×

துளசியும் துளசி தீர்த்தமும்

1. துளசி தீர்த்தம் என்பது என்ன?

தீர்த்தம் என்றால் தண்ணீர். பெருமாளின் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் புனித நீரில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், துளசி உள்ளிட்டவற்றைக் கலந்து அதைப் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பார்கள். இத்தகைய புனிதநீரைக் கொண்டு இறைவனுக்கு
* அர்க்யம் - கரங்களை அலம்புதல்,
* பாத்யம் - திருப்பாதங்களை அலம்புதல்,
* ஆசமனீயம் - வாய் கொப்புளித்தல்
போன்ற உபசாரங்கள் செய்யப்படும்.

இவ்வாறு இறைவன் திருக்கரங்கள், திருவடிகள் உள்ளிட்டவற்றை அலம்பிய, வாய் கொப்புளித்த அந்தப் புனித நீரை நாம் உட்கொள்ளும் போது, நாம் தூய்மை அடைகிறோம். நமக்கு இறைவனின் அருளும் புண்ணியமும் கிடைக்கிறது. அதற்காகத்தான் துளசி தீர்த்தம் பெருமாள் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

2. துளசி தீர்த்தத்தை எவ்வாறு வாங்கிக் கொள்ள வேண்டும்?

இடக்கரத்தின் மேல் வலக்கரத்தை வைத்து, வலக்கரத்தின் உள்ளங்கையைக் குழித்தபடி மூன்று முறை தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாங்கிக் கொள்ளுகையில், புனித தீர்த்தம் கீழே சிந்தாமல் இருப்பதற்காக, ஒரு துணியை வலக்கரத்தின் கீழே வைத்துக்கொள்ள வேண்டும். துளசி தீர்த்தத்தை எப்போதுமே நின்று கொண்டுதான் வாங்கி உட்கொள்ள வேண்டும். அமர்ந்தபடி உட்கொள்ளக் கூடாது. தீர்த்தம் உட்கொண்டபின் கைகளை அலம்பிக் கொள்ளக்கூடாது.

3. பெருமாளின் அர்ச்சனையில் ஏன் துளசி பயன்படுத்தப் படுகிறது?

பிருந்தா என்ற பெண் திருமாலிடத்தில் மிகுந்த பக்தியுடன் வாழ்ந்து வந்தாள். மகாலட்சுமியின் அம்சமாகவே அவள் கருதப்படுகிறாள். அந்த பிருந்தா தனது அடுத்த பிறவியில் துளசிச் செடியாகப் பிறக்கும் படி திருமால் அருள்புரிந்தார். அல்லது, பாற்கடலில் இருந்து வந்த அமுதக் கலசத்தைக் கையில் ஏந்தியபடி, திருமாலின் அவதாரமான தன்வந்தரி ஆனந்தக் கண்ணீர் சிந்தியதாகவும், அந்தக் கண்ணீர் அமுதத்துடன் கலந்து துளசி உருவானதாகவும் சொல்லப்படுகிறது. திருமாலின் திருமேனியை அலங்கரிக்க வேண்டும் என்ற ஆசையுடன் துளசி தவம் புரிந்தாள். அவளது தவத்துக்கு உகந்த திருமால், அவளது அந்த ஆசையை நிறைவேற்றினார். துளசியைக்கொண்டு செய்யப்படும் அர்ச்சனைகளுக்குத் திருமால் விரைந்து அருள்புரிவார்.

4. பெருமாள் கோயில்களில் வழங்கப்படும் துளசியை எப்படிப் பெற்றுக்கொள்ள வேண்டும்?

துளசி தளங்களை அர்ச்சகர் வழங்கும் போது, இடக்கையின் மேல் வலக்கையை வைத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். சில துளசி தளங்களை உட்கொண்டு விட்டு, மீதமுள்ளவற்றைக் காதில் அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தலைமுடியில் துளசியை அணியக் கூடாது. திருமால் ஒருவர்தான் தலைமுடியில் துளசியை அணியலாம்.

5. வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடலாமா?

நிச்சயமாக. வீட்டில் துளசி மாடம் வைத்து, காலையும் மாலையும் விளக்கேற்றியும், பிரதட்சிணம் செய்தும் வழிபடலாம்

6. வீட்டுப் பூஜைக்காகத் துளசி மாடத்திலிருந்து துளசித் தளங்களைப் பறிக்கலாமா?

துளசி மாடத்திலிருந்து துளசி தளங்களைப் பறிக்கக்கூடாது. அதற்கென்று தனியாக வேறு துளசிச் செடி வளர்க்க வேண்டும். துளசியைப் பறிப்பதற்கு முன்,துளசி அம்ருதஜன்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே கேசவார்த்தம் லுனாமி த்வாம் வரதா பவ சோபனே - என்ற ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். “திருமாலுக்குப் பிரியமான துளசி தேவியே! திருமாலுக்கு அர்ப்பணிப்பதற்காக உன்னைப் பறிக்கிறேன்! நீ எனக்கு அருள்புரிவாயாக!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். நகம் படாமல் துளசியைப் பறிக்க வேண்டும்.

7. துளசியைப் பறிக்க வேறு ஏதாவது நியமங்கள் உண்டா?

ஆம். பகல் 12 மணிக்கு முன் பறித்து விட வேண்டும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பறிக்கலாகாது. அமாவாசை, பௌர்ணமி, துவாதசி போன்ற திதிகளில் பறிக்கக் கூடாது. மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் செய்யும் நாட்கள் முதலிய தினங்களிலும் பறிக்கக் கூடாது.

8. துளசி பறிக்கக் கூடாது என விலக்கப்பட்ட நாட்களில் துளசி இல்லாமல் வீட்டில் பூஜை செய்யலாமா?

துளசிக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது, நாம் முன்பே பறித்துச் சேமித்து வைத்திருக்கும் துளசியை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே துளசி பறிக்கக் கூடாத நாட்கள் வரும்போது, நாம் முன்பே பறித்து வைத்திருந்த துளசியைப் பயன்படுத்தலாம். வாடிய துளசியானாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்பார் திருமால். அவ்வாறு பறித்து வைக்காத பட்சத்தில், வீட்டுப் பூஜைக்காகச் சந்தனம் அரைக்கும் போது, அத்துடன் துளசிக் காம்பையும் இணைத்து அரைத்தால், துளசியின் வாசனையை முகர்ந்து திருமால் மகிழ்வார். அதுவும் இயலாத பட்சத்தில், நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், பாலனாய் ஏழுலகுண்டு பரிவின்றி ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் தாளிணை மேல் அணி தண்ணந் துழாய் என்றே மாலுமால் வல்வினையேன் மடவல்லியே என்று தொடங்கும் பத்துப் பாடல்களைப் பெருமாள் முன் பாராயணம் செய்யலாம். துளசியைப் பற்றியதான இப்பத்துப் பாடல் களையும் நாம் படித்தால், திருமாலுக்குத் துளசியைச் சமர்ப்பித்ததற்கு நிகராகும்.

9. துளசியின் மருத்துவக் குணங்கள் என்னென்ன?

துளசி காய்ச்சல், சளி, கபம், விஷக்கடி, தலைவலி ஆகியவற்றைப் போக்கும் என்று சொல்லப்படுகிறது. சில ஆயுர்வேத நூல்களில் சருமம் பொலிவு பெறுதல், பருக்கள் மறைதல், கேசத்தின் ஆரோக்கியம், ஜீரண சக்தி, இளமையாக இருத்தல் போன்றவற்றுக்கும் கூட துளசி பயன்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

தொகுப்பு: திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Tulsi ,Tulsi Theertham ,
× RELATED மினி லாரி மோதி உடைந்த மின்கம்பம் பள்ளிகொண்டா துளசி நகரில்