×

திருவடி பணிவோர்க்கு அருள்வாள் உருப்பிடி அம்மன்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இருந்து வடக்கே 6 கி.மீ. தூரத்தில் சந்தவெளிப் பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் தெற்குப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையான உருப்பிடி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

வயல்களால் சூழப்பட்ட பகுதியில் வடக்கு நோக்கியவாறு உருப்பிடியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட வீரமுண்டனார் பரம்பரையை சார்ந்தவர்கள் இப்பகுதியின் பரம்பரையாக வருவாய் மண்டலத் தலைவர்களாக இருந்து வந்தனர். இவர்கள் சோழப் பேரரசின் கீழ் செயல்பட்டவர்கள். இவர்கள் சந்தவெளிப்பேட்டையின் வடக்குப்பகுதியில் கோட்டை மற்றும் அரண்மனையும் அமைத்து வாழ்ந்து வந்தனர். மேலும் அரண்மனையை சுற்றி கோட்டை சுவரும் அதை சுற்றி அகழியும் அமைத்திருந்தனர்.

வீரமுண்டனார் தன்னிடம் கப்பம் வசூலிக்கும் பணியை செய்து வந்த தனது தளபதியாருக்கு தன்னுடைய ஒரே மகளை மணமுடித்து கொடுத்தார்.
வீரமுண்டனாரின் கோட்டை பகுதியானது சுமார் 50 ஏக்கர் பகுதியில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இது கி.பி. 10 - 13 ஆம் நூற்றாண்டை சார்ந்த கட்டடப்பகுதி.இந்த கோட்டைப் பகுதியின் மேற்குப் பகுதி வழியாக ராஜராஜன் பெருவழி, சோழர்கள் காலத்தில் அமைக்கப் படிருந்தது. இது தற்போது சென்னை - கும்பகோணம் சாலையாகும். இந்த பெருவழியின் குறுக்கே கன்னியாக்கோயில் ஓடை செல்கிறது. இதில் வருடம் முழுவதும் தண்ணீர் செல்லும். இந்த ஓடையில் மழைக்காலங்களில் வரும் அதிகப்படியான வெள்ளத்தால் பெருவழி பாதையானது வெள்ளத்தால் சிதைவு உண்டாகி போகும். இதனை பராமரிக்கும் பணியை சோழ மன்னர்கள் வெற்றிகளித்த வீரமுண்டனாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

ஒருக்கட்டதில் சோழ மன்னர்கள் இதன் குறுக்கே பாலம் ஒன்றை கட்ட சந்தவெளிப்பேட்டை தலைவனான வெற்றிகளித்த வீரமுண்டனாருக்கு உத்தரவு பிறப்பித்தனர். உடனே பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் உடைந்து போனது. பாதை தடைப்பட்டது. மேலும் வழிப்போக்கர்கள் பலர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்து விட்டனர். இவ்வாறு அடிக்கடி பாலம் கட்டப்படவும் மீண்டும் மழை வெள்ளத்தால் உடையவுமாக இருந்தது. மேலும் உயிர் இழப்பும் தொடர்ந்தது. பாலம் திரத் தன்மையோடு கட்டப்படாததால் தான் உயிர் இழப்புக்கள் ஏற்படுவதாக உணர்ந்தார் வெற்றிகளித்த வீரமுண்டனார்.

ஒரு நாள் சோழ மன்னனிடம் இருந்து கடிதம் ஒன்று வீரமுண்டனாருக்கு வந்தது. அதில் தாங்கள் இந்த பாலத்தை வலிமையாக கட்டவேண்டும். அப்படி கட்டவில்லையானால் உமது வருவாய் தலைவர் உரிமை பறிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். கடிதத்தை படித்த வீரமுண்டனார் செய்வது அறியாது இருந்தார். நண்பர் ஒருவர் ஆலோசனையின் பேரில் ஒரு மந்திரவாதியை சந்தித்தார். மந்திரவாதி வீரமுண்டனாரிடம் தலைப்பிள்ளை சூலியை பாலத்தின் முன் வைத்து பலி கொடுத்துவிட்டு பாலம் கட்டினால் அது உடையாமல் ஸ்திரத்தன்மையோடு இருக்கும் என்றான். தலைப்பிள்ளை சூலியா என்றார் வீரமுண்டனார்.

ஆம், வீட்டிற்கு ஒரே மகளாக இருக்க வேண்டும். அதுவும் அவளும் வீட்டிற்கு முதல் பிள்ளையாக இருக்க வேண்டும். அவள் கருவுற்றிருப்பதும் முதல் பிள்ளையாக இருக்க வேண்டும் என்றான். அதைக் கேட்டுவிட்டு மௌனமாக அங்கிருந்து எழுந்து வந்தார் வீரமுண்டனார். இந்த தகவல் அரசல் புரசலாக அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்களில் தலப்பிள்ளை சூலியாக இருக்கும் பெண்கள் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வராமல் கணவர் வீட்டிலும், உறவினர் வீட்டிலும் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் வீரமுண்டனாரின் மகளுக்கு அவர்கள் வீட்டிலேயே வளைகாப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

வீரமுண்டனார் சுறுசுறுப்பின்றி முகம் வாடிய நிலையில் சாய்வு இருக்கையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். தமது தந்தையார் ஏதோ பறிகொடுத்தவரைப் போன்று உள்ளாரே என்று கருதி சோகத்திற்கான காரணம் கேட்டாள். அவரது மகள். வீரமுண்டனார் தனது நிலையை தமது மகளிடம் கூறினார். வளைகாப்பு நடந்தது. அன்றிரவு அமாவாசை. தந்தையை அழைத்தாள் மகள். ‘‘அப்பா’’ ‘‘என்னம்மா,’’‘‘இன்றிரவு இடிந்து விழுந்த பாலம் அருகே நம்ம குல தெய்வத்தை நினைத்து நான் பூஜை செய்யப்போகிறேன். அந்த பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடுங்கள்’’ என்றாள்.
முதலில் மறுத்த வீரமுண்டனார். பின்னர் எல்லாம் தெய்வச்செயலாக இருக்குமோ என்றெண்ணி அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.

நள்ளிரவு நேரம் கண்மாய் அருகே உடைந்த பாலம் பகுதியில் எட்டு வீரர்கள் தீப்பந்தத்துடன் நிற்க பூஜைக்கான படையல்கள் தலை வாழை இலைகள் மீது வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முன் இருந்து பூஜைகள் செய்தாள் வீரமுண்டனார் மகள். வாயில் மந்திரங்கள் உச்சரித்தாள். என்ன செய்கிறாள். என்ன சொல்கிறாள் என்று குழப்பமான நிலையில் மகளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார் வீரமுண்டனார். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வீட்டு பெண்கள் ஐந்து பேர் அப்பகுதியில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அர்த்த சாம பொழுதானது. பூஜை முடிந்ததும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தான் மறைத்து கொண்டு வந்த உடைவாளை எடுத்து தனது வயிற்றை கீறி, கருவை எடுத்து தன் முன் வைக்கப்பட்டிருந்த இலை மீது வைத்துவிட்டு தன் வயிற்றில் தானே குத்தி குருதி கொப்பளிக்க, உயிரற்ற பொருளாய் அவ்விடம் சாய்ந்தாள் வீரமுண்டனார் மகள்.

தன் தந்தையின் மானம் காக்கவும், தனது ஊரை காக்கவும் தன்னுடைய இன்னுயிரை மாய்த்த அவள் சாகும் முன், தனது தந்தையிடம் உடனே பாலத்தை கட்டவேண்டும். என சத்தியம் வாங்கிய பின்னரே உயிரை விட்டாள். மகளுக்கு கொடுத்த சத்தியத்தின் படி வீரமுண்டனார் அவ்விடத்தில் பாலம் கட்டினார். பாலத்தின் அருகே மகளுக்கும் கோயில் கட்டினார். அந்த பாலம் வலிமைத் தன்மையோடு நிலைபெற்று இருந்தது. தமது அரச பதவி, மக்கள் நலன் இவைகளுக்காக தன்னையே பலிகொடுத்துக் கொண்ட மகளை வீரமுண்டனாரின் வாரிசுகள் தமது குலதெய்வமாக இன்றளவும் வணங்கி வருகின்றனர். உருவம் கொண்டு பிடிக்கப்பட்ட அம்மன் என்பதால் உருப்பிடி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

உருப்பிடியம்மன் பலியாகும் போது ரத்தம் சிந்திய இடம் இன்று வரை கரம்பாகவே(புல், பூண்டு முளைக்காத மணல் மேடு) காட்சியளிக்கிறது. வீரமுண்டனார் கட்டிய பாலம் இருந்த இடத்தில் தான், பிறகு வந்த ஆங்கிலேயர்கள் கான்கிரிட் பாலத்தை கட்டியுள்ளனர். ஒரு பெண் பலிகொடுக்கப்பட்ட இடத்தில் தற்போது உள்ள பாலம் கட்டப்பட்டதால் என்பதலோ தெரியவில்லை இன்றுவரை அந்த பாலம் உடையாமல் உள்ளது.  உருப்பிடியம்மனுக்கு சந்தைவெளிப்பேட்டை, கஞ்சமநாதபுரம் ஆகிய ஊர்களில் கோயில் உள்ளது.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags : Thiruvadi ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ...