×

சிவகளை 3ம் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் திறந்து ஆய்வு

ஏரல்: சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் நேற்று திறக்கப்பட்டு உள்ளே இருக்கும் பொருட்கள் குறித்த ஆய்வு பணி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை பரம்பு பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த 2020ல் முதற்கட்ட அகழாய்வு பணியும், 2021 பிப்.26ல் 2ம் கட்ட அகழாய்வு பணியும் நடைபெற்றது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் 77 முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், பெரிய, சிறிய பானைகள், பானை ஓடுகள், வெளிநாட்டு பானை ஓடுகள், நுண் கற்கருவிகள், புடைப்பு சிற்பங்கள் உட்பட அரிய வகை தொல்பொருட்கள் கிடைத்தன. ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இருந்து நெல் மணிகளும் கண்டெடுக்கப்பட்டது. நெல் மணிகளை ஆய்வு செய்ததில் 3200 ஆண்டு பழமையானது என கண்டறியப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 3ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த மார்ச் 30ம் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் சிவகளை பரம்பு, மூலக்கரை ஆகிய இடங்களில் புதையிடப் பகுதியாகவும், பாராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் திரடு ஆகிய பகுதிகள் வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் வட்ட சில்லுகள், வளையல்கள், பாசிமணிகள், தக்களி, முத்திரைகள், எலும்பாலான கூர்முனை கருவிகள், புகைப்பான்கள், சக்கரம், காதணிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட 10 குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை கண்டறியும் பணி நேற்று தொடங்கியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன், சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் ஆகியோரது தலைமையிலான குழுவினர் முதுமக்கள் தாழிகளை திறந்து அதில் இருக்கும் பொருட்களை கண்டறியும் ஆய்வு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் இருந்து கிடைக்க பெறும் பொருட்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் கூறுகையில், ‘‘தொல்லியல் துறையோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மரபணு சோதனை செய்து வருகிறது. இதற்காக மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சிறப்பு ஆய்வு கூடம் தொடங்கப்பட்டுள்ளது. தொல்லியல் அகழாய்வு பணியில் கிடைக்கும் எலும்புகளில் நூறு மாதிரிகளை சோதனை செய்தால் ஒன்று மட்டுமே ஆய்வுக்கு உகந்தவையாக உள்ளது. பயலாஜிக்கல் முறையிலும் கெமிக்கல் முறையிலும் மரபணு சோதனை செய்து வருகிறோம். இதற்கு முந்தைய அகழாய்வு பணியில் கிடைத்த மனித எலும்புகளின் மரபணு சோதனையில் 50 கோடி பீஸ்களில் ஐந்து முதல் 50 லட்சம் வரையே மனித எலும்பு மரபணு சோதனைக்கேற்றார் போல் உள்ளது. மற்றவை பாக்டீரியாக்களாக உள்ளது என்றார். இதில் சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post சிவகளை 3ம் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் திறந்து ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Shivas ,Erel ,Shivalargi ,
× RELATED ஏரலில் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கல்