×

பெண்கள் இலவச பஸ்களை எளிதாக அடையாளம் காண சென்னையில் ‘பிங்க்’ நிற பஸ்கள் இயக்கம்; 5 புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகள் அறிமுகம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: இலவச பஸ்களை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் சென்னையில் ‘பிங்க்’ நிற பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. இதனுடன் 5 புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  தமிழக சட்டப் பேரவை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையில் அரசு நகர சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு பிறகு தலைமைச்செயலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதில் 3வது திட்டம், தமிழ்நாடு முழுவதும் அரசின் சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பதாகும். இந்த திட்டம் மே 8ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. நாள்தோறும் கட்டணமில்லா பஸ்களில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 37.41 லட்சம். இதேபோல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கின்றனர். இலவச பஸ்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், 50 பஸ்களுக்கு பிங்க் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இது நேற்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நேற்று (6.8.2022), சென்னை, மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் தெரிந்து கொள்ள ஏதுவாக, பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 ‘பிங்க்’ பேருந்துகள் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மகளிர் எளிதாக தெரிந்து கொள்ள ஏதுவாக, இனிவரும் காலங்களில், மற்ற மாவட்டங்களில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளுக்கும்,  ‘பிங்க்’ வண்ணம் தீட்டப்பட்டு இயக்கப்படும். அதனை தொடர்ந்து, அண்ணா சாலை, ஓமந்தூரார் மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்திலிருந்து, மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சென்னையின் முக்கிய இடங்களுக்கு ஐந்து புதிய வழித்தடங்களில் 10  இணைப்பு சிற்றுந்துகள் இயக்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் மற்றும் சென்னை மாநகராட்சி 9வது மண்டல குழு தலைவர் மதன்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post பெண்கள் இலவச பஸ்களை எளிதாக அடையாளம் காண சென்னையில் ‘பிங்க்’ நிற பஸ்கள் இயக்கம்; 5 புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகள் அறிமுகம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,UDAYANITI STALLIN ,MLA ,Udayaniti Stalin ,
× RELATED காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு...