×

திருவாசகத்தில் சில வாசகங்கள்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-48

‘உய்வை தரச்செய்த நால்வர் பொற்றாள்
எம் உயிர்த்துணையே!
என்ற வாக்கிற்கிணங்க வாழும் இந்து மக்கள் நம் அனைவருக்கும் ஒரு வரப் பிரசாதமாக விளங்குவது நால்வர் நற்றமிழ்! திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய செந்தமிழ்ப் பாடல்கள் தான் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த உன்னதமான ஆராதனை. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்கள் மூவர் தேவாரம் என்றும் மாணிக்கவாசகரின் பாடல்கள் திருவாசகம் என்றும் வழங்கப்படுகிறது.
 
தொல்லை இரும் பிறவி சூழும் தளைநீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே!  
எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோமான்
திருவாசகம் என்னும் தேன்.
திருவாசகத்தேன் தந்த மாணிக்கவாசகர் தில்லைப் பெருவெளியில்
நடராஜப் பெருமானோடு இரண்டறக் கலந்த நன்னாளே ஆனி மகம்.
 
மதுரைக்கு அருகில் வைகை நதிக்கரையில் உள்ள வாதவூரில் அவதரித்த இவர் திருப்பெயர் வாதவூரர். இறையருளால் அறிவுநலம் வாய்க்கப்பெற்ற இவர் வளர்ந்த பின் அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராக விளங்கினார் பின்னர் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபெருமானே குருநாதராக எழுந்தருளி வாதவூரரை  ஆட்கொண்டு அருளினார்.

திருப்புகழில் அருணகிரிநாதர் இவ்வரிய சம்பவத்தை அற்புதமாக விவரிக்கிறார்.
நெருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்குருந்தடி அருள்பெற அருளிய குருநாதர்
கல்லால மரத்தின் ஆதி குருவான அம்பலவாணரையே குருந்த மரத்தடியில் குருவாகப் பெற்ற வாதவூரருக்குக் கவிதைபாட கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன?

அனைவர் நெஞ்சமும் உருகும் வண்ணம் அருளியென அருந்தமிழ் பொழுந்தார். ‘மாணிக்கவாசகர்’ என்று குருநாதரால் பட்டம் சூட்டப் பெற்றார். அவர் தந்த அருட்பால்கள் ‘திருவாசகம்’ என்று போற்றப் பெற்றது.திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்ல திருச்சிற்றம்பல நாதரான நடராஜப் பெருமானே தன் கைப்பட எழுதினார் என்பது வாசகர் வாழ்வின் குறிப்பிடத்தக்க அம்சம்.

கடவுள் மனிதனுக்குச் சொன்ன நூலாக பகவத் கீதை விளங்குகிறது.  மனிதன் மனிதனுக்குச் சொன்ன நூலாக திருக்குறள் புகழ் பெறுகின்றது.மனிதன் சொல்ல கடவுளே கைப்பட எழுதிக்கொண்ட நூலாக திருவாசகமே உச்ச நிலையில் ஒளி விடுகின்றது.குருநாதர் சொல்வதை மாணவர்கள் எழுதுவது மரபு திருவாசகமோ மாணவன் சொல்ல ஆதி குரு எழுதிய அதிசயம். எதற்காக இந்நூலைக் கைப்பட கடவுளே எழுதினார் என்று அறிந்து கொள்வோமா? பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மனோன் மணியத்தில் கீழ்க் கண்டவாறு அற்புதமாகக் குறிப்பிடுகின்றார்.

‘கடை யூழி வருந்தனிமை கழிக்க அன்றோ
 உடையார் உன் வாசகத்தில் ஒருவிரதி கருதி யதே!

அதாவது ஊழிக்காலத்தில் உலகம் முழுவதும் அழிந்த பின்பு சிவபெருமான் மட்டுமே தனித்து இருக்க நேரிடும். அல்லவா! அத்தனிமை நேரத்தில் ஓய்வாக மன நிம்மதியுடன் மாணிக்கவாசகரின் திருவாசகம் படிக்கலாமே என்னும் காரணத்தால் தான் கைப்பட அவரே எழுதினாராம்.
அறிஞரின் கற்பனை அபாரம் அல்லவா !இத்தகு பெருமை மிக்க திருவாசகத்தில் சிவ வாசகங்களாவது நாம் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்.

வளரும் இளந் தலைமுறையினர்க்கு மாணிக்கவாசகர் போன்ற அடியார்களின் அருட்சரிதங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கிறிஸ்துவ சமயத்தைப் பரப்ப வந்த ஜி.யூ. போப்  என்ற பாதிரியாரே இங்கு வந்த போது திருவாசகத்தை படித்து மாணிக்கவாசகரின் மாணவர் ஆனார் என்றால் நம்மவர்கள் அதுபற்றி அறியாமல் இருப்பது அறியாமை அல்லவா !

‘சிவன்  அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’
‘சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை’
‘அடியேன் உன் அடியார் கடுவுள் இருக்கும்   அருளைப் புரியாய்!
‘அனைத்து எலும்பு உன் நெத ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையான்’
 
‘முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே !
‘ஒன்றும் நீ அல்லை ! அன்றி ஒன்று இல்லை
யார் உன்னை அறிய கிற்பாரே ’’
‘காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்!’

இவ்வாறு இதயத்தை உருக்கும் இணையற்ற தொடர்கள் திருவாசகம் முழுவதும் நிறைந்து பரந்துள்ளன.  ‘வாசகரின் வாசகராக’ சிவபெருமானே உள்ளார் என்னும் போது மாணிக்கவாசகரின் பாடல்களை நாம் மந்திரம் போல் ஓத வேண்டாமா? திருவாசகத்தை ஏன் தேனுக்கு ஒப்பிடுகிறார்கள் தெரியுமா ?
திருமுருக வாரியார் சுவாமிகள் அதற்கான காரணத்தை அற்புதமாக விளக்குகின்றார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சுத்தமானதேன் தன் நிலையில் மாறாமல் சிறிதும் கெட்டுப் போகாமல் இருக்கும். மேலும் ஒன்று தேன் தானும் கெடாது . தன்னிலே விழுந்த பண்டத்தையும் கெட விடாது. திருவாசகம் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாகச் சிதையாமல் அழியாமல், ஓதுபவர்களையும் உயிருக்கு உயிராக அமைந்து உய்வித்து வருகின்றது.

தேவாரத்தில் அநேக பகுதிகள் கால வெள்ளத்தில் போய் விட்டன. திருவாசகத்தில் ஒருவரி கூட அழியவில்லை. காரணம் தான் புரிந்திருக்குமே!கடவுளின் கையெழுத்தை அழிப்பதற்கு எச்சக்தியும் இல்லையே! ஆலயம் ஒன்றின் கருவறையில், அங்கு எழுந்தருளி அருள் பாலிக்கும் மூல விக்கிரகம் முன்பு கசிந்துருகி அன்பர் ஒருவர் திருவாசகம் பாடினார்.

அப்பொழுது அருகே இருந்த ஆலய அறங்காவலர் ‘இங்கே திருவாசகம் பாடாதீர்கள். கோயில் பிராகாரத்தில் அமைந்துள்ள சொற்பொழிவுக்கூடத்தில் சென்று பாடுங்கள்’ என்றார். ‘கர்ப்பக் கிரஹத்தில் பாடுவது மிகவும் விசேஷமல்லவா? ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?‘ என்ற அவரின் வினாவிற்கு அறங்காவலர் தந்த விடை அதிசயம் மிக்கது.

அவர் அளித்த பதில் இதுதான்.திருவாசகப் பாடல்கள் கல்லைப் பிசைந்து கனியாக்கும். தொடர்ந்து நீங்கள் இங்கே பாடினால் கருவறை மூர்த்தியே கரைந்து போகக் கூடுமே! வேதத்தோடு திருவாசகத்தை ஒப்பிட்டு சிவப்பிரகாச அடிகள் பாடுகின்றார்.

‘‘வேதம் ஏதின்  விழிநீர் பெருக்கி
நெஞ்சம் நெக்குருகி நிற்பவர் காண்கிலேம்
திருவாசகம் இங்கு ஒருகால் ஓதில்
  கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடு மணற் கேணியில் சுரந்து நீர்பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர் விதிர்ப்பு எய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே!

மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் ‘சிவபுராணம்’ தொடங்கி ‘அச்சோ பதிகம்’ முடிய 51 தலைப்புகளில் 658 ஆகும். இத்திருவாசகப் பாடல்கள் தவிர 400 பாடல்களாகத் திருக்கோவையாரும் பாடி அருளியுள்ளார்.தில்லை வாழ் அந்தணர்கள் வாசகரை வணங்கி ‘தாங்கள் அருளிய பாடல்களில் அர்த்தம் விளக்குங்கள்’ என்றார்கள். மாணிக்கவாசகர் தில்லை மன்றில் திருநடம் ஆடும் நடராசப் பெருமானைச் சுட்டிக்காட்டி ‘பொன்மை பலப் பெருமானே இதன் பொருள்’ என்று கூறியவாறு ஆனி மகத்தில் ஆடல் வல்லானோடு ஐக்கிய மானார் என்பதே வரலாறு.திருக்கூட்டமரபில் வாழையடி வாழை என வந்த வள்ளலார் பாடுகின்றார்.

வான் கலந்து மாணிக்கவாசக! நின்வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்