×

கறி இட்லியில் கலக்கும் செய்தி வாசிப்பாளர்

பாரம்பரிய சுவையில் நயம் கறி இட்லி உணவகம்சென்னை முகப்பேரில் உள்ள ஜெ.ஜெ.நகர் பகுதியில்,  இரவு மட்டுமே இயங்கி வரும்  இந்த உணவகத்தில், மாலை  6மணிக்கே  கூட்டம் அலைமோத தொடங்கிவிடுகிறது. சுடச்சுட கறி இட்லியை பரிமாறிக் கொண்டே, உணவகம் பிறந்த கதையை  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்  முன்னாள்  செய்தி வாசிப்பாளரான வசந்த்சுப்ரமணியம். 2013ல் மீடியாவுக்குள் வந்தேன்.  செய்தி வாசிப்பு, செய்தி சேகரிப்பு, நியூஸ் கிரியேட்டிங்னு  எல்லாம் நல்லாவே போய்க் கொண்டிருந்தது. இருந்தாலும், எனக்குள்ள சின்ன வயதிலிருந்தே ஒளிர்ந்து கொண்டிருந்த சொந்தத் தொழில் எனும்  கனவுத் தீ என்னை துரத்திக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இதுதான் மீடியாவில் இருந்து வெளியே வர சரியான தருணம் என்று தோன்ற வெளியே வந்துவிட்டேன். ஆனால்,  என்ன தொழில்  தொடங்குவது என்பது விளங்கவில்லை. அப்பா சிவகாசியில  பிரின்ட்டிங்பிரஸ்  வைத்து நடத்தி வருகிறார்.  அதனால்  அப்பாவுடன் சேர்ந்து செயல்படலாமா என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. ஆனால்,  அதில் எனது   தனித்துவம் தெரியாமல் போய்விடுமே என்பதால், வேறு ஏதும்  செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.  அப்போது என் மனைவிதான்  உணவகம் தொடங்கலாமே என ஆலோசனை வழங்கினார். காரணம், சிறுவயதில் இருந்தே எனக்கு நன்றாக சமைக்க  வரும்.  அம்மாவுடன் அதிக நேரம் சமையலறையில் நேரத்தை கழித்ததால்  சமையல் செய்யவும் பழகியிருந்தேன். எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். என்பதால் அவ்வப்போது அவர்களுக்கு  விதவிதமாக  சமைத்து கொடுத்து பழகியதால், அதிகளவில் சமைக்கவும் எனக்கு  தெரியும். நான் மட்டுமல்ல, அப்பா முதல் கொண்டு எங்கள் வீட்டில் ஆண்கள்  அனைவரும் நன்றாகவே சமைப்போம். இதனால், ஆணுக்கு அழகு சமையல் செய்வது என்றளவுக்கு எனக்கு சமைப்பது பிடிக்கும். எனவே, உணவகம் தொடங்குவதில் உறுதியானோம். சரி உணவகம் தொடங்குவது முடிவாகிவிட்டது. அதற்கு நல்லதொரு பெயர் வேண்டுமே, அது தமிழ் வார்த்தையாக இருக்க வேண்டும் என்று நிறைய தேடினோம். அப்படி உருவானதுதான் நயம். நயம் என்றால் மேன்மை, உயர்வான, மென்மையான இப்படி பல பொருள்கள் இருக்கிறது. அடுத்தபடியாக எங்கள் உணவகத்தின் டிரேட் மார்க்காக ஒரு உணவை கொண்டு வர நினைத்தோம். அதற்கு யோசித்தபோது, மதுரையின் பிரபல உணவான கறிதோசை நினைவுக்கு வர, அதிலிருந்து வித்தியாசப்படுத்த கறி இட்லியை தேர்வு செய்தோம். எனவே, நயம் சொல்லுடன் கறி இட்லியையும் சேர்த்தோம். இட்லியை தேர்வு செய்தது ஏனென்றால்,  பொதுவாக,  இட்லி என்பது  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களாலும் பரிந்துரைக்கக் கூடிய ஓர் உணவு. மேலும்,  அரிசியால்  சமைக்கப்படும் தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில் இட்லிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. எனவேதான், இட்லியை வைத்து வித்தியாசமாக முயற்சி செய்யலாமே என கறி இட்லியை தேர்வு செய்தோம். ணவகத்தை தொடங்கியதுமே கொரோனா லாக்டவுன் போட்டுவிட்டார்கள். எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற நிலையில்,  உணவகங்களுக்கு தடை இல்லை என்பது சற்று ஆறுதல் அளித்தது. அதே சமயம் மக்கள் நடமாட்டம் இல்லாதபோது, உணவகத்துக்கு எப்படி வருவார்கள் என்று பயந்தோம். ஆனால், தொடங்கிய சில நாட்களில் மக்கள் வரத் தொடங்கினர். இதனால், பெரிய நஷ்டம் ஏற்படவில்லை. ரோனாவின் பாதிப்பால்  பல உணவகங்கள் மூடிய நிலையில் கொரோனா காலகட்டத்திலேயே  தொடங்கியதால், அதனை சமாளிக்க நாங்கள் பழகியிருந்தோம். பின்னர், படிப்படியாக  லாக்டவுன்  தளர்வு ஏற்பட்டு, மக்கள்  ஓரளவுக்கு  வரத் தொடங்கினார்கள்.  சிறிதளவு  லாபமும் வர ஆரம்பித்தது. கிடைத்த லாபத்தை  எங்கள்  செலவுக்கு எடுத்துக் கொள்ளாமல், அதைவைத்து தற்போது  வேறு ஒரு  கிளையை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் தொடங்கியிருக்கிறோம். எங்கள் உணவகத்தின் ஸ்பெஷல் கறி இட்லியும் – கோழி ரசமும்தான். இதைத்தவிர,  கறி தோசை. வாழை இலை பரோட்டா, மட்டன் சுக்கா, போன்லெஸ் சிக்கன் தவா ப்ரை, மீன் குழம்பு போன்றவற்றிற்கு எங்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. மாலை 6 மணிக்கு கடை தொடங்கினால்,  7.30 – 8 மணிக்கெல்லாம் கறி இட்லி விற்று தீர்ந்துவிடுகிறது. அதன்பிறகு வந்து கேட்பவர்களுக்கு மறுநாள்தான் கறி இட்லி கிடைக்கும். அதுபோன்று  எங்கள் உணவகத்தின் சால்னாவிற்கும் நல்ல  வரவேற்பு உண்டு. ஏனென்றால், ஏனோ தானோ என்று இல்லாமல், சால்னாவிற்கு நிறையவே நாங்கள் மெனக்கெடுகிறோம். அதற்காகவே தனித்துவமான தரமான மசாலாவை தயார் செய்கிறோம். அதுவும் அதன் சுவைக்கு ஒரு காரணம். சால்னா என்றில்லை மற்ற  உணவுகளுக்கும் மசாலா நாங்களேதான் தயார் செய்கிறோம். இதில் என் அத்தையின் உழைப்பு நிறைய இருக்கிறது. அவரது அறிவுரைப்படி மசாலா தயார் செய்கிறோம். அதுபோல் முழுக்க முழுக்க சமையலுக்கு கடலெண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறோம். இதுவே, எங்களது உணவுகளுக்கு  தனிச்சுவையைத் தருகிறது. இந்த சுவைக்காகவே, எங்கிருந்து எல்லாமோ மக்கள் தேடி வருகிறார்கள். அதுவும் குடும்பத்துடன் வந்து உணவருந்திவிட்டு போகிறார்கள். மீடியாவில் இருந்து வெளியே வரும்போது ஒரு தயக்கத்துடன்தான் வந்தேன். தற்போது, பெரிய லாபம் இல்லை என்றாலும், நஷ்டமும் இல்லை. இதுவே, என் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதுபோல், தற்போது பதினைந்து பேருக்கு நான் வேலை கொடுக்கும் இடத்தில் இருக்கிறேன். இதுவே எங்களது வெற்றியாக பார்க்கிறோம். தொகுப்பு:- ஸ்ரீதேவி மட்டன்/ கோழி கறி இட்லி செய்முறைதேவை:இட்லி மாவு  – 1  கிண்ணம்கொத்துக்கறி ( சிக்கன் அல்லது மட்டன்) –  100 கிராம்இஞ்சி – பூண்டு விழுது – 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள்  – 1 தேக்கரண்டிசீரகத்தூள் – 1 தேக்கரண்டிமல்லித்தூள்  – 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு – தேவைக்கேற்பசோம்புத்தூள் – அரைத் தேக்கரண்டிசின்ன வெங்காயம் – 1 கிண்ணம்.செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், அதில் சுத்தம் செய்த சிக்கன் அல்லது மட்டன்  கொத்துக்கறியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர், அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள்,  சீரகத்தூள்,  மல்லித்தூள், சோம்புத்தூள் சேர்த்து நன்கு வதக்கிவிட்டு. சிறிதளவு தண்ணீர் விட்டு மூடிவிடவும். பின்னர், கறி நன்கு வெந்து தண்ணீர் சுண்டி சுருள வந்ததும். சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இட்லித் தட்டில் ஒரு கரண்டி கறி மசாலாவை வைத்து, அதன் மேல் ஒரு கரண்டி இட்லி மாவை ஊற்றி இட்லியாக வேக வைத்து எடுத்தால் சுவையான கறி இட்லி தயார்….

The post கறி இட்லியில் கலக்கும் செய்தி வாசிப்பாளர் appeared first on Dinakaran.

Tags : Curry Idli ,Nayam Curry Idli ,J.J. Nagar ,Chennai Mukapper ,
× RELATED சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: 4 சிறுவர்கள் கைது