×

“இறைத்தூதரே, ஏன் அழுகிறீர்கள்?”

துன்பம் ஏற்படும்போது பொறுமையைக் கடைபிடித்தல் என்பது மிக உயர்ந்த பண்பாகும். இறப்பு நிகழும் நிலையில் ஓலமிட்டு அழுவதோ, நெஞ்சிலும் முகத்திலும் அறைந்துகொள்வதோ மார்க்கம் அனுமதிக்காத செயல்கள் ஆகும். மாறாக, பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும், அதன் மூலம் இறையருளை எதிர்பார்க்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

நபிகளார்(ஸல்) கூறினார்கள்: “பொறுமை என்பது துன்பம் ஏற்படும் முதல் கட்டத்தில் கடைபிடிப்பதுதான்.” தம் அன்பு மகள் ஜைனபிடமிருந்து ஓர் அவசரச் செய்தி நபிகளாருக்கு வந்தது. ஜைனபின் மகள்(நபிகளாரின் பேத்தி) இறக்கும் நிலையில் இருப்பதாகவும் நபிகளார் உடனே வரவேண்டும் என்றும் ஜைனப் சொல்லியனுப்பினார்.
செய்தி கொண்டுவந்த மனிதரிடம் இறைத்தூதர் கூறினார்: “ஜைனபுக்கு என் ஸலாம் சொல்லுங்கள். கொடுக்கும் உரிமையும் இறைவனுக்கு உரியது, எடுக்கும் உரிமையும் இறைவனுக்கு உரியது. ஒவ்வொன்றுக்கும் இறைவனிடம் ஒரு தவணை உண்டு. ஆகவே பொறுமையைக் கைக்கொள்ளுமாறும் நன்மையை எதிர்பார்க்குமாறும் ஜைனபிடம் சென்று சொல்லுங்கள்.”

எப்படிப்பட்ட சூழல்! பேத்தி மரணப் படுக்கையில்! பேத்தியின் உயிர் பிரியும் தருணத்தில் இறைத்தூதரான தாத்தா அருகில் இருக்க வேண்டும் என்று மகள் விரும்புகிறார். அந்த இக்கட்டான நிலையிலும் பொறுமையைக் கைக்கொள்ளுமாறும் அதன் மூலம் இறைவனிடம் நன்மையை எதிர்பார்க்குமாறும் தந்தை அறிவுரை கூறுகிறார். செய்தி கொண்டுவந்த மனிதர் நபிகளார் சொன்னதை அப்படியே ஜைனபிடம் கூறுகிறார். “ இல்லை..இல்லை.. என் தந்தையாரை உடனே வரச்சொல்லுங்கள். இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அவர் வந்து என் மகளைப் பார்க்க வேண்டும்” என்கிறார். தகவல் நபிகளாரிடம் சொல்லப்படுகிறது.

உடனே இறைத்தூதர் தம் மகளின் இல்லத்திற்கு விரைந்து சென்றார்கள். மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருந்த  பேத்தியை சிலர் தூக்கிவந்து நபிகளாரின் கையில் கொடுத்தார்கள். பேத்தியின் சிரமத்தைப் பார்த்துப் பாட்டனாரின் உள்ளம் துடிக்காமல் இருக்குமா? நபிகளாரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதைப் பார்த்து அருகில் இருந்த நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே, ஏன் அழுகிறீர்கள்?” கேட்டனர். அப்போது நபியவர்கள்,“ இது இறைவன் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்தும் இரக்க உணர்வாகும். யார் இரக்கம் கொள்கிறார்களோ அவர் மீது இறைவனும் இரக்கம் கொள்வான்” என்று விளக்கினார்கள்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Tags : O Lord ,
× RELATED காமதகனமூர்த்தி