×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் மழையால் வேகமாக நிரம்பும் அப்பர்பவானி, அவலாஞ்சி அணைகள்-மின் உற்பத்திக்கு இனி பாதிப்பு இருக்காது

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பர்பவானி, அவலாஞ்சி உட்பட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்புகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் கனமழை பெய்யும். இதேபோல, செப்டம்பர் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பும். குறிப்பாக, ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை 2 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் என்பதால் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவாஜி, அவலாஞ்சி, வெஸ்டர்ன் கேட்ச்மென்ட், பைக்காரா பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். இதனால், மின் உற்பத்திக்காக பயன்படும் அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி போன்ற அணைகள் வேகமாக நிரம்பி வழியும். இதனை கொண்டு ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஆனால், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தேவையான அளவு பெய்யவில்லை. இதனால், அணைகளில் தண்ணீர் அளவு குறைந்தது. குறிப்பாக, மின் உற்பத்திக்காக பயன்படும் முக்கிய அணைகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி போன்ற அணைகளிலும் தண்ணீர் அளவு மிக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முழுவதும் மழை பெய்தது. குறிப்பாக, நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், அணையின் நீர் மட்டம் மள மளவென உயர்ந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் நீலகிரியில் மழை தீவிரமாகியுள்ளது. குறிப்பாக, நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் தொடர்ந்து நாள் தோறும் கனமழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் அப்பர்பவானி, அவாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைக்காரா அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் முழுகொள்ளளவு மற்றும் அணைகளின் தற்போதைய நீர்மட்டம் நிலவரம் (அடி கணக்கில்) அடுத்தடுத்து வருமாறு: அப்பர்பவானி- 210- 205, அவலாஞ்சி- 171 -158, பைக்காரா – 100-85, போர்த்திமந்து- 130-125, பார்ச்ன்ஸ்வேலி- 77-74, எமரால்டு-184-150, குந்தா- 89-88, கெத்தை-156-154, பில்லூர்-100-98.5, கிளன்மார்கன் -33-32, மாயார்- 17-16.5, சாண்டிநல்லா-49-45, முக்குருத்தி-18-17. …

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் மழையால் வேகமாக நிரம்பும் அப்பர்பவானி, அவலாஞ்சி அணைகள்-மின் உற்பத்திக்கு இனி பாதிப்பு இருக்காது appeared first on Dinakaran.

Tags : Upparbhavani ,Avalanchi ,Nilgiri district ,Apparbhavani ,Dinakaran ,
× RELATED 30 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி மணல்...