கொச்சி: லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் பான் இந்தியா படம், ‘எல் 2: எம்புரான்’. நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ளார். ‘லூசிஃபர்’, ‘ப்ரோ டாடி’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு 3வது முறை அவர்கள் இணையும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. மம்மூட்டி டீசரை வெளியிட்டார். படக்குழுவினருடன் மோகன்லால், லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ்குமரன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். முக்கிய வேடங்களில் பிருத்விராஜ் சுகுமாரன், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய் குமார், பைஜூ சந்தோஷ் நடித்துள்ளனர்.
முரளி கோபி ஸ்கிரிப்ட் எழுத, தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு வடிவமைப்பு செய்துள்ளது. ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி ஐந்து மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. வடக்கு ஈராக்கில் கைவிடப்பட்ட காரகோஷ் என்ற நகரில் இக்கதை தொடங்குகிறது. ஸ்டீவன் நெடும்பள்ளி என்ற கேரக்டர், ஆசியாவின் சக்தி வாய்ந்த கூலிப்படை தலைவன் அபிராம் குரேஷியை அறிமுகப்படுத்துகிறது. அரசியல் மற்றும் கூலிப்படை உலகில் காணப்படும் அதிகாரம், துரோகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை மோகன்லால் எப்படி கையாண்டு வெற்றிபெறுகிறார் என்பது கதை என்று படக்குழு தெரிவித்தது.
