×

நந்தியம் பெருமானை வழிபட நன்மை பயக்கும்!

சிவாலயங்களில் சிவபெருமானைப் (லிங்கம்) பார்த்து கொண்டிருக்கும் நந்திபகவான் சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார். திருவாரூர் தியாகேசப் பெருமான் கோயிலில் நின்ற கோலத்தில் காட்சி தரும் நந்தியைத் தரிசிக்கலாம். சுந்தரருக்காகத் தூது சென்ற இறைவன் - அவசரத்தில் தன் வாகனமான நந்தி மேல் அமர்ந்து செல்லாமல் திருவீதியில் நடந்தே சென்றார். அதனால் வருந்திய நந்தி, இனி ஈசனை நடக்க விடக்கூடாது என்று அவர் புறப்படும் முன், தாமும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென்று நின்ற கோலத்தில் இங்கு காட்சி தருகிறார்.

மயூரம் வைத்தீஸ்வரன் கோயில் மார்க்கத்தில் உள்ளது திருப்புன்கர். இத்திருத்தலத்தில் அருள்புரியும் இறைவன் சிவலோகநாதர், வெளியில் நின்றிருக்கும் பக்தன் நந்தனார் தன்னை வழிபட ஏதுவாக மறைந்திருக்கும் நந்தியை சற்று விலகி இருக்கும்படி செய்தார். அதனால் இத்தலத்தில் உள்ள நந்தி மூலவர் சந்நதியிலிருந்து சற்று விலகி இருக்கும். இதே போல் பட்டீஸ்வரம் ஆலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப் பெறாத இறைவன், தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பினார். ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும் ஞானசம்பந்தர், சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதே போல் நந்தி விலகியிருக்கும் தலங்கள் திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகியனவையாகும்.

சென்னை வடதிருமுல்லைவாயிலில், அந்நாட்டு மன்னரிடம் போரிட வந்த காந்தன் முதலான அரக்கர்களுடன் போரிட்டு, அவர்களை விரட்டி விட்டு அதே நிலையில் கிழக்கு முகமாக வாயிலைப் பார்த்தவண்ணம் திரும்பிய நிலையில் உள்ளார் நந்திபகவான். பெண்ணாடகம் ஊரில் மழையால் வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் துன்பப்பட்டு இறைவனை வேண்டினர். உடனே இறைவன், நந்தியைப் பார்க்க, மேற்குமுகமாக இருந்த நந்தி கிழக்கு திசை பக்கம் திரும்பி, ஊர்மக்களைக் காக்க, வெள்ள நீரை உறிஞ்சியது. அந்தக் கோலத்துடன் ஊரைப் பார்த்து கிழக்குமுகமாகத் திரும்பியிருப்பதை தரிசிக்கலாம்.

திருவைக்காவூர் திருத்தலத்தில் சிவராத்திரி அன்று இறைவனை பூஜை செய்து வழிபட்ட வேடன் ஒருவனை எமன், அவன் உயிரைக் கவருவதற்கு வரும் பொழுது, கிழக்கு முகமாக இருந்த நந்தி, உடனே மேற்கு முகமாகத் திரும்பி எமனை விரட்டி விட்டார். அதே நிலையில் இன்றும் காட்சி தருகிறார். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள நந்தி, சிவலிங்கத்தைப் பார்த்து இல்லாமல், தனிமண்டபத்தில் வடக்கு திசைநோக்கி அருள்புரிகிறார். எதிரிகள் யாரும் உள்ளே நுழையாமல் காவல் காப்பதாக ஐதீகம். ‘சிவாலயத்தில் நந்தியெம்பெருமான் எந்தத் திருக்கோலத்திலிருந்தாலும் அவரிடம் அனுமதி பெற்று வணங்கிய பின், இறைவனை வழிபட வேண்டும்’ என்பது நியதி ஆகும். ஸ்ரீ நந்தியெம்பெருமானை வழிபட எல்லாம் நல்லதே நடக்கும் என்பர்.

தொகுப்பு: ஆர். அபிநயா

Tags : Nandiyam ,Lord ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்