×

ஆனந்த வாழ்வருளும் அண்ணாமலையார்

சிவஸ்தலம் பெயர் திருவண்ணாமலை இறைவன் பெயர்  அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் இறைவி பெயர் உண்ணாமலை அம்மை ஆனந்த வாழ்வருளும் அபீதகுஜாம்பாள். சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இது தவிர ஒரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும். இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று காலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று வினவ, உருவான வடிவமேலிங்கோத்பவர் ( பல சிவாலயங்களில் சிவனின் கருவறையின் பின் உள்ள சிற்பம்) என்று அழைக்கப்படுகிறது. சிவ பெருமானின் திருவடியை அடியைக் காண திருமால் வரகா (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் லிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற தொன்மமும், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தினை அளித்து அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின்புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம்.

“திருஅண்ணாமலையை நினைக்க முக்தி” அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம்.இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைப்பிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.
 
திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது. படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக ( பன்றி) அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார்.

முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார். திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் தனி ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும்.

மலை வலம் திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் கிபி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது. பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.
எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.

இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது. எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.

Tags : Ananda ,Anna ,
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...