×

மருமகள் வருகின்ற நேரம் அதிர்ஷ்டமே!

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?முப்பத்தைந்து வயதாகும் என் மகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. சுற்றம், உறவு, நண்பர்களுக்கு பதில் கூற முடியவில்லை. 25,000  ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறான். சொந்தமாக இடம் இருக்கிறது. வீடு கட்ட வேண்டும். வசதி சற்று குறைவாக உள்ளது. என் மகனுக்கு  எப்பொழுது திருமணம் நடக்கும் என்பதை கணித்துச் சொல்லவும்.
- மோகன்ராம், சென்னை.


 உங்கள் மகனின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஏற்கெனவே 24வது வயதில் ஒரு முறையும், 31வது வயதில் ஒரு முறையும் திருமணம் யோகம்  என்பது வந்து சென்றிருக்கிறது. திருமண யோகம் வருகிறது என்றால் சம்பந்தம் என்பது தானாகத் தேடி வராது. நாமாக முயற்சித்தால் மட்டுமே  நடக்கும். சுற்றம், உறவு, நண்பர்களுக்கு பதில் கூற முடியவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இவர்களுக்கு பதில் சொல்வதற்காகவா  மகனுக்குத் திருமணத்தை நடத்த வேண்டும்? மூவெட்டில் செய்யாத திருமணம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

திருமணத்திற்கான சரியான காலத்தை விடுத்து நமக்குத் தோன்றும்பொழுது தேடினால் எவ்வாறு திருமணம் நடக்கும்? உங்கள் மகனின் ஜாதகத்தை  கணித்துப் பார்த்ததில் திருவோணம் நட்சத்திரம், மகர ராசியில் அவர் பிறந்திருக்கிறார் என்பதும் கடக லக்னத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய  வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் லக்னாதிபதி சந்திரனோடு உச்சம் பெற்ற செவ்வாயும்  இணைந்திருக்கிறார். தற்போது குரு தசையில் குருபுக்தியின் காலம் நடந்து வருகிறது. என்றாலும் குரு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் திருமண  யோகத்திற்கு இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியதாகிறது.

ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆன சனி நான்கில் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கிறார். உறவு முறையில் சற்று விலகிய சொந்தத்தில் மணமகள்  அமைவார். வெளியில் தேடாமல் உறவுமுறையில் பெண் தேடுங்கள். உறவினர்களின் உதவியுடன்தான் மணமகள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள  இயலும். மகனுக்கு ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை என்று கேள்வி கேட்கும் உறவினர்களிடமே மகனின் ஜாதகத்தை ஒப்படைத்து உரிய  சம்பந்தத்தைத் தேடித் தரச் சொல்லி வேண்டுகோளை வையுங்கள். வசதி குறைவு, சம்பளம் குறைவு போன்ற காரணங்களை முன் வைக்கும் நீங்கள் அதற்குத் தகுந்தாற்போல் சம்பந்தத்தை தேடுங்கள். மருமகள் வருகின்ற நேரம் மிகவும் நன்றாகவே இருக்கும். அவரது திருமணத்திற்குப் பின்னர்  நீங்கள் சொந்த வீடு கட்டும் முயற்சியில் இறங்கினால் போதுமானது. உங்கள் மகனின் ஜாதகக் கணக்கின்படி 2022 ஜனவரி மாத வாக்கில் அவரது  திருமணம் நடக்கும் என்பதை அவரது ஜாதகம் குறிகாட்டுகிறது.

?விவாகரத்து ஆன என் மகளுக்கு வரன் வந்துள்ளது. அவர் ஏற்கெனவே தாரத்தை இழந்தவர். இந்த இரு ஜாதகங்களையும் இணைக்கலாமா?  திருக்கணிதப்படி மாங்கல்யப் பொருத்தம் உள்ளது. வாக்கியப்படி இல்லை என்கிறார்கள். தங்கள் முடிவை ஏற்கத் தயாராக உள்ளோம்.
- மகாலட்சுமி, சென்னை.


வாக்கியமா, திருக்கணிதமா என்று குழப்பிக் கொள்ளக் கூடாது. உங்கள் மகளின் ஜாதகத்தை எந்த முறையில் கணித்து வைத்துள்ளீர்களோ, நீங்கள்  எந்தமுறையை பின்பற்றுகிறீர்களோ அல்லது உங்களது குடும்ப ஜோதிடர் எந்த முறையைப் பின்பற்றி உங்களுக்கு பலனைச் சொல்கிறாரோ அந்த ஒரு  முறையை மட்டுமே பின்தொடர வேண்டும். மாற்றி மாற்றிப் பார்த்தால் முழுமையான பலன் கிடைக்காது. மேலும் நீங்கள் மாங்கல்யப் பொருத்தம்  என்பதை ரஜ்ஜூப் பொருத்தம் என்ற கணக்கினை வைத்துச் சொல்கிறீர்கள். இது நட்சத்திர அடிப்படையில் காணும் பொருத்த முறை ஆகும். பிறந்த  நட்சத்திர அடிப்படையில் திருமணப் பொருத்தம் காண்பது தவறு.

அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில்தான் பொருத்தம் காண வேண்டும். ஆண், பெண் இருவரும் ஒரே நட்சத்திரம் ஆக இருந்தாலும்  தாராளமாகத் திருமணத்தை நடத்தலாம். ஜாதகத்தில் உள்ள 2, 4, 7, 8, 12ம் பாவங்களின் அடிப்படையிலும் புத்ர ஸ்தானம் ஆகிய ஐந்தாம்  பாவத்தினைக் கொண்டும் திருமணப் பொருத்தத்தினைப் பார்க்க வேண்டும். இந்த அடிப்படையில் நீங்கள் அனுப்பியிருக்கும் வரனின் ஜாதகத்தையும்,  உங்கள் மகளின் ஜாதகத்தையும் இணைத்துப் பார்க்கும்போது திருமணப் பொருத்தம் என்பது நன்றாக உள்ளது. இருவருமே சிம்ம ராசியைச்  சேர்ந்தவர்கள் என்பதால் மணமக்களின் கருத்தினை அறிந்துகொள்வது நல்லது. மணப் பொருத்தத்தோடு மனப்பொருத்தமும் அவசியம் தேவை.  ஜோதிடவியல் ரீதியாக கணித்துப் பார்க்கும்போது இணைக்கலாம் என்பதையே அவர்களது ஜாதகங்கள் உணர்த்துகின்றன.

?எனது அக்கா மகன் பிரைவேட் கம்பெனியில் மேனேஜர் ஆக பணிபுரிகிறான். அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? வீடு கட்டி  அஸ்திவாரத்தோடு நிற்கிறது. வீடு எப்போது கட்டலாம்? தாய், தந்தைக்கு என்ன செய்வார்? திருமண யோகம் எப்படி உள்ளது?
- செல்வம், திருவிடைமருதூர்.


ஒட்டுமொத்தமாக அவரது எதிர்கால வாழ்வினைப் பற்றிக் கேட்டுள்ளீர்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் விவரங்களின் அடிப்படையில் அவரது ஜாதகத்தை  கணித்துப் பார்த்ததில் தற்போது ராகு தசையில் ராகு புக்தி என்பது துவங்கி உள்ளது. ராகு தசை என்பது ஒட்டுமொத்தமாக 18 வருட கால  அளவினைக் கொண்டது. இவரது ஜாதகத்தில் ராகு மூன்றாம் இடம் எனும் வளரும் பாவகத்தில் அமர்ந்துள்ளதால் இந்த 18 வருடங்களும் நல்லதொரு  வளர்ச்சியினைத் தரும். பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும்  பத்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரஹங்கள் இணைந்திருக்கின்றன. இந்த அமைப்பு நிரந்தர உத்யோகம் என்பதை உறுதியாகச்  சொல்லும். சூரியன் மற்றும் செவ்வாயின் உச்ச பலமும், ஆட்சி பலமும் அரசுத் தரப்பிலான பணிக்கு பக்கபலமாய் அமையும். அதே நேரத்தில்  உள்ளூரில் அவரது பணி அமைவதற்கான வாய்ப்பு குறைவு. மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகளை எழுதி வரச் சொல்லுங்கள்.

தொலைதூரத்தில் உத்யோகம் என்பது அமையும். தொலைதூரத்தில் உத்யோகம் அமைந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது. தாய்- தந்தைக்கு  என்ன செய்வார் என்று கேட்டுள்ளீர்கள். பெற்றோருக்கு அவர் செய்ய வேண்டிய கடமையை நிச்சயமாகச் செய்வார். அதில் எந்தவிதமான சந்தேகமும்  இல்லை. வீடு கட்டி அஸ்திவாரத்தோடு நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த வீட்டினை மேற்கொண்டு தொடர்வது அத்தனை உசிதமல்ல. அவர்  எங்கு வசிக்க உள்ளாரோ, அவரது உத்யோகம் எங்கு அமைய உள்ளதோ அங்கே அவர் இடம் வாங்கி வீடு கட்டிக்கொள்வது நல்லது என்பதே  அவருக்கு ஜோதிடம் சொல்லும் ஆலோசனையாக அமைகிறது. திருமணம் என்பது 28 வயது முடிந்து 29வது வயது துவங்கும் காலத்தில்  நடந்துவிடும். தனது உழைப்பால் உயர்வு காணும் அம்சத்தை உங்கள் அக்காள் மகனின் ஜாதகம் தெளிவாகச் சொல்கிறது.

?வெளிநாட்டில் பணிபுரியும் எனது நண்பரின் மகனுக்கு ஆண் குழந்தை பிறந்து ஐந்து நாட்களில் இறந்துவிட்டது. அவரது மனைவி பேச்சுவார்த்தை  இல்லாமல் அவரது தாயார் வீட்டில் சுமார் ஆறு மாத காலமாக வசிக்கிறார். எனது நண்பர் வீட்டில் தன் மகனுக்கு இரண்டாம் கல்யாணம் செய்ய  நினைக்கிறார்கள். அவ்வாறு செய்யலாமா, எப்போது செய்யலாம், பெண் எந்த திசையில் இருந்து அமைவார்? தயவுசெய்து விபரம் தரவும்.
- செல்வம், குத்தாலம்.


ஆறுமாத காலம் மனைவி பிரிந்திருக்கிறார் என்றதும் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கத் தொடங்கியிருப்பது தவறான முறையே. அதிலும்  கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் மனைவி புகுந்த வீட்டில் இருக்காமல் தனது பிறந்த வீட்டில் வாழ்வதை வைத்தும்  ஆறுமாத காலமாக பேச்சுவார்த்தை ஏதுமின்றி இருக்கிறார் என்பதை வைத்தும் தனது மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய நினைக்கும் உங்களது  நண்பரின் இல்லத்தாருக்கு உரிய அறிவுரையைச் சொல்லுங்கள். அதிலும் திருமணம் நடந்து மிகவும் குறைந்த காலமே ஆகிறது. ஒரு குழந்தையையும்  பெற்று அந்தக் குழந்தையும் ஐந்து நாட்களில் இறந்துவிட்ட சூழலில் அந்தப் பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.  நீங்கள் நண்பரின் மகனுடைய ஜாதகத்தை மட்டுமே அனுப்பியுள்ளீர்கள்.

அவரது மனைவியின் ஜாதகத்தை அனுப்பவில்லை. அதில் கூட நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகமும், அதில் கொடுத்திருக்கும் பிறந்த தேதி மற்றும்  நேரம் ஆகிய விவரங்களும் ஒன்றோடொன்று ஒத்துப் போகவில்லை. எழுதி அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ  லக்னம் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிறந்த தேதி மற்றும் நேரத்தினை வைத்து கணித்துப் பார்க்கும்போது விசாகம் நட்சத்திரம் நான்காம்  பாதம், விருச்சிக ராசி, ரிஷப லக்னம் என்பது தெளிவாக உள்ளது. ஆக, முதலில் உங்கள் நண்பரின் மகன் பிறந்த தேதி மற்றும் நேரம் ஆகிய  விவரங்களைச் சரியாகக் குறிப்பிட்டு நன்கு கற்றறிந்த ஜோதிடரின் மூலமாக ஜாதகத்தை கணித்து அதன் பிறகு அதற்கான பலனை அறிந்துகொள்ள  முயற்சியுங்கள். எது ஒன்றையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக அணுகினால் அதற்குரிய சரியான பலன் கிடைக்காது. இந்த  விவகாரத்தில் கணவன்- மனைவி இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து முடிவெடுப்பதே நல்லது.

?தங்கை மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவரது திருமணம் எப்போது நடைபெறும்? பெண் எத்திசை? தனியார் வங்கியில் பணியாற்றி வரும்  அவருக்கு அரசுப்பணி வாய்ப்பு எப்போது? பரிகாரங்கள் கூறவும். நன்றி.
- விசுவநாதன், கடலூர்.


உங்கள் சகோதரியின் மகனது ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் அவர் மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது  தெளிவாகிறது. அவருடைய ஜாதகக் கணிதத்தின் படி தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச்  சொல்லும் ஏழாம் பாவக அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நிதானித்து திருமணத்தை நடத்துவதே நல்லது. ஆறாம் வீட்டு அதிபதி  சந்திரன் ஏழில் பரிவர்த்தனை யோகத்துடன் அமர்ந்துள்ளதால் சந்திர தசை துவங்கும் காலத்தில் அவரது திருமணம் நடந்தேறும். அதாவது 29வது  வயதில் திருமணத்தை நடத்துவது நல்லது. அவர் பிறந்த ஊரிலிருந்து மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து மணமகள் அமைவார்.

அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி ஆட்சி பலத்துடன் அமர்ந்திருந்தாலும், வக்ரம் பெற்றிருப்பதால் எந்த ஒரு விஷயமும் சற்று  நிதானமாகத்தான் நடைபெறும். தற்போது அவர் பணி செய்து வரும் தனியார் வங்கியிலேயே தொடர்வது எதிர்காலத்திற்கு நல்லது. சனிக்கிழமை  தோறும் விரதமிருந்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது என்பதை வாழ்நாள் முழுவதும் அவர் தொடர்ந்து கடைபிடித்து  வந்தாலே வாழ்வினில் நல்லதொரு வளர்ச்சியினைக் காண முடியும்.

தொகுப்பு: சுபஸ்ரீ சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம்.  கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.
என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

Tags : daughter-in-law ,
× RELATED இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று...