×

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் 500 பக்க அறிக்கையை அரசிடம் தாக்கல்: 5 ஆண்டுகளுக்கு பிறகு தகவல்கள் வெளியாக உள்ளதால் பரபரப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஓரிரு நாளில் அரசிடம் 500 பக்கம் அறிக்கையை தாக்கல் செய்கிறது.  முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 158 பேரிடம் விசாரணையை நிறைவு செய்துள்ளது. சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக மொழியாக்கம் செய்து பதிவு செய்வதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்ற அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது.  பின்னர் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழுவை அமைத்து ஆணையம் தனது விசாரணை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் இறுதியாக ஆணையம் அமைக்க காரணமான ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை கொடுத்தார். பல மருத்துவர்களிடமும் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது. இதன் பின்பு நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தினார். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 4ம் தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது.இந்த நிலையில், இன்று(திங்கட்கிழமை) காலை முதல்வர் அலுவலகத்தில் ஆணையம் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க நேரம் கேட்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து  அரசு கொடுக்கும் நேரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 500 பக்கங்கள் கொண்ட  இறுதி அறிக்கையை  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு மருத்துவ சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளது. அதனால் ஆறுமுகசாமி ஆணையம் எவ்வாறான அறிக்கையை அரசுக்கு கொடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….

The post ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் 500 பக்க அறிக்கையை அரசிடம் தாக்கல்: 5 ஆண்டுகளுக்கு பிறகு தகவல்கள் வெளியாக உள்ளதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Arumukasamy Commission ,Jayalalithah ,Chennai ,Arumukasamy Inquiry Commission ,Arumakusamy Commission ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?