சென்னை: முரளி நடித்த ‘ரோஜா மலரே’, ஜெய் ஆகாஷ் நடித்த ‘அடடா என்ன அழகு’, கார்த்திக் நடித்த ‘தீ இவன்’ ஆகிய படங்களை தயாரித்து இயக்கியவர், டி.எம்.ஜெயமுருகன். தவிர, ‘சிந்துபாத்’ என்ற படத்தையும் அவர் தயாரித்திருந்தார். பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள அவர், சில படங்களில் சிறுவேடங்களில் நடித்திருக்கிறார். இசை அமைப்பிலும் ஈடுபட்டிருந்தார். அவரது இயக்கத்தில் உதயா, விந்தியா நடித்திருந்த ‘பூங்குயிலே’ என்ற படம் திரைக்கு வரவில்லை.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக திருப்பூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த டி.எம்.ஜெயமுருகன், நேற்று முன்தினம் இரவு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நேற்று மாலை நடந்தது. மற்றொரு இயக்குனர் மரணம்: இயக்குனர் தருண்கோபி ஹீரோவாக நடித்திருந்த ‘பேச்சியக்கா மருமகன்’ என்ற படத்தின் இயக்குனர் பாலகுமார் என்கிற ஜெயராம், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மதுரையில் மரணம் அடைந்தார்.
