×

சிவாஜி டூ சிவகார்த்திகேயன் அத்தோவுக்கு ரெகுலர் கஸ்டமர்

சென்னை பாரிமுனை அத்தோகடைகள்தமிழர்களுக்கு என்று தனித்த பாரம்பரிய உணவு உண்டு. என்றாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அந்தந்த ஊர் பருவநிலைக்குத் தகுந்தபடியும், அங்கு கிடைக்கும் உணவுகளில் இந்திய மசாலாக்களைக் கலந்து சாப்பிடுவதை காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இப்படி உருவான கலப்பின உணவுகள் ஒரு கட்டத்துக்குப் பிறகு தமிழகத்திலும் புகழ்பெறத் தொடங்கின. அந்த வகையில் திரவியம் தேட பர்மா சென்ற தமிழ் மக்கள், அங்கு அத்தோவை சுவைத்து தங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டனர். கூடவே அவர்களின் அஜினோ மோட்டோவைத் தவிர்த்துவிட்டு நம்ம ஊர் பெருங்காயம், மிளகு, மலைப்பூண்டு… மெருகேற்றினர். நமக்கு எப்படி காலையும் இரவும் இட்லி, தோசை டிபனோ அப்படி பர்மா மக்களுக்கு அத்தோ, மொய்ஜோ, பேஜோ, கவ்சோ… இவை அனைத்தும் நூடுல்ஸில் தயாராகும் உணவுகள்! “இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பர்மாவை இராணுவம் கைப்பற்றியது. இதனையடுத்து அந்நாட்டில் இருந்த எங்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பினர். அப்படி வந்த எங்களை தமிழகம் எங்கும் பரவலாக குடியிருப்புகள் அமைத்து தங்க வைத்தனர். அப்படி வியாசர்பாடியில் தங்கியவர்கள் நாங்கள். பர்மாவில் இருந்து வெளியேற்றப்பட்ட எங்களால் 2 பவுன் தங்கமும் 25 ரூபாய் பணமும் மட்டுமே கொண்டு வர முடிந்தது. அவ்வளவுதான் நபர் ஒருவருக்கு அனுமதிக்கப்பட்டது. கெஞ்சிக் கேட்டபிறகு பெண்களின் கழுத்தில் இருந்த தாலியை மட்டும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டனர். ஒரு கப்பலில் 1500 பேர் பயணித்து ரங்கூனில் இருந்து சென்னை வந்து சேர்ந்தோம். வெறும் கையுடன் வந்தவர்கள் உடல் உழைப்பை நம்ப ஆரம்பித்தோம். இப்படி அகதிகளாக தமிழகம் வந்த பர்மிய தமிழர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் அத்தோ கடைகள். நாளடைவில் தமிழக மக்களும் அத்தோ கடைகளைத் தேடி வர ஆரம்பித்தனர்…’’ என நீண்ட வரலாற்றை சுருக்கமாகச் சொல்கிறார் அப்துல் ஆசிஸ். சென்னை பாரிமுனையின் இரண்டாவது கடற்கரைச் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட அத்தோ கடைகள் உள்ளன. அதில் அப்துல் ஆசிஸின் அத்தோகடை, நாற்பது வருடங்களாக இயங்கிவருகிறது. சென்னை பங்குச்சந்தை அலுவலகத்தை ஒட்டி வரிசையாக அத்தோகடைகள் இருக்கும் அனைத்தும் தள்ளுவண்டி கடைதான். பெரிய சைஸ் தோசைக் கல்லில் நூடுல்ஸ், புதினா, எலுமிச்சை, முட்டைக்கோஸ், பூண்டு, புளித்தண்ணீர், வெங்காயம்… என அடுக்கி வைத்துள்ளனர். அத்தோ என்பது சமைக்கப்படாத பச்சைக் கலவை உணவுதான். ஆனால், சாப்பிடும்போது பச்சை வாசம் தெரியாது. இந்தக் கலவையில் எந்தளவுக்கு கைப்பக்குவம் சரியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ருசி இருக்கும். அழகிய பீங்கான் தட்டில் ஒரு அத்தோவும், வறுத்த வெங்காயம் பூண்டு மசாலா சேர்த்த முட்டையும் சாப்பிட்டால் அப்படியொரு சுவை! ‘‘1981ல இங்க கடையை ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடி வியாசர்பாடில அப்பா முகமது இஸ்மாயிலும் அம்மா மைதீன் பிவியும் பர்மா காலனி மக்களுக்காக கடை நடத்தினாங்க. அம்மாகிட்ட இருந்துதான் பர்மா உணவுத் தயாரிப்பை கத்துக்கிட்டேன். சைவ உணவு கேட்கறவங்களுக்கு முட்டை மட்டும் செஞ்சு கொடுப்போம். சில பர்மிய உணவுக்கு முட்டை அவசியம். அதை தவிர்க்க முடியாது. பர்மா உணவோட சிறப்பம்சம் வறுத்த வெங்காயம், பூண்டுதான். கூடவே தரமான நல்லெண்ணெய். இந்த மூணும் இல்லைனா பர்மிய உணவே இல்ல! இதோட நூடுல்ஸ் சேர்ந்தது பேஜோ. அரிசி, கடலைப் பருப்புல செய்ற தட்டுவடை, பேஜோ, வாழைத்தண்டு சூப் கட்டாயம் இருக்கும். பர்மாவுல புளி சேர்க்க மாட்டாங்க. எலுமிச்சம்பழம்தான். காய்ந்த மிளகாயை முக்கால் பதத்துக்கு அரைச்சு பயன்படுத்துவோம். சிவாஜில ஆரம்பிச்சு சிவகார்த்திகேயன் வரை எல்லா நடிகர்களும் எங்க கடை வாடிக்கையாளர்கள்தான். நண்பர் ஒருத்தர் சாந்தி தியேட்டர் வளாகத்துல லெதர் வியாபாரம் செஞ்சுட்டு இருந்தார். அடிக்கடி இங்க வந்து சாப்பிடுவார். ஒருமுறை நடிகர் திலகத்துகிட்ட நம்ம கடை அத்தோ பத்தி சொல்லியிருக்கார். அப்ப போன் எல்லாம் கிடையாது. சைக்கிள்ல வேகமா வந்து சிவாஜி சார் சாப்பிட கேட்கறார்னு சொன்னார். உடனே புதுப் பாத்திரத்துல அத்தோ செஞ்சு போட்டுக் கொடுத்தேன். சாப்பிட்ட சிவாஜி சார் ரொம்ப பாராட்டினார். அதுக்கு அப்புறம் நானே நேரடியா பலமுறை அவருக்கு டெலிவரி செஞ்சிருக்கேன். தனியார் தொலைக்காட்சில நிகழ்ச்சி செஞ்சுட்டு இருந்தப்ப ஷூட்டிங் முடிச்சுட்டு இங்க சாப்பிட சிவகார்த்திகேயன் வருவார். நைட் ஷூட் இருந்ததுனா கேரியர் கொடுத்து இயக்குநர் ஷங்கர் அனுப்புவார். நல்ல உணவைத் தேடித் தேடி அவர் சாப்பிடுவார். இயக்குநர் மாதேஷ் பல வருட வாடிக்கையாளர். சந்தானம், மயில்சாமி எல்லாம் ரெகுலர் கஸ்டமர்ஸ். உண்மையைச் சொல்லணும்னா அத்தோ கடைனால பெரிய அளவுல லாபம் இல்ல. மூலப் பொருட்கள் எல்லாம் விலையேறிடுச்சு. ரெகுலர் வாடிக்கையாளர்களுக்காகத்தான் தொடர்ந்து கடை நடத்தறேன். நாலு நாள் கடை பூட்டியிருந்தா போன் செஞ்சு திட்டறாங்க! இந்த அன்புதான் எங்களை தொடர்ந்து இயங்க வைக்குது!’’ என்கிறார் அப்துல் ஆசிஸ். விதவிதமா ருசிக்க…சென்னை பாரிமுனையில் பத்துக்கும் மேற்பட்ட அத்தோ கடைகள் உள்ளன. மாலை 4 மணிக்கு கடையை ஆரம்பித்து இரவு 12 மணி வரை நடத்துகிறார்கள். அத்தோ, சீஜோ, மொய்ங்கா… ஆகியவை இங்கு கிடைக்கின்றன. ஒவ்வொரு கடைக்கும் தனித்த ருசி அவர்களுக்கே உண்டான கை பக்குவத்தில் சமைக்கின்றனர். எல்லாமே  நூடுல்ஸ் வகையறாக்கள்தான். அத்தோவுக்கு ஆரஞ்சு நிற நூடுல்ஸ். சீஜோவுக்கு பிரௌன் கலர். மொய்ங்காவுக்கு வெள்ளை. இவற்றில் மசாலா பதத்தில் வெரைட்டி காண்பிக்கிறார்கள். பேஜோ இல்லாத உணவுகளே இல்லை. அரிசிமாவு, கடலைப்பருப்பு சேர்த்து மொறுமொறுப்பாக இந்த வடையை பொரித்தெடுக்கிறார்கள். முட்டை மசாலாவும் இங்கு ஃபேமஸ். அவித்த முட்டையை நடுவில் கீறி, நன்றாக வறுத்த வெங்காயம், பூண்டு, பாதியளவு அரைத்த வரமிளகாய்த்தூள், கொத்தமல்லியை அள்ளி வைத்து புளித்தண்ணீர் ஒரு கரண்டி, நல்லெண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி, கிண்ணத்தில் வைத்துத் தருகிறார்கள். அதிகப்படியான இஞ்சி சேர்த்து பூண்டுக் கலவையுடன் செய்யப்பட்ட வாழைத்தண்டு சூப் இவர்களது சிறப்பு. அத்தோசாதா நூடுல்ஸ் – 300 கிராம் முட்டைக்கோஸ் – 2 கப்வெங்காயம் (நறுக்கியது) – 200 கிராம்பூண்டு – 50 கிராம்கடலை மாவு தூள் – 2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 10கொத்தமல்லி – சிறிதளவுஎலுமிச்சைச் சாறு – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 75 கிராம்பர்மா பக்குவம்: பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின்னர் தண்ணீரை வடித்து அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஆறவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக நறுக்கி எண்ணெயில் பொன்வறுவலாக பொரிக்கவும். பின்னர் காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். தனியாக ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவும். கடலைமாவு, வறுத்த வெங்காயம், பூண்டு என மேலே கூறிய மற்ற பொருட்களைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்துக்குத் தேவையான அளவு போட்டுக்கொள்ளவும். இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கையால் கலக்கவும்.வாழைத்தண்டு சூப் வாழைத் தண்டு – 1பாசிப்பருப்பு – 200 கிராம்பச்சை மிளகாய் – 5காய்ந்த மிளகாய் – 2தக்காளி – 1சின்ன வெங்காயம் – 100 கிராம்இஞ்சி – பெரிய துண்டுபூண்டு – 5 பல்சீரகம் – 1 சிட்டிகைபெருங்காயத்தூள் – 1/4 சிட்டிகைமஞ்சள் தூள் – 1/2 சிட்டிகைகடுகு – சிறிதுஉளுந்தம்பருப்பு – சிறிதுநல்லெண்ணெய் – 1 தேக்கரண்டிதேங்காய் – ஒரு மூடியில் பாதி துருவியதுஉப்பு – தேவைக்கேற்பகறிவேப்பிலை – சிறிதுகொத்தமல்லி – சிறிதுபர்மா பக்குவம்: வாழைத்தண்டை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். சமைக்கும்வரை மோர் கலந்த நீரில் போட்டால் கறுத்துப் போகாமல் இருக்கும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்புடன், மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் சேர்த்து வேகவிடவும். பருப்பு சிறிது வெந்ததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வாழைத்தண்டு நன்கு வெந்ததும் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். தனியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து வாழைத்தண்டு கலவையில் ஊற்றவும். ஒருசேர கொதிக்கும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். இஞ்சி பூண்டுதான் இதன் சிறப்பே. எனவே சற்று அதிகமாகவே சேர்த்துக்கொள்ளலாம். தொகுப்பு:- திலீபன் புகழ்

The post சிவாஜி டூ சிவகார்த்திகேயன் அத்தோவுக்கு ரெகுலர் கஸ்டமர் appeared first on Dinakaran.

Tags : Sivaji ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...