×

நீ இல்லாத இடமே இல்லை

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-43

இறைவனின் எல்லையற்ற வடிவமாகவே இவ்வுலகை அருளாளர்கள் பார்க்கின்றனர். அனைத்து இடங்களிலும், அனைத்து உயிர்களிலும், அனைத்து பொருட்களிலும் ஆண்டவனைத் தரிசிப்பது தான் மேலான பக்தி. இத்தகைய ஞானம் வாய்க்கப்பெற்றால் மகாகவி பாரதியைப் போல் நாம் அனைவருமே ஆனந்தக் கூத்திடலாம்.

காக்கை குருவி எங்கள் ஜாதி  - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம் !
நோக்கும் இசைஎலாம் தாமன்றிவேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்

ஆண்டவனைக் காணும் ஆன்மிக ஞானிகள் தான் நம்முன்னோர்கள்.பன்னிரண்டு சைவத்திருமுறைகளில் எட்டாவது திருமுறையாக விளங்குகின்றது திருவாசகம்.‘திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்ற புகழ் மொழியை நாம் அனைவருமே அறிவோம்.
பொதுவாக ஆசிரியர் ஒன்றை விளக்கி சொல்லச் சொல்ல மாணவன் எழுதிக் கொள்வான். இச்செய்கை நமக்குத் தெரிந்த ஒன்று.
ஆனால் திருவாசகத்தை மணிவாசகர் என்று மாணவன் சொல்லச் சொல்ல மேலான ஆசிரியர் பெருந்தகையான ஆண்டவனே எழுதிக்
கொண்டான் என்பது தானே வரலாறு.

அத்திருவாசகம் எல்லையறு பரம்பொருளை கீழ்க்கண்டவண்ணம் போற்றுகிறது.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்தோனாகி ‘யான் எனது’ அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
வாழ்த்துவனே !

மனிதகுலத்தின் ஆராய்ச்சிக்கும். கற்பனைக்கும் கடந்து நிற்பதால் தான் அவன் கடவுள்.  அக்கடவுளை பக்தி ஒன்றின் மூலமாகத் தான் பரிபூரணமாக அனுபவிக்க இயலும்.ஞானம், தர்மம், யோகம் முதலியவற்றின் மூலம் அனுபூதி நிலையை இறைவனோடு இரண்டறக் கலக்கும் தன்மையை எய்துதல் இயலாது. ஆனால் ஞானமோ, யோகமோ அறியாதவர் கூட பக்தி இருந்தால் போதும். பரமன் அவரை நெருங்கிவிடுவார்.
‘பக்தி வலையில் படுவோன் காண்க’ என்றும்
‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்!
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்’
என்பது தானே திருமுறை ஆசிரியர்களின் தீர்மானம்.

அன்பின் வடிவமான  கண்ணப்பர் மட்டுமே மிகமிகக் குறுகிய சாதனையில் ஆண்டவனை ஆறே நாளில் அடையப் பெற்றார்.
உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உறைப்பு, இனிப்பு என சுவைகள் ஆறு.இந்த ஆறுசுவையில் எச்சுவையை நம்மால் தனியாக உண்ண முடியும் என்றால் ‘இனிப்பை மட்டுமே’ என்றே எல்லோராலும்  பதில் தரமுடியும்.

பிற சுவைகளின் சேர்க்கை இன்றி உறைப்பையோ, கசப்பையோ, மற்ற சுவைகளையோ நம்மால் உண்ணமுடியாது. ஆனால் இனிப்புச் சுவையை மட்டும் பிறசுவைகளின் கூட்டு இல்லாமல் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதல்லவா !
‘பக்தி ’அப்படிப்பட்டது. யோகம், ஞானம், தர்மம் எல்ல பிற சுவைகள் போன்றது.

அதனால்தான் இறை அனுபூதியை அமுதம், தேன், கருப்பு எனப் பாடி உள்ளார்கள் புலவர்கள்.
பக்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோன்களுமாய்த்
தித்திருக்கும் அமுது கண்டேன். . .  . என்றும்
இகிப்பது சிதம்பர சர்க்கரையே . . .  என்றும்
அனைத்து எலும்பு உள்நேக ஆனந்தத் தேன் சொரியும் . . .  என்றும்
பாடிப் பரவி உள்ளனர் பாவலர் பெருமக்கள்.

ராமலிங்க அடிகள் இறைச்சுவை இனிப்பதை வித்தியாசமாகவும், விரிவாகவும் பாடியுள்ளதைப் பார்ப்போமா . . .
‘சமைத்துப்பார்’ என தற்காலத்தில் புத்தகங்களும் செய்முறைக் குறிப்புகளும் பலவாறாக வெளிவருவதை நாம் அறிவோம்.
திருவருட்ப்ரகாச வள்ளற்பெருமான் புதுமையான இனிப்புக் கட்டி ஒன்றைச் செய்வது பற்றி ’ பாட்டிலேயே நமக்குக் குறிப்பு தருகின்றார்.
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி
சர்க்கரையும், கற்கண்டின் பொடியும் மிகக் கலந்து
தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பிடியும் விரவி
இனித்தமுறும் நெய்யளைந்து இளஞ்சூட்டில் இறக்கி
எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே !

‘தித்திப்புச்சுவை கொண்ட அனைத்தையும் ஒன்றாக்கினாலும் பக்தியின் மூலம் பெறும் பரமானந்தத்திற்கு ஈடாகுமா ?
அன்றாடம் தெய்வ வழிபாட்டை விரிவாகச் செய்யும் அன்பர் ஒருவர் நெடுஞ்சாண் கிடையாக நமஸ்காரம் செய்தார்.
ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை என்று பக்தி மேலிட பணிந்து, குனிந்து, விழுந்து எழுந்தார்.  

அன்பரின் பக்தி பெருக்கைக் கண்டு பிரமித்த ஆண்டவன் ‘எதற்காக மூன்று முறை நமஸ்காரம் செய்தீர்கள் ? என்று கேட்டாராம்.
அதற்கு பக்தர் சொன்னாராம்.போன பிறவியில் உங்களை நான் வழிபடவில்லை . அதனால் தான் இப்போது பிறவி அமைந்துள்ளது. எனவே போன பிறவி நமஸ்காரத்தையும் சேர்த்து செய்தேன்.‘அப்படி என்றால் இரண்டுதடவை செய்தால் போதுமே ! எதற்காக மூன்று தடவை?
பக்தர் பதில் அளித்தார்.

இப்போது தவறாமல் வழிபடுகின்றேன். எனவே எனக்கு மறு பிறவி கிடையாதல்லவா? அடுத்த பிறவியில் வழிபட முடியாமல் போகுமே! அதற்காக இப்போதே அந்த நமஸ்காரத்தையும் சேர்த்து செய்தேன்.அன்பரின் பதிலில் ஆண்டவன் உருகிப் போனாராம்.

அவர் அன்பெறும் பிடிக்குள் அகப்படும் மலை’ அல்லவா !
கந்தர் அலங்காரம் ’ பக்தி மட்டும் போதும்’ என்று மூச்சடக்கி தவம் புரியும் முனிவர்களைப் பார்த்துக் கூறுகிறது.
காட்டிற் குறுத்தி பிரான் பதத்தே கருத்தைச் செலுத்திடில்
வீட்டில் புகுதல் மிக எளிது ! விழிகாசி வைத்து
மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சை உள்ளே
ஓட்டிப் பிடித்து எங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே!

எளிதான அன்பு வழி இருக்க கரடு முரடான யோக நெறியை ஏன் பின் பற்றுகிறீர்கள் என்று கேட்கிறார் வாக்கிற்கு அருணகிரியார்.
இறைவன் இன்னருள் பெற இரண்டு வழிகள் உள்ளன ஒன்று. விதி மார்க்கம். மற்றது அன்பு மார்க்கம்.
வேதாகமவழிநின்று அணுவளவும் மாறுபாடு இன்றி கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளின் வழிநின்றும், விலக்க வேண்டியதை அறவே தவிர்த்தும் கைக்கொள்ள வேண்டியது விதிமார்க்கம்.

அன்பு மார்க்கமோ இறைவன் இல்லாத இடமே இல்லை என அனைத்துயிர்க்கும் அன்பு பூண்டு வாழ்வது.
மேற் கண்ட பாடலில் ‘காட்டிற் குறத்தி பிரான்’ என்று கந்தப் பெருமானை அருணகிரியார் குறிப்பிடுவதற்குக் காரணமே காட்டில் வாழ்ந்த குறத்தியான வள்ளிநாயகிக்கு சாத்திரம் குறிப்பிடும் நெறிகள் எதுவுமே தெரியாது. ஆனால் அன்பு மார்க்கத்தில் வள்ளிநாயகியார் விளங்கியதால் தாமே  தேடிச் சென்று வள்ளியை மணந்தார்.

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்த
கோமாட்டி எச்சில்  விழைந்தாண்டி !
என்று பாடுகிறார் ராமலிங்க அடிகள்.       
பக்தி உள்ளமே பரம்பொருள் இல்லம் என அறிவோம்.
பக்தி உடையார் காரியத்தில் பதறார் !
மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மையைப் போல்
மெல்லச் செய்து பயன் அடைவார்!
சக்தித் தொழிலே அனைத்தும் எனில்
சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன் ?
என்று பக்தியின் சிறப்பைப்பாடுகிறார் மகாகவி பாரதியார்.
செந்தமிழ் மூதாட்டி ஔவையாரின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று காதுவழிக் கதையாக வழங்கப்படுகிறது.

ஆலயம் ஒன்றில் ஒருமூலையில் ஆசுவாசமாக காலை நீட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் ஔவை. அவள் காலை நீட்டியது அந்த ஆலயத்தின் கருவறையை நோக்கி அமைந்துவிட்டது.

அப்போது அங்கு வந்த பக்தர் ஒருவர் ‘அபசாரம் !
இப்படியா உறங்குவது ? கடவுள் பக்கமா காலை நீட்டுவது ? தயவு செய்து வேறு பக்கமாக காலை வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
அதற்கு ஔவை சொன்ன பதில் அர்த்தம் பொதிந்தது.‘பக்தரே ! தாங்களே தயவு செய்து கடவுள் இல்லாத பக்கத்தைக் கண்டு பிடித்து அந்த திசை நோக்கி என்னை படுக்க வையுங்கள்.தெய்வம் இல்லாத திசையை யாரால் கண்டு பிடிக்க முடியும் ?

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்