×

நலம் கொண்ட நாயகி

அபிராமி அந்தாதி  சக்தி தத்துவம்-62

உலகத்தை பிரம்மா படைக்கின்றார், விஷ்ணு காக்கின்றார் ருத்ரன் அழிக்கின்றார், இவர், படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணுவையும், அழிக்கவல்லவர், இவரை ஆகமம் மஹா ருத்ரர் என்கிறது.அவரது வழிபாட்டு தியானத்தில் மஹா கோரம் என்ற இறக்கமற்ற தன்மை உடையவராயும், உலகத்தையும், அதன் காரணத்தையும் அழிக்கும் தன்மை உடையவராயும், மயானத்தில் வசிப்பவராயும் குறிப்பிடப்படுகிறது.

அழித்தல் தொழிலை தான் செய்வதனால் இறக்கமற்ற ‘‘வலிய நெஞ்சை’’ கொண்டவராய் திகழ்கிறார். இதை கீழ்கண்ட
வரிகள் மேலும் உறுதி செய்கிறது.

காம தகன மூர்த்தி - ‘‘ககனமும் வானும்,
புவனமும்
காணவிற் காமன் - அங்கம் தகனம் முன்
தட்ஷிணா மூர்த்தி - தவப்பெருமாற்கு
ஷண்முக நாதர்  - முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதரிவின் மகனும் உண்டாய
தன் றோ ’’ - 65.

மஹாருத்ரா  - ‘‘அழியாபரமானந்தர் ’’ - 14.
இத்தகைய வலிய நெஞ்சை தன் விருப்பப்படி தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உமையம்மையின் மனதில் தோன்றும் எண்ணத்தை இங்கே பிறதிபலிக்கிறார் அபிராமி பட்டர்.

இல்லறத்தின் நல்லறங்களை கூறும் அறநூல்கள் பெண்டிர்கள் கணவரின் எண்ணமறிந்து அவர் கொள்கைக்கு துணை போக வேண்டும் என்கிறது.இதையே வட மொழி ‘‘சகதர்ம சாரிணி’’ என்கிறது. இது மனைவியை குறிப்பிடும் சொல். அந்த வகையில் சிவபெருமானின் எண்ணத்தை அறிந்து அதன் வழி செயல்படும் உமையம்மையின் பண்பை விளக்குகின்றார் . இதையே

‘‘ஐயன் அனந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அரம் செய்ய’’
 - 57 என்ற வரியால் நன்கு உணரலாம்.

நலங் கொண்ட நாயகி, நலம் என்ற சொல்லானது பன்னி ரெண்டுக்கும் மேலான பொருளை கொண்டதாக உள்ளது. அந்த பன்னிரெண்டு பொருளையும் தன்னகத்தே கொண்ட தலைவி என்ற பொருளில் ‘‘நலங் கொண்ட நாயகி’’ என்று அழைக்கிறார். அவை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.

நலம் என்ற சொல் அழகைக் குறிக்கும். உமையம்மையானவள் அனைவராலும் போற்றத்தக்க பேரழகை கொண்டவள். இதையே பட்டர்.  அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி - 71 என்கிறார். நலம் என்ற சொல்லிற்கு இன்பம் என்பது பொருள். உலக உயிர்கள் அனைத்திற்கும் துன்பம் என்பது பொருள். உலக உயிர்கள் அனைத்திற்கும் துன்பம் துடைத்து இன்பம் அருள்கின்ற உமையம்மை ஆனந்தமான வடிவை கொண்டவளாய் ‘‘ஆனந்தமாய்-’’ 11 என்று கூறுவதிலிருந்து அறியலாம்.

உலக உயிர் அனைத்திற்கும் உடன் இருந்து அருள்பவளாய் உமையம்மை திகழ்கின்றாள். இதையே ‘‘துணையும்’’- 2 என்பதனால் அறியலாம்..
நலம் என்ற சொல் உயர்வு என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. உமையம்மையானவள் அனைத்துயிர்களுக்கும் இனியதை செய்பவளாயும், நன்மையை செய்பவளாயும், அறத்தை செய்பவளாயும், மிக உயர்ந்த குணங்களை கொண்டுள்ளான், இதையே அழியாத குணக் குன்றே - 95 என்கிறார். கண்ணோட்டம் என்பது பிறரை கவனிப்பது என்ற பொருளில் பயன்படுகிறது. இது நலம் என்ற சொல்லையும் குறிக்கும். உலக உயிர்கள் அனைத்தையும் கண்காணித்து செம்மைபடுத்துபவளாகிய உமையம்மை அவளின் கூர்ந்து நோக்கும் விழிகளின் பெருமையை ‘‘அபிராமி கடைக்கண்களே’’ - 69 என்பதனாலும் அந்த கன்பால் மீளுகைக்கு - 39 என்பதனாலும் அறியலாம்.

நலம் என்ற சொல்லிற்கு நன்மை என்பது பொருள் மானுடர், தேவர், இவர்கள் அனைவருக்குமே நல்லன எல்லாவற்றையும் அருள்பவளாய் உமையம்மையே இருக்கின்றாள். இதையே நல்லன எல்லாம் தரும் - 69 என்பதனால் அறியலாம். நலம் என்ற சொல்லிற்கு பயன் என்று பொருள் வாழ்வின் நலனை அளிக்க வல்லவளாயும் வாழ்வின் பயனாக தானே திகழ்பவளாயும் உமையம்மையிருக்கின்றாள், இதையே ‘‘பயனென்று கொண்டவர்’’- 74 என்கிறார்.

நலம் என்ற சொல்லிற்கு விருப்பம் என்றும் பொருள், தன்னை விரும்பித் தொழும் அடியார்க்கு - 94 விரும்பிய அனைத்தையுமே அளிக்க வல்லவளாய் திகழ்கிறாள். நலம் என்ற சொல்லிற்கு அன்பு என்றும் பொருள். உமையம்மையின் வழிபாட்டினாலே உமையம்மையின் உலகத்தில் வசிக்கின்ற பேரு பெறுதல், இது சாத்திரத்தில் சொல்லப்படுகின்ற நால்வகை முக்தியில் ஒன்றாகும். ‘‘கணம்’’ என்பது சாக்த சித்தாந்திகள் அடையும் முத்தி பேறாகும். அத்தகைய உயர்ந்த முத்தியை உமையம்மை அன்பு செய்யும் பக்தர்களுக்கு அருள்கின்றாள். இதையே பட்டர் ‘‘அன்பர் என்பவர்கே கணம் தரும் ’’- 69 என்கிறார்.

நலம் என்ற சொல்லிற்கு ஆசை என்று பொருள்.  உலகிலுள்ளோர் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் ஆசை உடையவர்களாக இருக்கின்றார்கள். அதை அடைய பல்வேறு வழிகள் இருந்தாலும், வழிபாட்டையும் ஒரு வழியாக பின்பற்றுகின்றார்கள்.அந்த வகையில் ஆசையை நிறைவேற்றும் சாதனமாக உமையம்மையின் வழிபாடும் அமைகிறது.

அபிராமியானவள் ஆசையை இரு
வகைகளில் அருளி உலக உயிர்களுக்கு
நன்மையை செய்கிறாள்.
‘‘தனம் தரும் கல்வி தரும் ’’- 69  என்ற பாடலின் மூலம் நம் ஆசையை நிறைவேற்றி உலக இன்பத்தை அருள்கின்றார். முத்திக்கு தடையாக உள்ள ஆசையை தனது அருளால் நீக்கவும்,செய்து ஆன்மாவிற்கு நலன் செய்கிறாள்.

இதையே,ஆசை கடலூர் அகப்பட்டு அருளற்ற அந்தகன் சைப்
பாசத்தில் அல்லற்பட இருத்தெனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே -32என்கிறார்.

நலம் - என்ற சொல்லிற்கு நல்ல வார்த்தை என்பதும் பொருள். எந்த அறத்தையும் செய்ய இயலவில்லை என்றாலும், நல்ல வார்த்தைகளை சொல்லுவதும் அரணாக கருதப்படுகிறது. அனைத்தையும் செய்யவல்லவளான உமையம்மை (சப்த) குருவில் ஒருவராவார். தன் வார்த்தையால் உயிர்களுக்கு உபதேசம் செய்து நல்வழிபடுத்துகிறாள். இதையே பட்டர் ‘‘பாலினும் சொல் இனியாய் ’’- 60 என்பதனால் மிக தெளிவாக அறியலாம்.
 
நலம் - என்ற சொல் உடம்பு என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் உதவியின்றி ஆன்மாக்கள் தன்னை தான் அறிய இயலாது, ஆகையால் இறைவனையும் அறிய இயலாது, உலகையும் அறிய இயலாது. சாக்த தத்துவத்தின் படி ஆன்மாக்களுக்கு உடலாக இருந்து உதவுபவன் உமையம்மை மேலும் உடலை காக்கின்றவள், உடலை படைக்கவும் செய்கிறவள், கால சொரூபமாக இருந்து உடலை அழிக்கவும் செய்கிறார். இதையே ‘‘பூத்தவளே புவனம் பதிநான்கையும் பூத்தவண்ணம்   காத்தவளே ’’ - 13
என்பதனால் அறியலாம். ஆன்மாவிற்கு நலம் செய்வதனால் உடலுக்கு நலம் என்று பொருள்.

இந்த பன்னிரெண்டு பொருள்களிலேயும் நலம் என்ற சொல்லை மிக ஆழமாக தெரிவு செய்து பதிவு செய்திருக்கிறார். இப்பாடலில் இத்தகைய நலனை தன் உடைமை பொருளாக கொண்டவள் உமையம்மை அதனால் ‘‘நம் கொண்ட நாயகி’’ என்கிறார் பட்டர். நல்லரவின் படங்கொண்ட அல்குல் பாம்பின் படம் போன்ற உருவ அமைப்பை கொண்ட இடை பாகத்தை கொண்டவள் உமையம்மை என்கிறார் பட்டர். இடை அதன் அமைப்பு உலக உயிர்களின் தோற்றத்தை குறிக்கும் தத்துவமாகும்.அதையே இங்கு மறை முகமாக குறிப்பிடுகின்றார். இது உன்னத ஞானத்தின் அடையாளம்.

பாம்பு போன்ற இடையை கொண்டவர்கள் ஒழக்க உணர்வை உடையவர்களாக திகழ்வார்கள் என்கிறது சாமுதிரிகா சாத்திரம்.உலக உயிர்கள் அனைத்தையும் நல்லொழுக்கத்தில் செலுத்தி மேன்மையான ஞானத்தை அடைய செய்வதையே நோக்கமாக கொண்டவள் உமையம்மை அதை சிற்ப சாத்திர நோக்கில்.

‘‘மெல்லிய நுண்ணிடை ’’ - 91 தயங்கும் நுண்ணூல் இடையாளை என்று கூறுவதிலிருந்து அறியலாம். மேலும் ஆகமம் இடையே வைத்து வெவ்வேறு உமையம்மையை குறிப்பிடுகிறது.

வருந்திய வஞ்சி   - 5  பாலாம்பிகை.
கொடியே  -   22 - சிவகாம சுந்தரி
விட அரவின் பைக்கே  -  37 - காளி
பச்சை கொடி- 48- பார்வதி.
சின்னஞ் சிறிய மருங்கு  - 53 - மோகினி.
என்று இடையே வைத்து தேவதையை குறிப்பிடும் வழக்கம் உள்ளது.

பனிமொழி வேதப் பரிபுரையே  பனி - என்ற சொல்லிற்கு அகராதி அச்சம், துக்கம், குளிர் என்ற மூன்றிற்கு மேற்பட்ட பொருள்களை குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருள்களை உணர்த்தும் படி பனி என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் பட்டர்.

அச்சம் - என்ற பொருள் தரும் பனி எனும் சொல்  ‘‘உயிர் உறவற்றறிவு மறக்கும் பொழுதென் முன்னே வரல் வேண்டும் வருத்தியுமே  ’’- 89 என்று எமனை கண்டு அஞ்சுகிறார் அபிராமி பட்டர். அப்படி அஞ்சிய அபிராமி பட்டரை அஞ்ச வேண்டாம் என்று எமனையே பனித்தருள்கின்றாள் உமையம்மை . அதையே ‘‘அந்தகன்பால் மீளுகைக்கு உன் தன் விழியின் ரடை உண்டு’’- 39 என்கிறார்.

துக்கம் - என்ற பொருள் தரும் பனி எனும் சொல்
மிகையுந்  துரத்தவெம் பிணியுந் துரத்த
வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்தநரை திரையும் துரத்த மிகு
வேதனை களுந்து ரத்த
பகையுந் துரத்தவஞ் சனையுந் துரத்த
பசுயென் பதுந்து ரத்த
பாவந் துரத்த பதிமோகந் துரத்த
பல கா ரியமுந் துரத்த
 நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் எ
ன்னை
நமனுந் துரத்து வானோ
- என்று வாழ்வில் துக்கப்படுவோர்க்கு வலைக்கை அமைத்து அஞ்சல் என்பாய் - 33 என்றும். அபயமளிக்கிறது அன்னையின் அருள்.
குளிர்ந்த - என்னும் பொருள் தரும் பனி எனும் சொல் - உமையம்மை துக்கத்தில் வெந்து கொண்டிருக்கிற அடியார் மனதை குளிர செய்யும் பனி போன்ற மொழியால் பேசுகின்றாள். அதனால் ‘‘பனி மொழி’’ என்கிறார்.

‘‘வேத’’- என்ற சொல்லானது நான்கு வேதங்களையும் ஆன்ம ஞானத்தையும், பிரம்ம ஞானத்தையும், அறிவிக்கும் தன்மையை இயல்பாக கொண்டது வேதம், அந்த வேதத்தையே குதிரையாக்கி அதன் மேல் அமர்ந்திருக்கக் கூடிய உமையம்மையை ‘‘வேத பரிபுராயே ’’ என்கிறார்.
   ஆகம தியானங்கள் இத்தகைய வடிவம் கொண்ட உமையம்மையை ‘‘அஸ்வா ரூடா’’ என்று அழைக்கிறது. இந்த வடிவத்தை வழி
படுவோர்க்கு இல்லறம் சிறக்கும்.

‘‘பனி மொழி வேதப்பரிபுரையே’’ என்ற வார்த்தையால் துக்கத்தை தொடர்ந்து அனுபவித்து எதிர் காலத்திலும் அது தொடருமோ என்ற அச்சம் உண்டாகி  அந்த அச்சத்தை போக்கிக் கொள்ள உமையம்மையை நாடி அவளின் அருள் பார்வையை பெற்று, அதன் மூலம் துக்கம் நீங்கி, அச்சம் நீங்கி வருங்காலத்திலும் நன்மையே என்று நம்பிக்கை பெற்று, குளிர்ச்சியை தருவதாகவும், உண்மையாகவும், அனுபவச்சாத்திய படுத்தும் உமையம்மையின் கண்கள் பேசும் இனிய மொழியை எதிர் பார்த்து வேத பரியில் ஏறி வாழ்வியலை சொழிக்க வைக்க வரும் ‘‘அஸ்வாரூடா’’ என்ற உமையம்மையின் திரு உருவை ‘‘பனிமொழி வேதப்பரி புரையே’’ என்கிறார்.

இதுவரை பாடலின் பொருளைப் பார்த்தோம் இனி அபிராமி பட்டரின் அனுபவத்தைக் காண்போம். மணப் பெண்ணை ஆசிர்வதிக்க வேண்டி உமையம்மையை நினைத்து கண்களை மூடி அமர்ந்திருந்த பட்டருக்கு சுற்றியிருந்தவர்களின் குரல் அவரின் தியானத்தை சற்றே கலைத்தது.

அப்பொழுது பெண்ணின் தாயார் ஏன்னா அபிராமி வந்திருக்கான்னா சித்த இங்க வாங்கோ என்றாள். அதற்குள் ஒருவர் யாருடீ பாட்டி அபிராமியா ? பேத்தி அபிராமியா? என்றார். (அக்காலத்தில் பாட்டின் பெயரை பேத்திற்கு வைப்பது வழக்கத்தில் இருந்தது ) பேத்தியா போன அபிராமி இப்போ பாட்டியா வந்திருக்கா என்று பரியாசம் செய்தது மற்றொரு குரல் நீங்கெல்லாம் ரொம்ப பெரியவா (பணம் - படைத்தவர்) எங்காத்து விசேஷத்துக்கு வந்ததே ரொம்ப சந்தோஷம் ‘‘வாங்கோ’’, ‘‘வாங்கோ’’ என்றபடி தன் கரம் கூப்பி அழைத்தார் பெண்ணின் தகப்பனார்.

தாயார் மணமக்களை ஆசிர்வதிக்க அபிராமியை அழைக்க. அவள் கணவனை திரும்பி பார்த்து வரேளா என்றாள். (தம்பதியாய் ஆசிர்வதிக்க வேண்டும் என்பது வழக்கம்) அந்த பாட்டி, அபிராமியின் குரலைக் கேட்ட அவளின் மகன் என்னம்மா என்றான் உடனே அருகில் வந்து அத்தே இதோ வந்துட்டேன் என்றார் மருமகள்.

ஏன்டீ கூப்டியா என்று குரல் கொடுத்துக் கொண்டே அருகில் வேகமாக வந்து நின்றார் கணவர், என்ன பாட்டி என்று ஆசையாய் ஓடி வந்தன பேரப்பிள்ளைகள் இந்த சம்பாஷனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி பட்டர் உமையம்மையை நினைத்து மணப்பெண்ணை ஆசிர்வதிக்க கண்களை திறந்து பார்த்தார் வெளியில் அவர் கண்ட அந்த பாட்டி அபிராமி வேறு யாருமில்லை தன் மனதில் மின்னலாய் தோன்றி மறைந்த அந்த உமையம்மையே.

பாட்டி அபிராமியின் ஒரு குரல் எவ்வாறு தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஈர்த்து தன் அருகில் கொண்டு வந்து சேர்த்த தோ, அது போல் இந்த மணப்பெண்ணும் வாழ்வாங்கு வாழ்வாள் என்று அபிராமி ஆசிர்வதித்தது போல் உணர்ந்தார் பட்டர். பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் இந்தப் பாடலை தியானம் செய்தாள் தன் மகள், பாட்டி அபிராமியை போல் வாழ்வாள் என்று அபிராமி பட்டர் தன் அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

( தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி