
சென்னை: ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் 2 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இன்னொரு படத்தை சுதா ெகாங்கரா இயக்குகிறார். சிவகார்த்திகேயன், லீலா, அதர்வா முரளி நடிக்கின்றனர். வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படம் என்பதும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை படக்குழு நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி இப்படத்துக்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் 1960களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது கல்லூரி மாணவர்கள் அதில் பங்கேற்ற வரலாற்றை மையமாக வைத்து உருவாகிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, லீலா தோன்றும் காட்சிகளும் போராட்ட காட்சிகளும் படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளது.
