×

2k லவ் ஸ்டோரி: விமர்சனம்

2கே இளைஞன் ஜெகவீர், இளைஞி மீனாட்சி கோவிந்தராஜன் இணைந்து ‘ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்’ நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். சிறுவயதில் இருந்தே இணைபிரியாத நட்புகொண்ட அவர்கள், வருங்காலத்தில் உயிருக்குயிராக காதலிப்பார்கள் என்று அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் நினைத்தாலும், அதைப் பொருட்படுத்தாத அவர்கள் தங்களது நட்பைத் தொடர்கின்றனர். இந்நிலையில் ஜெகவீரும், லத்திகா பாலமுருகனும் காதலிக்கின்றனர். அப்போது ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், லத்திகா பாலமுருகன் ஆகியோரிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இறுதியில் ஜெகவீர் காதல் வென்றதா? அல்லது ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன் இடையே காதல் மலர்ந்ததா என்பது மீதி கதை.

ஜெகவீர் ஒரு புதுமுகம் மாதிரியே தெரியவில்லை. தனது கேரக்டரை உணர்ந்து செம ஜாலியாகவும், இயல்பாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். தனது கேரக்டருக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ள மீனாட்சி கோவிந்தராஜன், ஜெகவீர் காதலியைக் கொண்டாடுவது நேர்த்தியாக இருக்கிறது. சிங்கம்புலி, பாலசரவணன், ஜி.பி.முத்து, ஆண்டனி பாக்யராஜ் கோஷ்டியினர் நன்கு சிரிக்க வைக்கின்றனர். வெகுளிப்பெண்ணாக வந்து மனதில் பதிகிறார், லத்திகா பால முருகன். ஜெயப்பிரகாஷ், ஹரிதா, வினோதினி வைத்தியநாதன், நிரஞ்சன் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் தங்கள் கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளனர்.

காதலன், காதலி மற்றும் இருவருக்கும் இடையே காதலனின் தோழி என்ற கதையை, 2கே ஃப்ளேவரில் இயக்குனர் சுசீந்திரன் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார். பொசசிவ்னஸ் பற்றி மீனாட்சி கோவிந்தராஜன் விளக்குவது அருமை. வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு கலர்ஃபுல் ரகம். இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய பலம். ஆணும், பெண்ணும் பழகினாலே காதல்தான் என்று முடிவு செய்யும் இந்த சமூகத்துக்கு, இறுதிவரைக்கும் ஒரு ஆணும், பெண்ணும் நல்ல நண்பர்களாகவே இருக்க முடியும் என்று அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கிறது படம். இது பெற்றோர்கள் படிக்க வேண்டிய பாடம்.

Tags : Jagaveer ,Meenakshi Govindarajan ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்