×

இயற்கை உரம் தயாரிக்க 15 ஆயிரம் கூம்பு வடிவ மண் குப்பிகள்-பெங்களூருக்கு ஏற்றுமதி

திண்டுக்கல் :திண்டுக்கல்லை அடுத்த நொச்சி ஓடைப்பட்டியில் தயாரிக்கப்படும் கூம்பு வடிவ மண் குப்பிகள் இயற்கை உரம் தயாரிப்பதற்காக பெங்களூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.திண்டுக்கல் அடுத்துள்ள நொச்சி ஓடைப்பட்டியில் கஜேந்திரன் என்பவர் மண்ணால் கைவினைப் பொருட்கள் தயாரித்து  விற்பனை செய்து வருகிறார். இங்கு விநாயகர் சிலை, கார்த்திகை சட்டி, சிங்கம், புலி, மான் உள்ளிட்ட வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக மண் சிலைகள் செய்யும் தொழில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இருந்தது. தற்சமயம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனம் இயற்கை உரம் தயாரிப்பதற்காக இவரிடம் 15,000 மண் கூம்பு குப்பிகள் தயார் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். இதற்காக தற்பொழுது கூம்பு வடிவ மண் குப்பிகள் செய்யும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இயற்கை உரம் தயாரிக்கும் தனியார் தொண்டு நிறுவனத்தின் மேலாளர்  கூறியது: நியூசிலாந்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மையின் தந்தை பீட்டர் புராக்டர் என்பவரிடம் இயற்கை உரம் எவ்வாறு தயாரிப்பது என்று கற்றுக் கொண்டோம். தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இயற்கை உரங்களை கடந்த 14 வருடங்களாக   தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறோம். இயற்கை உரங்களை எட்டு முறைகளில் தயாரித்து வருகிறோம்.  அதில் ஒரு வகை தான் இந்த நாட்டின பால் மாடு சாண உரம். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் உரம் தயாரிக்கும் பணி நடைபெறும். இதற்காக கஜேந்திரன் என்பவரிடம் 15,000 மண் கூம்பு குடுவைகள் தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளோம். எங்கள் தரப்பில் பால் கொடுக்கக்கூடிய நாட்டின மாடுகளின் சாணத்தை கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது. கீர், சாய்வால், காங்கேயம், வெச்சூர் ஆகிய நாட்டு மாடுகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் இந்த மாடுகளின் சாணம் உரம் தயாரிக்க பயன்படுகிறது. இந்த சாணத்தை மண்ணால் செய்யப்பட்ட குடுவையில் நிரப்பி 2 அடி ஆழம் குழியில் பதித்து ஆறு மாதத்திற்கு பிறகு தோண்டி எடுத்தால் நல்ல உரமாக கிடைக்கும்.ஒரு ஏக்கருக்கு 25 கிராம் இயற்கை உரத்தை 14 லிட்டர் தண்ணீர் ஒரு மணி நேரம் இட வலமாக நன்றாக கலக்கி எடுத்து மாலை நேரத்தில் விளை நிலங்களில் தெளிக்க வேண்டும். தெளிக்கும் போது மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அதிகமாகும் என்பதுடன், மண்புழுவின் பெருக்கம் அதிகமாகி மண் இலகுத்தன்மை ஏற்படும். உரம் தெளித்து மூன்று மாதங்களுக்கு பிறகு பார்த்தால் மண்ணின் வளத்தை நம்மால் உணர முடியும். இங்கு தயார் செய்யப்படும் இயற்கை உரங்களை மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். விரைவில் இந்த உரங்களை இலவசமாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க இருக்கிறோம். மக்கள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்பதையே எங்கள் தொண்டு நிறுவனத்தின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றார்….

The post இயற்கை உரம் தயாரிக்க 15 ஆயிரம் கூம்பு வடிவ மண் குப்பிகள்-பெங்களூருக்கு ஏற்றுமதி appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Dindigul ,Nochi Odaipatti ,Dinakaran ,
× RELATED எச்சில் துப்ப முயன்றபோது விபரீதம் பஸ்...