
ஐதராபாத்: ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘டாகு மஹாராஜ்’ படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இது தயாரிப்பாளர் போனி கபூருக்கும், நாகவம்சிக்கும் இடையிலான கருத்து மோதல் என்று சொல்லப்பட்டது. ‘கேம் சேஞ்சர்’, ‘டாகு மஹாராஜ்’ ஆகிய படங்களுக்கு தமன் இசை அமைத்திருந்தார்.
‘டாகு மஹாராஜ்’ பட சக்சஸ்மீட்டில் பேசிய தமன், ‘இன்றைய நிலையில் தயாரிப்பாளர் தனது பட வெற்றியை தனதாக்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் நெகட்டிவிட்டி. தெலுங்கு படவுலகம் பிரகாசமாக இருக்கிறது. மற்ற மொழி தொழில்நுட்பக் கலைஞர்கள் தெலுங்கில் பணியாற்ற ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால், சொந்த திரையுலகையே நாம் அழிக்கிறோம். ரசிகர்களும் சண்டையிடலாம். ஆனால் தயாரிப்பாளரையும், திரையுலகையும் மதிக்க வேண்டும்.
இணையதளத்தில் கேலி மற்றும் கிண்டல்கள், நெகட்டிவ் டேக்கை பார்த்தால் அருவெறுப்பாக இருக்கிறது’ என்று வருத்தப்பட்டார். இதுகுறித்து சிரஞ்சீவி வெளியிட்ட பதிவில், ‘தமன் சொன்ன வார்த்தைகள் இதயத்தை தாக்கும்படி இருந்தது. நீ எப்போதும் சிரித்து பேசுவாய். ஆனால், உனக்குள் இவ்வளவு கவலை இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. சமூக ஊடகத்தை பயன்படுத்துவோர், தங்களுடைய வார்த்தைகளின் தாக்கம் சம்பந்தப்பட்டோருக்கு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்’ என்று அட்வைஸ் செய்துள்ளார்.
