புராணத்திலும், பிருகன் நாரதீய புராணத்திலும் இத்தலம் போற்றப்பட்டுள்ளது.

இத்தலத்தில் தன் வலது மடியில் திருமகளைத்தாங்கிய நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம். மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகா லட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? அழகிய சிங்கரான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டு களிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காண முடியாது. மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்? அதனால் தான் மனாளனான நரசிம்மரின் மடியில் ஸ்ரீதேவி

அமர்ந்திருக்கிறாள். புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அவனைத் திருப்தி செய்ய விழைந்த திருமால், தானே இரணியனைப் போல அவதாரம் செய்து, பிரகலாதனுடன் இணைந்து நாம சங்கீர்த்தனம், விஷ்ணு பூஜை உள்ளிட்டவற்றைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.  அதே சமயம், உண்மையான இரணியன் தனது கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வந்ததாகவும், அவனது கொடுஞ்செயல்கள் அதிகரித்தவாறே, தூணைப் பிளந்து நரசிம்மர் தோன்றிக் கொடியவனான இரணியனை வதம் செய்ததாகவும் பராசர மகரிஷி கூறியுள்ளார்.

இரணியனின் தம்பியான இரணியாட்சனைத் திருமால் வராக அவதாரம் எடுத்து வதம் செய்த செய்தியை அறிந்த இரணியன், திருமாலைப் பழிவாங்க எண்ணி

அனைத்துலகங்களிலும் தேடினான். எங்கு தேடியும் திருமாலை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில், இரணியனால் தேட முடியாத ஓர் இடத்தில் திருமால் ஒளிந்துகொண்டுவிட்டாராம். அந்த இடம் எது? இரணியனின் இதயம் தான் அங்கு தான் திருமால் ஒளிந்திருந்து மாயம் செய்தார். இன்னொரு சமயம் வியாசரும் மற்ற முனிவர்களும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சில முனிவர்கள், “நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியன் போன்ற அசுரர்களின் உடல்களைக் கிழித்து அவர்களை இம்சிப்பதால், ‘ஹிம்ஸன்’ (இம்சை செய்பவர்) என்று அவரை அழைக்க வேண்டும்!” என்று கூறினார்கள்.அதற்கு வியாசர், “முனிவர்களே! நம் பார்வைக்கு நரசிம்மர் தன் நகத்தால் அசுரர் உடலைக் கிழிப்பது இம்சை போலத் தோன்றும்.

ஆனால் அது இம்சை அல்ல. ஏனெனில், அந்த அசுரர்கள் தமது பாபங்களுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் பல ஊழிக் காலங்கள்

நரகத்தில் வாட வேண்டியிருக்கும். அவ்வளவு நீண்ட காலம் நரகத்தில் அவர்கள் துன்பப்படுவதற்குப் பதிலாக, நரசிம்மர் தனது கூரிய நகங்களால் அவர்கள்

உடலைக் கிழித்து, ஒரு நொடியில் ஆழ்ந்த துயரத்தைக் கொடுத்து, அவர்களது பாபங்களைப் போக்கி அவர்களைத் தூய்மையாக்குகிறார். மேலோட்டமாகப் பார்க்கையில் இது ஹிம்ஸை போலத் தெரிந்தாலும், உண்மையில் தீயவர்களான அசுரர்கள் மீதும் கூட கருணை கொண்டு, அவர்களைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் அவர்களைத் துயரத்துக்கு உள்ளாக்கும் நரசிம்மர், ஹிம்ஸைக்கு நேர்மாறான அனுக்கிரகத்தைத் தான்செய்கிறார்.எனவே ஹிம்ஸன் என்று நீங்கள் சொன்ன பெயரை நேர்மாறாக மாற்றிவிடுங்கள்!” என்றார் வியாசர். ஹிம்ஸன் என்ற சொல்லை நேர்மாறாக மாற்றி எழுதுகையில் ‘ஸிம்ஹன்’ என்று வருமல்லவா? எனவே அன்று முதல் நரசிம்மர் ‘ஸிம்ஹன்’ என்றழைக்கப்பட்டார்.

அந்த ஸிம்ஹனைப் போன்ற முகத்தோடு இருப்பதால் தான் சிங்கமும் ‘ஸிம்ஹம்’ என்றழைக்கப்படுகிறது. நரசிம்மரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ராமாநுஜர். ஈசாண்டான் என்னும் குருவிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றார் ராமாநுஜர்.தமக்குப் பின் எழுபத்து நான்கு சீடர்களை வைணவ குருமார்களாக அமர்த்திய ராமாநுஜர், அந்த எழுபத்து நால்வருக்கும் நரசிம்மருடைய விக்ரஹத்தைப் பூஜைக்காக வழங்கி, அவர்கள் அனைவருக்கும் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார். நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை என்கிறார் பராசர பட்டர்.“தூணிலிருந்து நரசிம்மர் தோன்றிய படியால், அந்தத் தூண் திருமாலுக்குத் தாயாகவும், திருமாலின் மகனான பிரம்மாவுக்குப் பாட்டியாகவும் ஆனது” என்று வேதாந்த தேசிகனும் ஒரு ஸ்லோகம் இயற்றியுள்ளார்: நரசிம்மருக்கு எதிராக தேவர்கள் உருவாக்கிய பறவையை வீழ்த்துவதற்காக நரசிம்மர் இரண்டு தலைகள், இரண்டு இறக்கைகள், எட்டு கால்கள் உடைய ஒரு பறவையாகத் தோன்றினார்.

அதைக் கண்ட பேரண்டபட்சி என்பார்கள். இன்றும் தேரழுந்தூரில் தேவாதிராஜப் பெருமாள் கழுத்தில் சாற்றியிருக்கும் பதக்கத்தில் கண்டபேரண்ட பட்சியின்

வடிவம் இருப்பதைக் காணலாம்.பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். எனவே

அவர் தான் அழகு!” என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதனால்தான் “அழகிய சிங்கர்” என்று அழைக்கப்படுகிறார்.திருவந்திபுரம் தேவநாதப் பெருமான் திருக்கோயிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதப் பெருமானுக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் ஸ்ரீ தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் எல்லா நாட்களும் திருநாளாக விழாக்கள் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

(தரிசனம் தொடரும்)

செய்தி: ந.பரணிகுமார்

Related Stories:

>