×

நாட்டுப்புற மரபில் ஏழு கன்னிமார்

(Worship of virgins in folk tradition)

பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி, நரசிம்மி, வாராகி, சாமுண்டி என்று ஏழுபேரும் சப்த கன்னியர் ஆவர். இவர்கள் சிவதலங்களில் சுவாமி சந்நதியின் முதல் பிராகாரத்தில் வலது காலைத் தொங்கவிட்டு இடக்காலை மடித்துவைத்து அமர்ந்த நிலையில் சந்நதி கொண்டிருப்பார்கள். இவர்களில் பிராமி அம்பிகையின் முகத்தில் இருந்து தோன்றியவள். பிரம்மனின் மனைவியும் ஆவாள். அதனால் பிரம்மனுக்குரிய அன்ன வாகனம் இவளுக்கும் உண்டு. இரண்டாமவள் மகேஸ்வரி தேவியின் தோளில் இருந்து உதித்தவள்.

சிவனின் மனைவி என்பதால் இவளுக்குரிய வாகனம் எருது. அடுத்தவளான கவுமாரி முருகனின் மனைவியும் ஆவாள் இவளுக்குரிய வாகனம் மயில். அடுத்தவள் வைஷ்ணவி தேவியின் கைகளில் இருந்து தோன்றியவள். இவள் விஷ்ணுவின் மனைவி என்பதால் இவளது வாகனம் கருடன் ஆகும். இந்திராணி இந்திரனின் மனைவி. இவளை வணங்கினால் வாழ்க்கைத் துணையும் தாம்பத்தியமும் சிறப்பாக அமையும் இவளுக்கு இவளது கணவன் இந்திரனின் வெள்ளை யானையே வாகனமாக அமைகிறது. இனி, எஞ்சியிருக்கும் வாராகி, சாமுண்டி ஆகிய இருவருக்கும் பொருத்தமான ஜோடியாக ஆண் தெய்வங்கள் இல்லை. அதனால் வாராகிக்கு சிவன், ஹரி, சக்தி என்ற மூவரையும் சொல்கின்றனர்.

இவள் முரட்டுக் குணம் படைத்தவள். இவளது வாகனம் எருமைக் கடா ஆகும். இவள் கைகளில் உலக்கையும் கலப்பையும் வைத்திருப்பாள். இவள் தவறு செய்தவர்களைத் தண்டிப்பதால் இவளைத் தண்டினி என்றும் அழைத்தனர். இவள் பகையை முற்றாக அழிக்கும் வீரமங்கை. வெற்றித் தேவதை. இவளை சிம்ம வாகினி என்பாரும் உண்டு.

ஒரு வரிசையில் ஏழாவதாக நரசிம்மியைச் சொல்வர். சிலர் நரசிம்மிக்குப் பதிலாக சாமுண்டியை சேர்த்துக் கொள்வர். சாமுண்டிக்கு பிடாரி என்றொரு பெயரும் உண்டு. ஏரிக்கொரு ஐயனாரும் ஊருக்கு ஒரு பிடாரியும் வேண்டும் என்பது நாட்டுப் புற வழக்காகும். ஏரியை காக்கும் அய்யனாரைப் போல ஊரைக் காக்கும் காவல் தேவதை பிடாரி ஆவாள். பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் பிடாரிக்கு கோயில்கள் இருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. மைசூரில் சாமுண்டன் என்ற அசுரனைக் கொன்ற தேவிக்கு சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் மலை உச்சியில் பிரசித்திப்பெற்ற கோயில் உள்ளது.

கார்த்திகைப் பெண்கள்

இந்தியாவில் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்பட்ட சப்தகன்னியர் வழிபாடு வேத காலத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்ததாக அறிகிறோம். தாந்திரிக சமய மரபின் சின்னங்களாக பெண் தெய்வங்களின் உருவச் சிலைகள் சிந்து சமவெளியில் கிடைத்துள்ளன. இவை குழந்தைப் பேறுக்குரிய பெண் உறுப்புகளைப் பெரியளவில் கொண்டுள்ளன. இதன் மிச்ச சொச்சமாகத் தான் இக்கன்னியரைக் குழந்தை பிறப்பு மற்றும் குழந்தையை காக்கும் காவல் தெய்வங்களாக போற்றி வழிபடும் முறை தோன்றியது. இதன் அடியாக தோன்றிய கதைதான் குமரனை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் புராணக்கதை ஆகும்.

Sarah L Schastok என்பவர் வடநாட்டில் குமார குப்தா ஆட்சிக்காலத்தில் அதாவது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கந்தன் வழிபாடு தனி வழிபாடாக வளர்ந்தபோது சப்த கன்னியரைக் கந்தனுக்குத் தாய்மாராகக் கற்பித்தனர் என்றார். வாராகி நீங்கலாக மீதி ஆறுபேரும் கார்த்திகைப் பெண்கள் எனப்பட்டனர். இவர்கள் வானத்தில் நட்சத்திரங்கள் ஆக்கப்பட்டனர் என்றும் கந்த புராணம் தொன்மக் கதை ஒன்றைத் தெரிவித்தது. கிபி ஏழாம் நுற்றாண்டு முதல் ஒன்பதாம் நுற்றாண்டு வரை சப்த கன்னியரை சப்த ரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்துடன் (plaeides) தொடர்பு படுத்தி பேசும் வழக்கு இருந்துவந்தது. சங்க இலக்கியத்தில் அறு மீன் என்ற செய்தி காணப்படுகிறது.

அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்,
செல் சுடர் நெடுங்கொடி போல
(நற்றிணை 202: 9-10).

ஆனால், இந்த ஆறு நட்சத்திரங்கள் கொண்ட கூட்டம்தான் சப்த கன்னியர் என்றோ கார்த்திகைப் பெண்கள் என்றோ கூறவில்லை. கார்த்திகை முழு நிலவன்று விளக்கீடு விழா நடக்கும் என்ற தகவல் காணப்பட்டாலும் அவ்விழா கார்த்திகைப் பெண்களுக்காக கந்தனின் பிறப்புக்காகக் கொண்டாடப்பட்டதாகக் தகவல்கள் கிடையாது. திருமுருகாற்றுப்படை காலத்தால் பிந்தியது என்பதால் அதைச் சங்க இலக்கியக் கணக்கில் சேர்க்கக் கூடாது. சங்க இலக்கியத்தில் ஆறு பெண்களும் கந்தனை வளர்த்தனர் என்ற தகவல் இல்லை. வானில் ஆறு மீன்கள் கொண்ட விண்மீன் கூட்டம் இருந்தது என்ற தகவல் பதிவாகியுள்ளது.

பவுத்தம் பரவியிருந்த காலத்தில் சப்த கன்னியரை இந்திரனின் சகோதரியாக்கி பவுத்த சமயம் உறவு கொண்டாடியது. சைவம் எழுச்சி பெற்ற காலத்தில் சப்த கன்னியரின் முக்கியத்துவத்தை உணர்ந்து சாமி சந்நதியின் முதல் பிராகாரத்திலேயே தனிச் சிறப்பளித்து அங்கேயே இடம் பெறச் செய்தனர். மற்ற மாநிலங்களில் சப்த கன்னியர் வழிபாடு மன்னர்கள் பௌத்த சமயத்தை ஆதரித்தபோது சப்த கன்னிகள் அரசவைத் தெய்வங்களாகப் (ROYAL DEITIES) போற்றப்பட்டனர். நான்காம் நூற்றாண்டில் மத்திய பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட குகைக் கோயிலில் ஏழு கன்னியர்க்கான உருவச்சிலைகள் குகையின் சுவரில் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை சப்தமாதர் வழிபாடு வெற்றித் தேவதைகளின் வழிபாடாக விளங்கியது.

தேவி புராணம் சப்த கன்னியர் இந்திரனின் சகோதரியர் என்றும் இவர்களை வணங்கினால் சக்தியும் புத்தியும் கிடைக்கும் என்றும் கூறுகிறது. இவர்களின் அடையாளங்களாக அன்னம், எருமை, மயில், சங்கு, சக்கரம், யானை மற்றும் எலும்புக் கூடு கருதப்பட்டன. சில மாநிலங்களில் அமாவாசையன்று கன்னியர் வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இவர்கள் வயிற்றில் இருக்கும் சிசுவையும் பிறந்த குழந்தையையும் அழிக்கும் கடவுளாக கருதப்பட்டதால் இளம் தாய்மார் இவர்களை அச்சத்தோடு வழிபட்டு வந்தனர். கிராமங்களிலும், திறந்த வெளி இடங்களில் வெறும் கல் பீடங்கள் அல்லது கல் தூண்கள் வைத்து இவ்வழிபாடு நடந்துவந்தது.

உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் சப்தகன்னியர் வழிபாடு இருந்தது. உதயகிரி குகை வாசலில் சப்தகன்னியருக்குக் கோயில்
இருப்பதை காணலாம். நோயுற்ற மன்னர்கள் சுகம் பெற வேண்டி, இளைஞர்கள் சப்தகன்னியர் கோயில் முன்பு தீக் குளித்து இறந்ததாக ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாணப்பட்டரின் ஹர்ஷ சரிதம் குறிப்பிடுகின்றது. பாணப் பட்டரின் காதம்பரி, மிருச்சிகடிகம் ஆகியன நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் அல்லது முச்சந்தியில் சப்த கன்னியருக்குக் கோயில் இருக்கும். அங்கு படையல் போடுவர் என்ற தகவல்களைத் தெரிவிக்கின்றன. சப்தகன்னியர் வழிபாட்டில் ஆடை, இறைச்சி, மது ஆகியன படைக்கப்படுவதுண்டு.

சப்த கன்னியரில் மூத்தவளை முத்தாலம்மன் என்ற பெயரில் வணங்குகின்றனர். உத்தமபாளையம், மல்லிங்காபுரம் என்ற ஆனைமலையன்பட்டி என்ற கிராமத்தில் ‘அன்று தோன்றி அன்றே அழியும் முத்தாலம்மனுக்கு’ வழிபாடு நடக்கும். முத்தாலம்மன் என்றால் மூத்தவள், இச்சொல் முத்தியாலு என்ற தெலுங்கு சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். தமிழகத்தில் நாயக்கர்கள் அரசாண்ட காலத்தில் பெண் தெய்வங்களின் எண்ணிக்கை கிராமங்களில் பெருகியது அவ்வாறு புதிதாய்த் தோன்றிய தெய்வங்களுக்கும் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்து வந்த தெய்வங்களுக்கும் தெலுங்குப் பெயர்கள் சூட்டப்பட்டன.

பெரிய நாயகி, முத்தாலம்மன், பச்சை நாச்சி, நாச்சியாரம்மன் என்ற பெயர்களில் நாச்சி, நாச்சியார், முத்தியாலு என்ற தெலுங்குப் பெயர்களாக அமைந்தன முத்தாலம்மன் வழிபாடு முத்தாலம்மனின் கதையில் அவள் கூடப் பிறந்த ஆறு தேவகன்னியராம் ஒருசமயம் பூலோகம் வந்த போது தாகமெடுத்த காரணத்தால் ஒருவரின் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தனர்.

இதனால் தேவலோகத்தின் அரசனான இந்திரனால் சபிக்கப்பட்டு தேவலோகத்திற்கு திரும்பிப்போக இயலாமல் இங்கேயே தண்ணீர் தந்தவர் வீட்டில் தங்கி அந்த இனத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்து வாழ்ந்தனர். அவர்களில் இவள் மட்டும் அந்த இனத்து ஆணோடும் வாழ விரும்பாமல் வேறொரு இளைஞனைக் காதலித்தாள். இதை அறிந்த அவளுடைய கணவன் பச்சைக்கள்ளிக் கம்பால் அவளை அடித்துக் கொன்றுவிட்டான்.

இறந்துபோன முத்தியாலு அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரின் கனவில் வந்து தன்னைத் தெய்வமாக வைத்து வழிபடும் படியும் அவ்வாறு வணங்கி வந்தால் அந்த இனத்தவரை நல்லபடியாகக் காப்பதாகவும் கூறினாள். அன்று முதல் அவர்கள் இப்பெண்ணுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் வழிபாட்டு விழா எடுக்கின்றனர். துணைப் பூசாரியாக அவளது கணவர் இனத்தைச் சேர்ந்தவரை அழைத்து வந்து கோயிலில் சமபந்தி விருந்து வைத்து அம்மனுக்குத் தாலி கட்டச் சொல்வர்.

பின்பு மாலையில் கணவன் பூசாரி அம்மனை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று போய் அடித்து சிலையை உடைத்துப் போட்டு விட்டு ஊருக்குள் திரும்பி விடுவார். அப்போது அம்மனாக உருவமைப்பு செய்த பொம்மைக்கு வாயில் வாய்க்கரிசியும் போடுவார். காலையில் முத்தாலம்மன் உருவத்தை செய்து அதை அடித்துக் கொன்று விடுவதால் இந்த தெய்வத்தை அன்று தோன்றி அன்று அழியும்
அம்மன் என்று அழைப்பர்.

முத்தியாலு அம்மனுடன் பூலோகத்துக்கு வந்த ஆறு பேர் பட்டாளம்மன், காளியம்மன், மாரியம்மன், மந்தையம்மன், துர்க்கை அம்மன் மற்றும் சவுடம்மன் ஆவர். இவர்களுக்கென்று தனி வழிபாடோ தனி கோயில்களோ இல்லை. இந்த ஊரில் முத்தாலம்மனுக்கு மட்டுமே தனிக்கதையும் வழிபாடும் உள்ளது.சப்த கன்னியருக்கு ஏழு ஊரில் கோயில்சப்த கன்னியர் ஏழுபேரில் மூத்தவளுக்கு மட்டுமே கதை இருந்தாலும் ஏழு பேரும் தனித்தனியாக ஏழு ஊர்களில் வணங்கப்பட்டு வரும் வழக்கமும் உண்டு. பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இக்கோயில்கள் காணப்படுகின்றன. பார்வதி, பட்டத்தாள், அருந்தவம், பூவாள், காத்தாயி, பூங்காவனம், பச்சையம்மாள் ஆகிய ஏழு பேரும் சகோதரியர் ஆவர். இவர்கள் பொதிகை மலையின் அடிவாரத்தில் ஒரு விவசாயிக்கு மகள்களாகப் பிறந்து தினமும் சிவ பூஜை செய்து வாழ்ந்து வந்தனர்.

சகோதரிகளின் பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான் ஒரு கட்டிளங் காளையைப் போல் வந்து இப்பெண்கள் மீது தனக்கு இருக்கும் மோகத்தைத் தெரிவித்தார். எல்லாப் பெண்களும் பயந்து காட்டுக்குள் ஓடிவிட்டனர். பின்பு இவர்கள் ஏழு பேரும் ஒன்றுசேர ஒரு வருடம் ஆயிற்று. அப்போது மூத்தவள் பார்வதி மட்டும் ஒரு குழந்தையோடு வந்தாள். அவர்கள் இது யார் குழந்தை என்று கேட்டதற்கு அன்று வந்து நம்மிடம் வம்பிழுத்தானே அவனிடம் நான் சிக்கிக் கொண்டேன்.

அவன் என்னுடன் வல்லுறவு கொண்டதால் இக்குழந்தை பிறந்தது என்றாள். சகோதரிகள் அக்காளை நம்பாமல் நிரூபித்துக் காட்டு என்றனர். பார்வதி அழுதுகொண்டே தனது குழந்தையுடன் தீக் குளித்தாள். அப்போது சிவபெருமான் காட்சியளித்து ஏழு பேரையும் ஆட்கொண்டார். ‘‘என் மீது பக்தி கொண்ட உங்கள் ஏழு பேரையும் மக்கள் கோயில் கட்டி வணங்குவார்கள்’’ என்ற வரமும் அளித்தார்.

பார்வதிக்கு சன்னாசி நல்லூரிலும், பட்டத்தாளுக்கு புலியூரிலும், அருந்தவத்துக்கு காளிங்கராய நல்லூரிலும், பூவாளுக்கு சித்தூரிலும், காத்தாயிக்கு வெங்கநூரிலும், புன்காவந்தடுக்கு அரகண்ட நல்லுரிலும், பச்சையம்மனுக்கு குமாரையிலும் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இவர்களுக்குத் துணையாக பூமாலையப்பர், செம்மலையப்பர், ராயப்பர், கருப்பையா, முத்தையா போன்ற ஏழு முனிகள் துணைக்குக் காவலாக இருப்பார்கள் என்றும் சிவ பெருமான் சப்தகன்னியருக்கு வரமருளினார். அவர்களும் இப் பெண் தெய்வங்களோடு கோயில் கொண்டுள்ளனர்.

நாட்டுப்புறத் தெய்வக் கதைகளில் வழங்கும் ஒரு அக்காளின் கதை அவள் கூட இருந்த ஆறு தங்கைமார் என்பது பழைய சப்த கன்னியருடன் தொடர்புடையது அல்ல என்றாலும் பாதிக்கப்பட்ட ஒருத்தியின் கதைக்குத் தெய்வத்தன்மை ஏற்றுவதற்காக (divinisation) ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள செல்வாக்கு மிகுந்த சப்த கன்னியர் கதையுடன் இவளது கதையையும் சேர்த்து இணைத்துவிடுகின்றனர். ஏழு என்ற எண்ணிக்கைக்காக ஏழு பேர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர். இது போன்ற ஏழு பேர் கதை நாட்டுப்புற தெய்வங்களின் வழக்கில் ஏராளமாக உண்டு. சில ஊர்களில் அண்ணன் தங்கை ஏழு பேர் என்றும் கதைகள் வழங்குகின்றன. கதை ஒருவருடையது என்றாலும் ஏழுபேராக அதை வளர்ப்பதற்கு காரணம் சப்த கன்னியர் பெற்றிருந்த செல்வாக்கு ஆகும்.

பெருங் கோயில்களில் சப்தகன்னியர்சில சிவன் கோயில்களில் சப்தகன்னியர் ஒவ்வொருவருக்கும் தனிக்கோயில் இருந்த காலமும் உண்டென்பர். இப்போது அவற்றில் சில மட்டுமே நடைமுறையில் வழிபாட்டில் உள்ளது. நாகப்பட்டினம் அருகே தருமபுரம் என்ற ஊரில் இந்திராணிக்கு தாழமங்கை என்ற பெயரில் கோயில் உண்டு. தாழமங்கை இருக்கும் இக்கோயிலை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் என்று அழைப்பர். இந்திராணிக்கு (தாழமங்கைக்கு) யானைக் கொடி, யானை வாகனம் என்று இந்திரனுக்குரிய சிறப்புகள் உண்டு. இவளை ‘‘அகத்தே ஆயிரம் கண்ணுடையாள்’’ என்றும் கூறுவர். ராஜராஜ சோழன் கட்டுவித்த தஞ்சை பெரிய கோயிலில் சப்தகன்னியரில் ஒருவரான வாராகிக்கு தனிக்கோயில் உண்டு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்திர சூடேஸ்வரர் கோயிலில் திருச்சுற்றில் சப்தகன்னியர் கோயில் காணப்படுகிறது.

பெண்ணேஸ்வரர் மடத்தில் உள்ள பெண்ணேஸ்வரர் கோயிலில் திருச்சுற்றில் சப்த கன்னியருக்கு சிற்றாலயம் ஒன்றுண்டு. ஈரோடு அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டையில் காவிரியின் நடுவே கன்னிமார் திட்டு என்ற இடத்தில் ஏழு கன்னியரும் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் முன் உதித்த அம்மன் என்ற பெயரில் ஒரே கல்லில் ஏழு கன்னியரின் சிலையும் காணப்படுகின்றது. திருச்சியில் பாளையம் பஜார் என்ற இடத்தில் சப்த கன்னியருக்கு சிற்றாலயம் ஒன்று உண்டு.

பண்ருட்டி அருகே நெல்லிக்குப்பம் என்ற ஊரில் செல்லியம்மன் கோயிலில் வாராகிக்குத் தேய்பிறை பஞ்சமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவர்கள் யட்சிகள் என்றும் அச்சுறுத்தும் தேவதைகள் என்றும் பின்னர் காலப்போக்கில் கருத்தும் நம்பிக்கையும் மாற்றம் பெற்றதால் சப்தகன்னியர் வழிபாடு கிராம வழிபாடாக சுருங்கிப்போயிற்று.

Tags : virgins ,
× RELATED திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள்