×

பார்வை தந்த பரமன்

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கு வெளியே, கோயிலை ஒட்டிய கீழ வீதியில் பரவையுண் மண்டலி என்கிற துர்வாசர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் திருப்பெயர் தூவாயர், இறைவியின் திருப்பெயர் பஞ்சின் மெல்லடியாள். துர்வாசர் வழிபட்ட பெருமான் என்பதால் இத்தலத்து இறைவனை துர்வாச நாயனார் என்று அழைக்கின்றனர். இக்கோயில் பிராகாரத்தில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் விநாயகருக்கு அருகே துர்வாசரின் சிலை உள்ளது.

பரவை என்பது கடல். மண்தளி என்பது மண்கோயில். கடலை உட்கொண்ட மண்கோயில் என்ற அடிப்படையில் இக்கோயிலுக்குப் பரவையுண் மண்டலி என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம் வருண பகவான் சினம் கொண்டு திருவாரூரை அழிக்கும்படி கடலை ஏவினார். ஊரை அழிக்கக் கடல் பொங்கி எழுந்தபோது, அந்த நீரை இக்கோயிலில் உள்ள சிவபெருமான் அருந்தி (உண்டு) நீரை வற்றச் செய்தார். கடல் நீர் வற்றிப் போவதற்குக் காரணமாக அமைந்ததால், இக்கோயில் பரவையுண் மண்டலி என அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் மண்ணால் அமைக்கப்பட்டிருந்த இக்கோயில், பிற்காலத்தில் கல்லால் கட்டப்பட்டிருக்கிறது.

சுந்தரமூர்த்தி நாயனார்  திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது அவர் மேல் காதல் கொண்டு அவர் கேட்டுக் கொண்டபடி அவரை விட்டுப் பிரிவதில்லை என்று இறைவன் திருமுன்னர் உறுதி மொழி கூறி திருமணம் செய்து கொண்டார். ஆனால், சிலகாலம் சென்று தியாகேசர் மேல் கொண்ட பக்தியால், அவரை தரிசிக்க ஆவல் கொண்டு தாம் சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்திருந்த உறுதிமொழியை மீறி திருவாரூர் தலத்திற்கு பயணம் மேற்கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதுமே அவரது கண்கள் இரண்டும் ஒளி இழந்தன. பார்வை இழந்த சுந்தரர் மிகுந்த சிரமத்துடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டார்.

காஞ்சிபுரம் சென்றபோது அத்தலத்து இறைவனைப் பாடி ஒரு கண் பார்வை பெற்றார். பிற தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூரில் முதலில் பரவையுண் மண்டலிக்கு (துர்வாசர் கோயில்) வந்து அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு,

‘தூவாயா! தொண்டு செய்வார் படுதுக்கங்கள்
காவாயா! கண்டு கொண்டார் ஐவர் காக்கினும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லு வேற்கு
ஆவாஎன் பரவையுண் மண்டலி அம்மானே’

எனத் தொடங்கி பத்து பாடல்களை மனமுருகப் பாடினார். தூவாயர் அருளால் மற்றொரு கண் பார்வையும் சுந்தரருக்குக் கிட்டியது. ஒரே பிராகாரத்தை கொண்ட இத்திருக்கோயிலில் இறைவி பஞ்சின் மெல்லடியாளுக்கும், சனீஸ்வர பகவானுக்கும் தனித்தனிச் சந்நதிகள் அமைந்துள்ளன. இங்கு விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களும் அருட்பாலிக்கின்றனர். திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு அருகே இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

- கே. சுவர்ணா

Tags : Paraman ,
× RELATED விவசாயிகளின் பிரச்னைகளை சொல்லும் பரமன்