×

வள்ளலாருக்கு வழிகாட்டிய விநாயகர்

‘வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்திற்கு வடமேற்கே 20 கி.மீ. தொலைவிலுள்ள மருதூரில் ராமையா பிள்ளை- சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் வள்ளலார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ராமலிங்கம். ஐந்து மாத குழந்தையாக ராமலிங்கம் இருந்தபோதே சிதம்பரம் நடராஜரை தரிசிக்க அவரது பெற்றோர் சென்றனர்.

அப்போது தீட்சிதர் திரையைத் தூக்க சிதம்பர ரகசியம் தரிசனமாயிற்று. அனைவரும் தரிசிக்க, பெருமானாரும் அதனை தரிசித்தார். அனைவருக்கும் ரகசியமாக இருந்த சிதம்பர ரகசியம் பெருமானாருக்கு வெட்ட வெளிச்சமாக புலப்பட்டது! கைக்குழந்தையாக இருந்தபோதே சிதம்பர ரகசியத்தை கண்டறிந்த பெருமானார், தனது நாற்பத்தொன்பதாம் வயதில் உத்தரஞான சிதம்பரமான வடலூர் சத்தியஞானசபையில் ஏழு திரை நீக்கி ஒளியாக காட்டியருளினார்.

சிறு வயதிலேயே தந்தை இறந்ததால் தாயாருடன் அவரது ஊரான பொன்னேரிக்குச் சென்றார். அங்கிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தனர். தன் அண்ணன் சபாபதி பிள்ளையிடம் கல்வி பயின்றார் பெருமானார். பின்னர் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயின்றார். ஆனால், அவரது அறிவுத்தரத்துக்கு ஆசிரியரால் ஈடுகொடுக்க முடியாததால் பெருமானார் கந்தக்கோட்டம் சென்று கவிபாடினார். எந்தப் பள்ளியிலும் பயிலாத பெருமானார் இறைவனிடமே கேட்க வேண்டியவற்றைக் கேட்டார். தம்பியின் போக்கு பிடிக்காததால் அவரை அண்ணன் சபாபதி வெளியேற்றினார். இதனால் சிறுவர்களை சேர்த்துக்கொண்டு கோயில் குளங்களுக்குச் சென்று வந்தார்.

பின்னர் அண்ணியார் அன்புக்கிணங்க மீண்டும் வீட்டுக்கு வந்து தனி அறையில் வசித்தார். தனது 9ம் வயதில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றார்.
12ம் வயதில் இறைவனால் முறையான அருளியல் வாழ்க்கையை தொடங்கினார். திருவொற்றியூர் சென்று தியாகராஜப் பெருமானையும், வடிவுடை அம்மனையும் வழிபடத் தொடங்கினார். 1850ம் ஆண்டு 25 வயதில் தனது தமக்கை மகள் தனம்மாளை மணமுடித்தார். ஆனால் தாலி கட்டியதோடு சரி, இல்வாழ்க்கையில் ஈடுபடவில்லை.

அவரது மனமெல்லாம் இறைசிந்தனையிலேயே இருந்தது. 1858ம் ஆண்டு சென்னை வாழ்வை துறந்து தல யாத்திரையாக சிதம்பரம் அடைந்தார். தில்லை அம்பலத்தானை தரிசித்தபின் அங்கு வந்த கருங்குழி மணியக்காரர் வேங்கடரெட்டியார் அவரை கருங்குழிக்கு அழைத்துச் சென்றார். அவரது இல்லத்திலேயே தங்கினார் பெருமானார். அடிக்கடி சிதம்பரம் சென்று வழிபட்டு வந்தார். திருமுதுகுன்றம், திருவதிகை, திருவண்ணாமலை போன்ற
தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.

1865ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை இந்த இல்லத்தில் ஏற்படுத்தினார். கடவுள் ஒருவரே, அவரை உண்மை என்ற அன்பால் ஒளிவடிவில் (ஜோதி) வழிபட வேண்டுமென்பதும், சிறுதெய்வ வழிபாடு கூடாதென்பதும், அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாதென்பதும், புலால் உண்ணக்கூடாது என்றும் எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ண வேண்டுமென்றும் வலியுறுத்தினார். 1867ல் வடலூரில் தருமச்சாலையை தொடங்கினார். பின்னர் தனிமையை விரும்பி 1870ல் மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகம் என்ற வீட்டில் தங்கினார்.

30-.1.-1874ல் நள்ளிரவு 12 மணிஅளவில் சித்திவளாக திருமாளிகையில் அவர் ஜோதி வடிவானார். ஐந்து திருமுறைகளில் இறைவனைப்பற்றிப்பாடிய வள்ளலார் ஆறாம் திருமுறையில் உருவ வழிபாடு கூடாதென்றார். மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டுமென்று வலியுறுத்தினார். கருங்குழியில் தங்கியிருந்தபோதுதான் 5 திருமுறைகளையும் அவர் எழுதியதாக கூறுகிறார்கள்.   அங்குள்ள சித்தி விநாயகரை வழிபட்டார். அவர் மீது 36 பாடல்கள் பாடினார். சித்தி விநாயகர் பதிகம், பிரசாதமாலை, கணேசர் மாலை, கணேசத்திருமாலை, தனித் திருமாலை போன்றவையும் அதில் அடக்கம்.

வள்ளலார் அருளிய சித்தி விநாயகர் பதிகத்தில்

அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத்தான் அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான்
அஞ்சுமுக
வஞ்வரையான் காணா வகைவதைத்தான் ஓர் அரையோ
பஞ்சரையான் கண்கள் அவை
- என்று ஒரு பாடலிலும்,
அடுத்த பாடலில்,

வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதான்
நாதாகா வண்ண நலங்கொள்வான் போதார்
வனங்காத்து நீர் அளித்த வள்ளலே அன்பால்
இனங்காத் தருள்வாய் எனை
- என்று மற்றொரு பாடலிலும்
குறிப்பிடுகிறார். அவர் பாடிய கணேசத் திருஅருள்மாலை பாடலில்

(10வது பாடல்)
நாவி னால்உனை நாள்தோறும் பாடுவார்
நாடு வளர்தமை நண்ணிப்பு கழவும்
ஓவி லாதுனைப் பாடவும் துன்பெலாம்
ஓட வும்மகிழ் ஓங்கவும் செய்குவங்
காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக்
கடவு ளேநற்கருங்குழி என்னும் ஊர்
மேவி அன்பர்க்க ருள்கண நாதனே
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
- என்று பாடுகிறார்.

கணபதியை சச்சிதானந்த வடிவம் என்று வள்ளலார் கூறுகிறார். இங்குள்ள இரண்டடி உயர விநாயகரை வழிபட்டு வள்ளலார் பெருமான் பல பாடல்களை எழுதியுள்ளார். மேலும், அருகிலேயே பெருமானார் வடித்த இரண்டரை அடி உயர கல்வெட்டு கல் ஒன்றும் உள்ளது. இதில் அட்சரக் கோடுகள் (வடமொழி எழுத்துக்கள்) காணப்படுகின்றன. இவற்றுக்குப் பொருள் தெரியவில்லை. வள்ளலார் ஏழு வருடங்கள் இவ்வூரில் வாழ்ந்ததால் இவ்வூர் மக்கள் இன்றும் மாமிசம் சாப்பிடுவதில்லையாம். வள்ளலார் வழிபட்ட கோயில் என்பதால் இந்த ஊர் சிறப்புடன் விளங்குகிறது. வள்ளலார் திருமுறை எழுதுவதற்கு விநாயகரே வழிகாட்டினார் என ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர். தினமும் இரண்டு கால பூஜை (காலை 10 மணி, மாலை 6 மணி) நடைபெறும். மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தி அன்று சாத்துப்படி அலங்காரம் நடத்தப்பட்டு உற்சவர்  வீதியுலா நடைபெறும். இதில் ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனமுருக வழிபடுவார்கள். கர்ப்ப கிரகத்தின் மேல் 15 அடி உயர கோபுரம் உள்ளது. கோயிலின் முன்புறம் அர்த்த மண்டபத்தில் மூஷிக வாகனம் விநாயகரை வணங்கியபடி உள்ளது. அருகிலேயே பலிபீடம் உள்ளது. சுமார் 500 வருடங்கள் பழமையான இந்த விநாயகர் கோயில் சிறிதாக இருந்தபோது வள்ளலார் வழிபட்டு வந்துள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு ஊர் மக்களின் முயற்சியால் 4-.1.-1996 ஆண்டு முதலாவது மகாகும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் இரண்டாம் கும்பாபிஷேகம் 27.-8.-2010 அன்று நடந்தது. சென்னை - கும்பகோணம் சாலையில் வடலூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் நற்கருங்குழி உள்ளது. வடலூரில் இருந்து ஆட்டோ, பேருந்து வசதி உள்ளது. வடலூரில் தங்கும் வசதி உள்ளது.

தொகுப்பு: சி.பரமேஸ்வரன்

படங்கள்: கே.டி.சேகர்

Tags : Ganesha ,Vallalar ,
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி