×

நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...

சிவன், முருகன், ராமன், என்று அன் விகுதியுடன் அழைக்கும் போக்கை நாகர் ஐயனார் பிள்ளையார். சூரியர், சந்திரர், இந்திரர் ஆகியவற்றில் காண இயலாது காரணம், முதலில் சொல்லப்பட்டவை புராண தெய்வங்கள் பின்னர் சுட்டப்பட்டவை மக்களின் நம்பிக்கை சார்ந்த வழக்கலாறுகள். இவற்றில் நாகர் வழிபாடு என்பது நாகர் இனத்துக்கு உரியது. மனித வரலாற்றின் முதல் இனமான தமிழ் இனம் தொடக்கத்தில் குமரிக் கண்டத்தில் வாழ்ந்தபோது தம்மை நாகர் இனம் என்று அழைத்தது. தமிழ் என்ற சொல் வழக்கு காலத்தால் பிந்தியது.

இன்றும் தென் மாவட்டங்களான கன்யாகுமரியிலும் நாகர்கோயிலிலும் நாகத்தை நாகர் அம்மை என்றே குறிக்கின்றனர். மற்ற ஊர்களைப்போல நாகம்மா என்றோ நாகாத்தம்மா என்றோ குறிப்பிடுவது கிடையாது. ஆண், பெண் நாகங்களை நாகராஜா, நாகர் அம்மை என்றே அழைக்கின்றனர். ஆதியில் மக்கள் தாம் வணங்கிய நாகத்தின் பெயரால் அதனையே தனது குலமுதுவராகக் [totem] கொண்டு தம்மை நாகர் இனம் என்றே சுட்டினர். வி. கனகசபை பிள்ளை இக்கருத்தை தனது Tamils, eighteen hundred years ago என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

கடல்கோளால் சிதறிய நாகர் கூட்டம் கடல்கோள் மூன்று முறை வந்து தென்பகுதியில் மனித சமுதாயம் தோன்றிய நிலப்பரப்பைத்  துண்டாடியதாக அறிகிறோம். அப்போது ஆங்காங்கே எஞ்சிய தீவுகளான அந்தமான் நிகோபார், ஜாவா, கம்போடியா, இலங்கை, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மக்கள் இன்றும் தம்மை நாகர் என்றே அழைக்கின்றனர். நாகவரம் [நக்கவரம்] என்பது நிகோபார் தீவின் இயற்பெயராகும். புத்தம் அறிமுகமாகி சங்கங்கள் தோன்றிய பிறகு எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியம்...

உலக வழக்கும் நாடக வழக்கும்
பாடல் சான்ற புலனெறி வழக்கு

என்று குறிப்பிடுவதில் உலக வழக்கு என்பது மண்ணின் மைந்தர் [நாகர்] பின்பற்றிய விரிவான உலக வழக்கு ஆகும். நாடக வழக்கு என்பது அப்போது சான்றோர் மற்றும் சமயப் பெரியவர்களால் புகுத்தப்பட்ட வழக்கு, புலனெறி வழக்கு என்பது புனையப்பட்ட இலக்கிய வழக்கு எனப்படும். நாகர் என்று தனியாகப் பெயர் குறிப்பிடவில்லை எனினும் அவர்களின் மரபும் பண்பாடும் உலக வழக்கு எனப் போற்றப்பட்டதை அறிகிறோம்.

ஏன் நாகத்தை வழிபட்டனர்?

நாகம் பூமிக்குள் இருந்து வந்து அங்கேயே சென்று மறைந்து விடுவதால் மக்கள் தம் மூதாதையரும் அங்கிருந்து வந்து அங்கேயே சென்று விட்டனர் என்று காரண, காரிய இயைபுடன் நம்பி வந்தனர். தொன்மம் என்பது ஆதிமனிதனின் அறிவியல் தேடல் என்பர் தொன்மவியல் அறிஞர். மண், மலை, கடல் போன்ற இயற்கை கூறுகளில் இருந்து தோன்றி திரும்பவும் அவற்றுக்குள்போய் மறைவதைக் கண்ட மனிதன் அஞ்சி சூரியன், சந்திரன், பாம்பு ஆகியவற்றை வழிபடத் தொடங்கினான். வழிபாடு வணக்கம் என்பன ஆரம்பத்தில் அச்சத்தின் வெளிப்பாடே ஆகும் பின்னர் அது மரியாதை நிமித்தமாகவும் நடைபெற்றது.

நாகர் இனத்தின் தலைவனாக பிடாரன் இருந்தான். பிடாரி நாகர் இனத்தின் தலைவி அல்லது வழிபடு தெய்வம் ஆவாள். பிடாரன் பிற்காலத்தில் சிவனாக உயர்வு பெற்றான். பாம்புகள் அவன் தலையிலும் மார்பிலும் கைகளிலும் சுற்றித் தவழ்ந்தன. பிடாரி காளியாக உருமாற்றம் பெற்றாள். நாகர் வழிபாடு ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என உலகின் அனைத்துப் பக்திகளிலும் ஆதிகால மனிதர்களிடமிருந்து தொடங்கி நிறுவனச் சமயங்களின் வரவு வரை தனிச் செல்வாக்கு பெற்றிருந்தது.  

புற்று வழிபாடு

நாகங்கள் கறையான் கட்டும் புற்றுக்களில்போய் குடிகொள்ளும். புற்றுக்கள் பிரமிடுபோல மேல்நோக்கி வளர்ந்திருக்கும். [முன்பு நாம் பார்த்த மர வழிபாட்டிலும் வானத்தை நோக்கிச் செல்லும் மரத்தைக்  கண்டு மனிதன் அஞ்சி வழிபட்டதை அறிந்தோம்]. மரவழிபாட்டின் தொடர்ச்சியாகவே இந்து சமயக் கோயில் கட்டிடக்கலை கொடி மரம் அமைத்து அது பிரபஞ்ச சக்தியை பக்தர்களுக்கு வழங்கும் என்ற கருத்தியலை உருவாக்கியது. மற்ற சமய வழிபாட்டுத் தலங்களிலும் வானை நோக்கிய முகடுகளும் கோபுரங்களும் மினராக்களும் பகோடாக்களும் உருவாயின.

புற்றுகளின் அறிவியல் தன்மை குறித்து Hutchinson 20th century Encyclopedia , The  mounds of magnetic termites in the northern  Australia reach some five metre [fifteen feet] and are aligned north - south.In this way they spared the burning  heat of the mid day sun, but the broad sides of the nest catch the warmth in, early morning and evening [p.1210] என்று குறிப்பிடுகிறது. புற்றின் அடிபாகத்தில் அங்கு மண்ணில் இருக்கும் வெப்பநிலை காலையிலும் மாலையிலும் புற்றைச் சுற்றி வரும் பெண்களின் பாதத்தில் முடிவுறும் அனைத்து நரம்புகளையும் தூண்டி செயலூக்கம் அளிக்கிறது. இதனால் புற்றை சுற்றி வருவோருக்கு நோய் தீர்கிறது; மனம் தெளிவடைகிறது; கர்ப்பம்  தங்காதவர்களுக்கு கர்ப்பம் தங்குகிறது. புற்றுக்குள் உறையும் பாம்புகள் முட்டை பால் அருந்தும் என பல பக்தைகள் நம்புகின்றனர். இவை இரண்டையும் பாம்பு தீண்டாது.

நாகர் இனமும் இந்திரனும்

நாகர் இனத் தலைவனாக மன்னனாக இந்திரன் விளங்கினான். இந்திரனுக்கு சாபம் கொடுத்த கதை தோன்றிய காலத்தில் நாகர் இனமும் தன் பெயரை இழந்து விட்டது. இனப்பெயர் மறைந்ததும் பெரு மன்னர்களின் பெயரால் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று அழைக்கத் தொடங்கினர். நாகர் இனத்தின் தலைவனான இந்திரனைத் தனது தலைவனாகப் பவுத்த சமயம் ஏற்றுக் கொண்டது. சமணமும் இந்திரனைப் போற்றியது. இந்து சமயங்களான சைவமும் வைணவமும் இந்திரனை எதிர்த்து இழிவாகப் பேசின.

நகரத்தின் காவல் தெய்வம்  

கீழைநாடுகளின் ஏதென்ஸ் எனப்படும் மதுரையை சுற்றிப்படுத்து நான்கு மால் (நான்கு பக்கமும் எல்லையை வரையறுத்தது) கட்டியது ஒரு நாகம் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இவ்வாறு கிரீஸ் நாட்டின் காவல் நகரங்களுள் ஒன்றான ஏதென்ஸ் நகரின் கோட்டையை சுற்றி படுத்து காவல் காப்பதும் நாகப் பாம்பு என்று வரலாற்றறிஞர் ஹீரோடோட்டஸ் கூறியுள்ளார். நகரங்களுக்கும் காவல் தெய்வமாக நாகம் விளங்கும் கதைகள் நாட்டுப் புறத்திலும் உண்டு.

ஜோடிப் பாம்புகள் வழிபாடு  

பாம்பு என்பது ஆதியில் இருந்தே வளமைக் குறியீடாகவே உணரப்பட்டது. பாம்பை ஆண்குறியின் வலிமையாகவும் [phallic symbol] பாம்பு அதிக எண்ணிக்கையில் குட்டிகள் போடுவதை பிள்ளைப் பேற்றுக்கான வளமைச் சின்னமாகவும் [fertility symbol] கருதினர். படமெடுத்தாடும் பாம்பின் தலைப்பகுதி சங்க இலக்கியத்தில் பெண்ணுறுப்புக்கு உவமையாக பயன்படுத்தப்பட்டது.

பாம்பு என்பது ஆணையும் குறித்தது பெண்ணையும் குறித்தது. சி ஜே யூங் என்னும் உளவியல் அறிவியலார் பாம்பை பாலியலுக்கான கூட்டு நனவிலித்தன்மையின் மூலப் படைப்பாகக் [ARCHETYPE] கருதுகிறார். காலம் காலமாக பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனின் அடிமனதில் பாம்பு என்றாலே அது புணர்ச்சி வடிவில் பிண்ணி பிணைந்து நிமிர்ந்து நிற்பதாகப் பதிந்து விட்டது.

எனவே, பாம்பு கனவில் வருவதும் பாலியல் தேடலுக்கான அறிகுறி என்று சொல்லி வந்தனர். அரவணைத்து நிற்கும் பாம்புகளை வணங்கினால் [பாலியல் தோட்டம் அதிகரித்து] குழந்தைபேறு கிட்டும் என்ற நம்பிக்கையும் நிலைத்து விட்டது. உலகச் சமயங்கள் அனைத்திலும் பெண்ணின் உடம்பைச் சுற்றி பாம்புகள் பிண்ணிப் பிணைந்திருப்பது அவளது பாலியல் திறனையும் அதற்கு அடுத்த நிலையில் அவளது  கரு வளத்தையும் குறிக்கும் தெய்வ உருவங்களாக போற்றப்பட்டன. ஐரோப்பாவில் கிறிஸ்துவம் பரவுவதற்கு முன்பு வணங்கப்பட்ட பல பெண் தெய்வங்கள் பாம்புகளோடு காட்சியளித்தன.  

உலகம் முழுக்க நாகர் வழிபாடு ஒரு காலத்தில் இருந்தது. நாகத்தைக் கிறிஸ்துவ இஸ்லாமிய சமயங்கள் சாத்தான்/ சைத்தான் என்று சொல்லி அதன் வழிபாட்டுத் தகுதியைப் போக்கி விட்டன. விலக்கப்பட்ட கனியை உண்ணும்படி ஏவாளை தூண்டியது ஒருபாம்பு. இந்த பாம்பை சைத்தானின் உருவமாகக் கருதுகின்றனர். இதனால் இந்த பாம்புகளுக்கு இரண்டு இறைவனால் கொடுக்கப்பட்டன. இந்தியச் சமயங்கள் தமது நாட்டுப்புற வழிபாட்டு மரபை விட்டுவிடாமல் இருப்பதால் நாகர் வழிபாடு உள்வாங்கி கொள்ளப்பட்டது.

பவுத்த மதத்தில் நாகர் வழிபாடு பிரசித்தி பெற்றது. இலங்கையிலும் ஜாவா தீவிலும் நாக பூஷணி என்ற பெண் தெய்வம் பவுத்த மரபின் செல்வாக்கு படைத்த தெய்வம் ஆகும். சமண மதத்தில் நயினார் கோயிலில் நாகர் வழிபாடு நடந்தது. நாகர்கள் வாழ்ந்த தீவு நயினார் தீவு என்று அழைக்கப்பட்டது. சைவத்திலும் வைணவத்திலும் சிவனுக்கு அணிகலனாகவும் பெருமாளுக்குப் படுக்கையாகவும் நாகர் இடம்பெற்றுள்ளது. பிள்ளையாருக்கு இடையணியாகவும் அம்மனுக்குக் குடையாகவும் நாகர் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

மரணம் மற்றும் மறு பிறப்பின் குறியீடு நாகம் பூமிக்குள் இருந்து வருவதால் அது இறந்தோரின் ஆவி என்று நம்பினார்கள். நாகம் சட்டை உரித்து புத்துருப் பெறுவதால் அது  மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பதாக நம்பினர். நாகத்தை தொப்புள் கொடியோடு இணைத்து நோக்கியும் அதனை பிறப்பின் குறியீடாகக் கருதினர்.

நாகரி எழுத்து

தொல்காப்பியர் அதங்கோட்டாசான் முன்னிலையில் தனது நூலை அரங்கேற்றினார். அவர் தமது நூலில் என்ப, என்மனார் புலவர் என்று சுட்டியிருப்பது அவருக்கு முன்பு வாழ்ந்த சான்றோர்களின் கருத்தைக் குறிக்கிறது. இரண்டாம் சங்கத்தின் தலைவராக அகத்தியர் இருந்தார். அகத்தியர்
என்பவர் அவலோகதீஸ்வரர் என்ற போதிசத்வர் என்பது ஆராய்ச்சியில் உறுதியாகிவிட்டது. தொல்காப்பியர் காலத்தில் பவுத்த, சமண சமயங்கள் தமிழகம் வந்துவிட்டன. அதற்கு முன்பு இங்கு நாகர் எழுத்துக்களும் இலக்கியங்களும் இருந்தன.

அவர் என்ப என்மனார் புலவர் என்று குறிப்பிட்டது நாகர் எழுத்தில் அமைந்த இலக்கியங்களை எனக் கருத இடமுண்டு. நாகர் பயன்படுத்திய எழுத்துக்கள் நாகரி எனப்பட்டது. இதில் இருந்து சில மாற்றங்களுடன் உருவானது தேவ நாகரி ஆகும். தேவ நாகரியின் அட்சரங்களைக் கடன் வாங்கிக்கொண்டு பிற இந்திய மொழிகள் தம்மை சமஸ்கிருதமயமாக்கின. தமிழ் அவ்வாறு செய்யவில்லை. தற்சமம் தற்பவம் முறைகளைக் கையாண்டு ஒலிப்பூ முறியை தகவமைத்து கொண்டது.
 
நாகரிகம்

நாகர்களின் புற வாழ்க்கை முறை முறை நாகரிகம் எனப்பட்டது. அக வாழ்க்கை முறை பண்பாடு எனப்பட்டது. நாகரிகம் என்ற சொல் நகர்கள் அமைத்து வாழ்ந்தவர் வழியாகத் தோன்றியது என்பர். நகர் என்பது காவல் அரண்களைக் கொண்ட ஊர் என்பர். இத்தகைய ஊர்களில் வாழ்ந்தோர் நாகர்கள் ஆவர். [நான் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த கண் மருத்துவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும்போது இக்கருத்தைச் சொல்லி தமிழ், மலையாளம், இந்தி ,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு இடையிலான எழுத்துக்களின் உருவ ஒற்றுமையை எடுத்துக்காட்டினேன். அவர்கள் வியந்து போயினர்]

 (தொடரும்)

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags : Nagar ,
× RELATED மடிப்பாக்கத்தில் தொடர் மின்தடை:...