×

கோவை தண்டு மாரியம்மன்

ஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப் பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் வீரனின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. பொழுது விடிந்ததும், கனவில் வந்த அம்மனை தேடி அலைந்தான். அவர்களின் அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான்.

உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான். தான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். ‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும் கூடாரம் என்று பொருள். அங்கேயே ஆலயமும் அமைந்தது.

கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருட்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள். கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

திருஈங்கோய்மலை லலிதாம்பிகை

அகத்திய முனிவர், ஈசனை தேனீ வடிவில் சென்று வழிபட்ட தலமே திருஈங்கோய்மலை. திருஈங்கோய்மலையின் பாறை மீது அமைந்துள்ள லலிதா மஹிளாமந்திர், சக்தி பீடதலமாகத் திகழ்கிறது. முழுக்க முழுக்க வித்யா தீட்சை பெற்று துறவிகளாகவுள்ள யோகினியர்களும், தியாகினிகளும் பூஜைகளை செய்கின்றனர். கன்னிப் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது.

லலிதாம்பிகை வெள்ளைப் பளிங்கினாலான திருமேனியளாய்த் திகழ்கிறாள். அம்பிகையின் இடது கை கரும்பினை ஏந்த, வலது கையில் ஐந்து வகை பூக்களால் ஆன புஷ்பபாணம் இருக்கிறது. இடது கீழ் கையில் பாசமும், வலது கீழ் கையில் அங்குசமும் இருக்கின்றன. அம்பிகை எழுந்தருளியுள்ள பீடம் மேருபீடம் என போற்றப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் இத்தலம் சாயாபீடம் என போற்றப்படுகிறது. ஈசனின் மனைவியான தாட்சாயணி தேவியின் முக சாயை இந்த மலையில் விழுந்ததால் இது சாயாபுரம் என்றும் பெயர் உண்டு. திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் உள்ள மணமேடு எனும் இடத்தில் இத்தலம் உள்ளது.

திருப்பரங்குன்றம் வெயில் உகந்த காளி

அது திருமலை நாயக்கர் காலம். மதுரை முழுவதும் அம்மை நோய் தாக்கியிருந்தது. நிறைய மக்கள் இறந்தனர். அரசர் செய்வதறியாது திகைத்தார். அப்போதுதான் வெயிலுகந்த காளியம்மனுக்கு நாடகம் நடத்தி விழா கொண்டாடினால் நோய் தீரும் என்றார்கள். திருமலை நாயக்கர் வலையன் குளம், நல்லர் என்ற இரு கிராமங்களிலிருந்து அழைத்து வந்து கூத்து நடத்தினார்.

உடனேயே மதுரையில் அம்மை நோயின் தாக்கம் உடனடியாக குறைந்தது. இன்றும் இக்கோயிலில் அம்மை நோயிலிருந்து சகல பிரச்னைகளுக்கும் வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். பெண்கள் திருவிழாக்காலங்களில் காவடி எடுத்தல், தீச்சட்டி தூக்கி வருதல், மஞ்சள் ஆடை, வேப்பிலை தாங்கி ஈர உடையுடன் வந்து வணங்குகின்றனர். திருப்பரங்குன்றம் தென் கண்மாய் ஓரத்தில் ரயில் பாதைக்கும் சாலைப் போக்குவரத்துப் பாதைக்கும் நடுவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

Tags : Cova ,Mariamman ,
× RELATED அம்மன் தரிசனம்: சமயபுரம் மாரியம்மன்