×

செம்மையான வாழ்வருளும் செங்கழுநீர் அம்மன்

சென்னை - மடிப்பாக்கம்

புதுச்சேரியில் உள்ள வீராம்பட்டினத்தில் வசித்த வீரராகவன் என்பவர், மீனவர் குலத்தைச் சேர்ந்தவர். தெய்வ பக்தியும், நல்லொழுக்கமும் நிறைந்தவர்.
ஒருநாள் அவர் ஊருக்கு மேற்குப் பகுதியில் உள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்று வலையை வீசினார். பல தடவைகள் வீசியும், ஒரு மீன்கூட சிக்கவில்லை. மனம் சோர்ந்த அவர் இறுதி முயற்சியாக வலை வீசினார். அவநம்பிக்கையுடன் இழுத்துப் பார்த்தபோது வலை எளிதில் இழுக்க வராமல் கனத்தது. பெரிய மீன் சிக்கி விட்டதோ என்று மகிழ்ச்சி பொங்க வீரராகவன் வலையைக் கரைக்கு இழுத்து வந்து சேர்த்தார். வலையில் சிக்கியது, பெரிய மீன் அல்ல; உறுதியானதொரு மரக்கட்டை!

ஏமாற்றமும் வருத்தமும் அடைந்த அவர், அந்தக் கட்டையை எடுத்து வந்து வீட்டின் கொல்லைப்புறத்தில் போட்டார். ஒருநாள், அடுப்பில் எரிப்பதற்கு விறகில்லை. வெயிலில் காய்ந்து கிடந்த மரக்கட்டை வீரராகவனின் மனைவியின் கவனத்திற்கு வந்தது. அதைப் பிளந்து எரிக்க தீர்மானித்தார். கோடாரியால் அந்த மரக்கட்டையின் மேலே ஓங்கிப் போட்டாள் ஒரு போடு! அடுத்த நொடியே ‘அம்மா’ என்று அலறினாள். மரக்கட்டை பிளவுபடவில்லை; ஆனால், கோடாரி தாக்கிய இடத்திலிருந்து குபீரென செங்குருதி பெருகியது!

மரக்கட்டையிலிருந்து ரத்தம் பீறிட்டு வரும் அதிசய சம்பவம் அந்த ஊரையே பரபரப்பாக்கி விட்டது. அது தெய்வ சங்கல்பமே என்று கருதிய வீரராகவன் அந்த மரக்கட்டையை வீட்டுக்குள் கொண்டு வந்து, நீரால் அபிஷேகம் செய்து, பூவும் பொட்டும் வைத்து பூஜித்து வரலானார். அன்றிலிருந்து வீரராகவனின் இல்லத்தில் செல்வமும் சுபிட்சமும் பெருகின.

ஒருநாள் இரவு வீரராகவன் கனவொன்று கண்டார். அதில் அன்னை வீரசக்தியின் திருவுருவை தரிசித்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெய்வீக நிலையை எய்திய ரேணுகா பரமேஸ்வரியே தன்னிடம் அருள்கூர்ந்து வருகை தந்திருப்பதாக அவர் உணர்ந்து கொண்டார்! அப்போது அன்னையின் அருட்குரலும் ஒலித்தது: “என்னுடைய அருள் பிரவாகத்தின் அடையாளமாகவே மரக்கட்டை உன்னிடம் வந்து சேர்ந்தது. அதை எடுத்துச் சென்று, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமாதியான ஒரு சித்தருக்கு அருகில் பீடமாக வைத்து, அதன்மேல் என்னுடைய திருவுருவத்தையும் அமைத்து, ‘செங்கழுநீர் அம்மன்’ என்னும் பெயரால் வழிபட்டு வருக! உங்கள் குடும்பத்தினரையும், ஊர் மக்களையும் என்றும் காத்தருளுவேன்!’’

வீரராகவன் கண்ட கனவை ஊர் மக்களும் அறிந்தனர். அனைவரும் ஆலயம் அமைக்க இடம் தேடி ஆர்வத்துடன் சென்றபோது செடி கொடிகளும் புதர்களும் மண்டியிருந்த ஓரிடத்தில் ஒரு பாம்புப் புற்றைக் கண்டனர். திடீரென்று பெரிய நாகம் ஒன்று புற்றிலிருந்து வெளிப்பட்டு அனைவரையும் திடுக்கிட வைத்தது. புஸ்ஸென்று பேரோசை எழுப்பிய அந்த நாகம் சரசரவென்று புற்றிலிருந்து கீழே இறங்கியது.

புற்றுக்கடியில் நின்று பெரும் படம் எடுத்து ஆடியது. கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த பாம்பு மேலும் பேரோசையுடன் சீறி, அகல விரித்திருந்த தன்னுடைய படத்தை பூமியின் மீது மூன்று தடவைகள் ஓங்கி அடித்து, அவ்விடத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது. உடனே விடுவிடுவென்று புற்றின் மேலேறி புழைக்குள்ளே புகுந்து மறைந்தது.

இந்த அதிசய சம்பவத்தால் அதிர்ந்து போனவர்கள், அந்த நாகம் குறிப்பிட்டுக் காட்டிய இடமே கோயில் அமைக்க உரிய இடமாக இருக்கும் என்று மனம் தெளிந்து மண்ணைத் தோண்டினார்கள். அன்னை கனவில் சொன்னது அணுவளவும் பிசகவில்லை. பூமியின் ஆழத்தில் ஒரு சமாதியின் மேல்புறப்பகுதி புலப்பட்டது. ஊர் மக்கள் வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட்டவர்களாய் அங்கேயே ஆலயம் அமைக்க உறுதி செய்துகொண்டனர்.

வீரராகவரிடம் இருந்த மரக்கட்டையை பீடமாக வைத்து, அதற்குமேல் அன்னை சக்தியின் திரு உருவத்தை சிலர் விக்ரகமாக பிரதிஷ்டை செய்தனர். செங்கழுநீர் ஓடையில் அருள் சின்னம் காட்சியருளியதை நினைவு கூர்ந்தும் வீரராகவனின் கனவில் அம்மன் தன் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியதன்படியும் ‘அருள்மிகு செங்கழுநீரம்மன்’ எனத் திருநாமம் இட்டு, அனைத்து மக்களும் தங்களின் குல தெய்வமாகவே வழிபட்டு வரலாயினர்.

ஆலயம் அமையும் இடத்தைச் சுட்டிக்காட்டிய அந்த நாகம், புற்றுக்கும் கோயிலுக்குமிடையே போய்வந்து கொண்டிருந்தது. அன்னையின் திருமேனியில் ஏறி அணிகலனாய் சுற்றிக்கொண்டும் அடிக்கடி காட்சி தந்தது! அந்த நாகத்தையும் தெய்வச் சின்னமாகவே கருதி மக்கள் வழிபட்டு வந்தனர்.
காலங்கள் உருண்டோடின. ஆதியில் பீடமும் சிரசும் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருவறையில் தேவதாரு மரத்தால் தேவியின் முழு உருவமும் அமைக்கப்பட்டது. முன் கோபுரம், சுற்று மதில்கள், பிராகார மண்டபம், அழகிய  சுதைச் சிற்பங்கள் என்றெல்லாம் சிறப்புற அமைந்தன.

கோயிலின் முதல் தேரோட்டம் 1619ம் ஆண்டு (நளவருடம் ஆடி மாதம்) ஆகஸ்ட் மாதம் 13ம் தேதியன்று நடைபெற்றது. பிரெஞ்சுகாரர்கள் காலத்தில் ஒருமுறை கடலில் பயணம் செய்த பிரெஞ்சு கவர்னர் தேர்த் திருவிழாவின்போது வெடிக்கப்பட்ட வாண வேடிக்கைகளின் சப்தம் கேட்டு வீராம்பட்டினத்தில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது என்பதையறிந்து வீராம் பட்டினத்திற்கு கரையிறங்கி வந்ததாகவும், வீராம்பட்டினம் மக்கள் கவர்னரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்க வேண்டிக்கொள்ள, கவர்னர் விழாவில் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. அன்றிலிருந்து இன்றுவரை கவர்னர் தேரை வடம் பிடித்து துவக்கி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அங்கு அருளாட்சி புரியும் செங்கழுநீர் அம்மன் சென்னையிலும் ஆலயம் கொண்டருள விரும்பினாள். இன்றைக்குச் சுமார் 150 வருடங்களுக்கு முன் சென்னை பனப்பாக்கம் பகுதியில் வாந்தி பேதி நோய் சூழ்ந்தது.  அப்போது அங்கு வசித்து வந்த ஒரு பெரியவரின் மீது செங்கழுநீர் அம்மன் ஆவிர்ப்பவித்தாள். ‘மடிப்பாக்கத்தில் உள்ள புழுதிவாக்கத்தின் எல்லையில் தனக்கு கோயில் எழுப்பி வழிபட்டால் ஊரைக் காக்கிறேன்’ என வாக்கும் தந்தாள். அதன்படி புதுச்சேரி வீராம்பட்டினத்திலிருந்து பிடி மண் எடுத்து வந்து இந்த செங்கழுநீர் அம்மனுக்கு ஆலயம் அமைத்தனர்.

அந்த அம்மனுக்குத் துணையாக மடிப்பாக்கம் பொன்னியம்மனின் உற்சவ விக்ரகமும் கருவறையில் திருவருள் புரிகிறது. சமீபத்தில் செங்கழுநீர் அம்மனுக்கு ராஜகோபுரம் மற்றும் கொடிமரத்துடன் பிரமாண்டமான கோயிலை எழுப்பியுள்ளனர். கேட்ட வரங்களைத் தந்திடும் அன்னை இந்த செங்கழுநீர் அம்மன் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறையில் அன்பே உருவாய் அருளே வடிவாய் அம்பிகை வீற்றிருக்க, அவள் திருமுன் ரேணுகாதேவியும், அவளுடைய இருபுறங்களிலும் உற்சவ விக்ரகங்களும் உள்ளன.

அம்மனின் கருவறைக்கு வலப்புறம் விநாயகர், இடப்புறம் வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியர், கோஷ்டத்தில் துர்க்கையம்மன் சந்நதிகள் உள்ளன. கருவறையின் முன் சிம்மமும் திரிசூலமும் காணப்படுகின்றன. இந்த செங்கழுநீரம்மன் கோயிலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் ஆடிப் பெருவிழாவின்போது வருகை தந்து அம்மனை வணங்கிச் செல்கின்றனர். ஆடி வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடித் திருவிழாவின்போது தீமிதி உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.

பக்தர்கள் தங்கள் குறைகளை போக்கிக்கொள்ள நெய் விளக்கு, மாவிளக்கு ஏற்றியும், பொங்கலிட்டு, வழிபாடு நடத்தியும் பெரும்பேறு பெற்றிருக்கிறார்கள். பார்வை இழந்தோருக்குப் பார்வை நல்கியும், தடைகள் விலக்கித் திருமணம் செய்வித்தும், குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு அச்செல்வத்தை ஆசீர்வதித்தும், அனைத்து நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அருட்பாலித்து வருகிறாள் செங்கழுநீரம்மன்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

Tags :
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்