மும்பை: பாலிவுட் நடிகர்கள் பலர் மதுபான தொழிலில் இறங்கி கோடிகளில் சம்பாதித்து வருகிறார்கள். இதில் நடிகைகள் பிரியங்கா சோப்ராவும் ஷில்பா ஷெட்டியும் அடங்குவர். ஷாருக்கான் தனது மகன் ஆர்யன் கான் பெயரில் டியவொல் என்ற ஓட்கா நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் மும்பையில் பார் ஒன்றையும் ஆர்யன் கான் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி வருவாயை ஷாருக்கான் குடும்பம் சம்பாதித்து வருகிறது. பிரியங்கா சோப்ரா 2019ல் வில்லா ஒன் என்ற விஸ்கி பிராண்டை தனது கணவர் நிக் ஜோன்ஸுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இதன் மூலம் அவர் ஆண்டுக்கு 100 கோடி வரை சம்பாதிப்பதாக சொல்லப்படுகிறது. தீபிகா படுகோனின் கணவரும் பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங் ஏபிடி என்ற மதுபான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
மதுபான விளம்பரங்களில் இவர் நடிக்காவிட்டாலும் அந்நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வரை வருவாய் பெறுகிறார். மற்றொரு பாலிவுட் ஸ்டாரான சஞ்சய் தத், தமிழில் விஜய் நடித்த லியோ படத்தில் நடித்தார். இவர், க்ளென்லிவெட் என்ற ஸ்காட்ச் விஸ்கி பிராண்டை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். அந்த நிறுவனத்தில் பார்ட்னராகவும் இருக்கிறார். எந்திரன் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் டேனி டென்சோங்பா, யுக்செம் பிரேவரிஸ் என்ற பீர் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி லாபம் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டி, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் சேர்ந்து ஓட்கா நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.
