×

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.530 கோடி செலவில்13 விளையாட்டு திடல்கள்: இளைஞர்களை ஊக்குவிக்க மாநகராட்சி அதிரடி திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.530 கோடியில் 13 இடங்களில் விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளது. மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால், அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகிறது. குழு விளையாட்டில் ஈடுபடும் போது மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். விளையாட்டுகள் என்பது இளைஞர்களை ஊக்குவித்து சாதனையாளர்களாக உருவாக்கவும் நல்வழிப்படுத்தவும், உடல் மற்றும் உள்ளம் வலிமை பெறவும் உதவுகிறது. ஆனால், இன்றைய மாணவர்கள் செல்போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம், கிராமப்புறங்கள் போன்று விளையாடுவதற்கான இடங்கள் நகர்ப்புறங்களில் இல்லை என்றே கூறலாம். இதை போக்கும்விதமாக தான் சென்னையில் பல இடங்களில் விளையாட்டு திடல்கள் ஏற்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதற்கு வசதியாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் பல தேர்வு செய்யப்பட்டு விளையாட்டு திடலாக மாற்றும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் இளைஞர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 300 ஆண்டுகால வரலாற்றில் 1947க்கு முன்பு மாநகராட்சி 18 விளையாட்டு திடல்களை பராமரித்து வந்தது. தற்போது அனைத்து வகையான விளையாட்டு திடல்களை சேர்த்து மொத்தம் 722 விளையாட்டு திடல்கள் உள்ளன. இவற்றை மேலும் விரிவுபடுத்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேலும் 50 விளையாட்டு திடல்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வெளிநாட்டுக்கு இணையாக சென்னையை தரம் உயர்த்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் படிப்படியாக பல்வேறு திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தான், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி கட்டிட திட்டங்கள், வீட்டு மனை திட்டங்கள் போன்றவை செயல்படுத்தும் போது ஒதுக்கப்படும் ஏராளமான திறந்தவெளி நிலங்கள் மாநகராட்சிக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பல தனி நபர்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்தது கண்டறியப்பட்டு, அவை அனைத்தும் மீட்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட திறந்தவெளி நிலங்கள் குறித்தும் மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுத்துள்ளது. அவற்றை அப்படியே விட்டுவிட்டால் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் என்பதாலும், மாநகரப் பகுதியில் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்யவும், சிறிது நேரத்தை செலவிடுவதற்கான இடங்கள் சுருங்கி வருவதாலும் திறந்தவெளி நிலங்களை சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் விளையாட்டு திடல்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது ரூ.530 கோடியில் 13 இடங்களில் விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உடற்பயிற்சி உபகரணங்கள்,  அமர்வதற்கான இருக்கைகள், சுற்றுச்சுவர்கள் அமைத்தல், மின் விளக்கு வசதி  உள்ளிட்டவைகள் மிக பிரமாண்டமாக ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.530 கோடி செலவில்13 விளையாட்டு திடல்கள்: இளைஞர்களை ஊக்குவிக்க மாநகராட்சி அதிரடி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Singarach ,Chennai ,Chennai Corporation ,
× RELATED முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை...