×

இடப்பாகம் கலந்த பொன்னே

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-64

பாசம்பாசமானது நான்கு வகையாக பிரித்து வணங்கப்படுகிறது.  கால பாசம் - காலனை வென்றதனால் திருக்கடவூரில் கால சம்ஹார மூர்த்தி அவன் ஆயுதமான பாசத்தை கையில் ஏந்தியுள்ளார் (எமன் கையில் வைத்திருப்பது)நாக பாசம் - தீர்த்தங்களுக்கெல்லாம் தலைவனாகிய வருணனின் கையில் இருப்பது நாக பாசம்.ராக பாசம்: என்பது ஆசையை தூண்டுவது இதை ஸஹஸ்ரநாமம் ராக ஸ்வரூப பாஸாட்யாயை என்கிறது. இறைவியானவள் உயிர்களோடு தனு என்கிற உடலையும், கரணம் என்கிற உள்ளத்தையும், புவனம் என்ற புர உலகையும், இணைத்து கட்டுகின்ற கயிறே பாசம் எனப்படுகிறது.

தனு, கரண,புவனம் என்ற மூன்றும் கயிற்றால் (பாசத்தால்) கட்டப்பட்டால் தான் உயிர்களால் போகத்தை அனுபவிக்க இயலும். பொதுவாக ஐம்புலன்களுக்கும் இன்பம் தரக்கூடிய செயலே போகம் எனப்படும். அதை பெறும் பொருட்டு உமையம்மையை பாச வடிவிலே அமைத்து வழிபாடு செய்வது சாக்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ஆயுத பூஜை என்று குறிப்பிடுவர் ‘‘பாசாங்குசமும் கரும்பு வில்லும் ’’ (நூற் பயன்) என்பதனால் அறியலாம்.

பசு பாசம்: சிவபெருமான் வைத்திருப்பது, உயிர்களின் நலன் பொருட்டு கட்டுவது. கால சம்ஹார மூர்த்தியானவர் இறப்பை தவிர்த்ததனால் பிறப்பையும் இதுவும் ஒன்று. கால சம்ஹார சந்நதியுள்ளும் அதற்கு நேர் வெளியிலும் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பாப ஹரேஸ்வரர், புண்ணியவர்தனர் என்று பெயர். இந்த சிவலிங்க மூர்த்தி இரண்டுமே உயிர்களுக்கு இரு மலத்தை கட்டுவதால் பிறப்பையும், அவிழ்ப்பதால் இறப்பையும் செய்கிறார்.

அங்குசம் துலாக் கோலின் மேற் பகுதியில் கொக்கி யோடு கூடிய கருவி இஃதாகும். இது துறட்டியென்றும் சொல்லப்படும். யானையை அடக்குவதற்கு யானைப்பாகன் உபயோகிக்கும் ஆயுதம். விநாயகர் கையிலிருக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று.இது வயப்படாத பொருளை வளைத்து வயப்படுத்தும் ஆயுதம், இதனைக் கடவுள் கைகளில் தாங்கி உயிர்களின் சித்தமலமாகிய ஆணவத்தை அடக்கி இறுதியில் உயிர்களை தன் வயப்படுத்துதலை
உணர்த்துகிறது.

இந்த வடிவத்தில் உமையம்மையை தியானம் செய்தால் எதிரியையும், எதிரியால் ஏற்படும் துன்பத்தை நீக்கிக்கொள்ள முடியும் என்கிறது சாக்த வழிபாடு.
பஞ்ச பாணம்-பஞ்சபாணம் என்பது அபிராமி அந்தாதியை பொறுத்தவரை மன்மதனின் வில்லாகிற கரும்பு, அவனுடைய அம்பாகிற மலர்கனை இவைகளையே குறிக்கும்.

தாமரை (அரவிந்தம்) அசோகமலர் (அசோகம்) மாம்பூ (சூதம்) அல்லி (நீ லோத்பலம்) மல்லிகை (நவமல்லிகா) என்ற ஐந்து மலர்களையும் கொத்தாக உமையம்மையாளவள் கையில் தாங்கி காட்சியளிக்கிறார். மனவடிவில் இருக்கும் கரும்புவில் கண்டு, கேட்டு, நுகர்ந்து ருசித்து, தொட்டு என்ற ஐந்து செயல்களின் வழியாகஇன்பத்தை அளிப்பவள் உமையம்மை.

‘‘மநோ ரூபேக்ஷூ கோதண்டா பஞ்ச தன்மாத்ர ஸாயகா’’ என்பதனால் அறியலாம். இந்த மலர் கொத்துக்களை இணைத்து அதில் உமையம்மையை வழிபாடு செய்தால் மகிழ்ச்சியை அருள்வாள் என்கிறது சாக்ததந்திரம்.இன்சொல் திரிபுர சுந்தரி - குலாச்சாரம் என்ற ரகசிய சக்தி வழிபாட்டு முறையில் உடுக்கை என்கின்ற ஆயுதத்தை குறிக்கும். அபிராமி பட்டர் இதை மறைமுகமாக குறிப்பிடுகின்றார். வழிபாடு முறையையோ, செயலையோ, காலத்தையோ யாரும் அறியாவண்ணம் செய்யும் ரகசிய வழிபாடாகும்.

உமையம்மையை கலாச்சார முறையில் அதிலிருந்து வௌிப்படும் ஒலியைக் கொண்டு உமையம்மையிடத்து கடந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் பற்றி விடை அறிந்து கொள்வார்கள். அதற்கு பயன்படும் கருவியே இந்த உடுக்கை. இவர்கள் உடுக்கையிலேயே உமையம்மையை வழிபடுவார்கள். அப்படி உடுக்கையின் வழியாக பேசுகிற உமையம்மையை தான் ‘‘இன் சொல் திரிபுர சுந்தரி’’ 43 என்கிறார் பட்டர்.

சிந்துர மேனியள்: தமிழர்கள் பயன்படுத்தும் குங்குமத்தைப் போன்று வடமாநிலத்தில் உள்ளவர்கள் நெற்றியில் அணிந்து கொள்ளும் சிவந்த நிறமுடையமையை சிந்தூர் என்பர். அந்த நிறத்தில் உடலைக் கொண்டவள்உமையம்மை என்பது ஒரு பொருள்.பண்டைய காலத்தில் மந்திர ஜால வித்தை செய்பவர்கள் உமையம்மையை வணங்கி பிறர் கண்ணுக்கு தெரியாமல் இருத்தல், ஒரு பொருளை வேறு ஒரு பொருளாக தோன்றச் செய்வது போன்ற வித்தைகளை செய்வதற்கு பயன்படுத்துவர்.

தாந்தீரத்தில் மந்திரத்தை சில பொருள்களில் உச்சரித்து அதை உபாசகன் அணிந்து கொள்வது வழக்கம். இம்முறையில் மந்திரிக்கப்பட்ட சிந்தூரத்தை உபாசகன் தான் தரித்துக் கொள்வதன் மூலம் தன்னை சுற்றி உள்ளோரை தன் வயப்படுத்தி, அவர்களின் உண்மை இயல்பை மறைத்து தன் காரியத்தை சாதித்துக் கொள்வர். இந்த மந்திரிக்கப்பட்ட சிந்தூரத்தை தரிக்கும் வரை சுற்றியுள்ளோர்கள் தன் வசப்படுவார்கள். சிந்தூரம் கலைந்து போனால் அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். இதற்கு அதிதேவதையைத் தான் சிந்துரமேனியள் என்பர்.

‘‘தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை ’’உடலுக்கு வியாதி, உள்ளத்திற்கு பேராசை, அறிவிற்கு குழப்பம், ஆன்மாவிற்கு வினைப் பயன் எண்ணத்திற்கு மாற்றம் இவை அனைத்தும் மானுடத்திற்கு தீங்கு விளைவிக்கும் பண்புகளாகும். தீமை இரண்டு வகையில் அமையும். தான் அடைதல்: பிறரை அடையச் செய்தல். இந்த இரண்டு பண்புகளையும் இயல்பாகக் கொண்டவர்கள் அசுரர்கள். அவர்களில் வித்யுன் மாலி தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்ற மூன்று அசுரர்களும் அஞ்ச அழித்த புராணத் தகவலை இங்கே குறிப்பிடுகின்றார். மேலும் பொருப்பு என்ற சொல்லிற்கு மலை என்று பொருள்.

சிலை என்ற சொல்லிற்கு வில் என்று பொருள், பொருப்புச் சிலை என்பதனால் மலையை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், மகா விஷ்ணுவை அம்பின் நடுப்பகுதியாகவும், அக்னியை அம்பின் நுனிப்பகுதியாகவும், வாயுவை அம்பின் அடிப்பகுதியாகவும் கொண்ட அதிசயமான வில் அம்புகளைப் பெற்றவர் த்ரிபுராந்தக மூர்த்தியாவார். இவரை வில் வடிவில் அமைத்து வழிபாடு செய்தால் போரில் வெற்றி உண்டாகும். மேலும் த்ரிபுராந்தக மூர்த்தியின் சக்தியையும் இணைத்து தியானித்தால் மனக் கட்டுப்பாட்டைத் தரும். நல்ல குணத்தை தோற்றுவிக்கும் என்கிறது சாக்த ஆகமம்.

இவை அனைத்தையும் இணைத்தே அபிராமி பட்டர் இந்த பாடல் வரியில் ‘‘தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலைக்கை’’ என்பதனால் த்ரிபுராந்தக மூர்த்தி அவருடைய இருக்கும் உமையம்மை, அவர் அழித்த அசுரர்கள், அதற்கு தேவர்கள் அமைத்த சிறப்பான வில் அம்பு இவற்றைதெளிவாக குறிப்பிடுகிறார் பட்டர். வித்யா உபாசனையில் ஆயுதங்களாக உமையம்மையை வழிபட்டால் நடுவில் த்ரிபுராந்தகரையும் அவரது உமையம்மையையும் அவரை சுற்றி பத்து விதமான ஆயுதங்களையும்,வழிபடுவது சாக்த மரபு.

‘‘எரிபுரை மேனி’’ என்பது ஆயுதத்தைப் பொறுத்தவரை த்ரி சூலத்தைக் குறித்தது. ஆகமம் அஸ்திர தேவர் என்று இவரை குறிப்பிடுகிறது. எரிதழல் போல் மேனியை உடையவர். ‘‘ஜ்வால மாலா குலம் தேவி’’- என்ற ஆகம த்யானத்தால் இதை நன்கு அறியலாம். த்ரி சூல வடிவை, மூவிலை நெடுவேல் என்று அழைக்கப்படும் இந்த ஆயுதத்தில் ஆரணி ஜெனனி, ரோதயித்ரி என்ற மூன்று சக்திகள் இவை அழித்தல், காத்தல், படைத்தல் என்ற செயலை செய்யவல்ல முப்பெரும் தேவியராவர்.

இவர்களை சூல வடிவத்தில் வழிபாடு செய்தால் போகத்தையும், மோட்சத்தையும், ஞானத்தையும், பயனாகப் பெறலாம் என்கிறது சாக்த தந்திரம். சுவாமியின் கையில் சூலமாக வழிபட்டால் போகத்தையும், சூலத்தை தனியாக வழிபட்டால் அது மோட்சத்தையும், குறி சொல்பவர் கையில் கொடுத்து வழிபட்டால் ஞானத்தையும் வழங்கும் என்கிறது சாக்த தந்திரம்.

‘‘சூலினி’’- 50 என்பதனால் அறியலாம்.
‘‘இறைவர் செம்பாகத் திருந்தவளே ’’
இறைவன் என்கின்ற சொல் சிவபெருமானை குறித்து நின்றது. முழுமையில்சரிபாதியை குறிக்க பயன்படுத்தும் ‘‘செம்பாகம்’’ என்ற சொல் ‘‘இருந்தவளே’’ என்பதனால் கடந்த காலத்தை குறித்தது‘‘இறைவர் செம்பாகத்திருந்தவளே’’ என்பதுஅர்த்தநாரீஸ்வரரை குறித்தது.

சாக்த சித்தாந்தப்படி சிவனோடு சரிபாதியாக திகழ்ந்தும், இறைவனின் இடது பக்கத்தில் நின்றும் சிவனுக்கு உட்கலந்தும் அருள் புரிகின்றாள். உமையம்மை பசு, பாசம், பதி என்ற மூன்று தத்துவத்திலும் உமையம்மையானவள் எப்படிக் கலந்திருக்கிறாள் என்பதை இப்பாடல் வரி
சூட்டுகிறது.பாசத்தை விட்டு வேறாக நின்று அருள்கின்றாள்.

இடப்பாகம் கலந்த பொன்னே - 46
பசுவினிடத்து பாதியாய் திகழ்கிறாள்.
வாமபாகத்தை வவ்வியதே
பதியிடத்து- உட்கலந்து திகழ்கிறது.
சிந்தையுள்ளே பந்திப்பவர் -
 பாசம் என்பது ஜடப்பொருளைக் குறித்தது (அறிவற்றது) அந்தப் பொருளில் உமையம்மையானவள் அசைவாக திகழ்கின்றாள்.
பசு - என்பது அறியும் பொருள் அதில் அறிவாக திகழ்கின்றாள்.

பதி என்பது ஆனந்தப் பொருள். அதில் அனுபவமாக இருக்கின்றாள்.அந்த வகையில் ‘‘இறைவர் செம்பாகத்து இருந்தவளே’’ என்ற பாசத்தில் திகழும்
(ஆயுதத்தில் இருக்கும் நிலையை) இந்தப் பாடலில் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றார். அப்படி ஆயுதத்தில் அவளை வழிபடுவதால் வணங்குபவருக்கு மட்டுமே அருள்புரிபவளாய் திகழ்கின்றாள்.

இவ்வழிபாட்டால் அழித்தலால் செய்யும் பாவமானது வழிபடுபவனை அணுகாது. அந்த ஆயுதம் கையில் இருக்கும் வரை வழிபடுவோருக்கு தோல்வி கிடையாது. ஒவ்வொரு ஆயுதத்திலும் உமையம்மை. அர்த்தநாரீஸ்வரராக இருந்து அருட் பாலிக்கின்றாள் என்பதையே‘‘இறைவர் செம்பாகத்து இருந்தவளே’’ என்று குறிப்பிடுகின்றார். இனி பட்டரின் அனுபவத்தைத் தொடர்வோம் அந்த சின்னப் பெண் பால் அருந்திவிட்டு பட்டரை பார்த்து சிரித்துக் கொண்டே சென்றாலும் அவளின் நினைவு அவரை தொடர்ந்து கொண்டேயிருந்தது.

தன் குழப்பத்தை தெளிவு செய்து கொள்ள பாட்டியிடம் சென்று அதுவரை நடந்த அனைத்தையும் கூறினார். யாவற்றையும் கேட்ட பாட்டி ‘‘அரிவாள்ள பூஜை செய்தால் சண்டை வராது. அடுப்புல பூஜை செய்தால் பூனை தூங்காதுன்னு பெரியவா சொல்லுவாடா. குழப்பம் தீராத பட்டரின் முகத்தை பார்த்து பாட்டி தொடர்ந்தாள்.

என்னோட சின்ன வயசில எங்க தாத்தாவோட நிலப்பிரச்னை வந்த போது எங்க பாட்டியும் அரிவாளை வைத்து பூஜை செய்தா. அந்தப் பிரச்னை ரொம்ப சுமூகமாக முடிஞ்சு போச்சு. மறுநாள் காலையிலே எழுந்ததும் எங்க பாட்டி அந்த அரிவாளுக்கு பால் வைத்து நைவேத்யம் செஞ்சு அந்த அரிவாளுக்கு பூஜை முடிச்சு அதை பத்திரமா பரணையிலே எடுத்து வைச்சா.

நான் ஏன் இப்படி செய்றீங்கன்னு கேட்டேன். அதுக்கு அம்பாள் அருவாளா இருந்தா கோபமா இருப்பா பிரச்னையை வெட்டி விடுவா. பிரச்னை முடிந்ததும் அவள் கோபத்தை சாந்தி பண்ண பால் நைவேத்யம் செய்தேன்னு சொன்னா. அது தான் உனக்கு இப்ப நடந்திருக்கு. உனக்கு அதை புரியவைக்க அம்பாளே நேர்ல குழந்தையா வந்து பால் வாங்கி குடித்து தன்னை சாந்தி பண்ணின்டா.

அதுமாதிரி அடுப்பு நெருப்பிலே உமையம்மையை தியானம் செய்தால் வீட்டில் உணவு பஞ்சம் வராது, ஆரோக்யம் வரும் என்று கூறினார் பாட்டி. பாட்டி சொன்னதை கேட்ட பட்டர் குழப்பம் தீர்ந்து உமையம்மையின் தரிசனத்தை நினைத்து மகிழ்ந்தார். அன்று முதல் அடுப்பில் உமையம்மையை தியானித்து வறுமையில் இருந்து விடுபட்டு நலமுடன் வாழ்ந்தார். பட்டரை பின் பற்றி நாமும் நலமுடன் வாழ்வோம்.

( தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்