×

கலசப்பாக்கம் அருகே அருள்பாலிக்கிறார் தீராத பிணிகளை தீர்க்கும் திருக்காமீசுவரர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகிலுள்ள காமப்புல்லூர் என்னும் காப்பலூர் கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய 1600 ஆண்டுகள் பழமைவாய்ந்தது கடினகுஜாம்பாள் சமேத திருக்காமீசுவரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் தலவிருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும், தீர்த்தமாக தாமரை தீர்த்தம் உள்ளது.

ஒரு சதுரமான கருவறையும் அதன் முன்பாக அர்த்த மண்டபம், முன் மண்டபம் முதல் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன. கருவறையில் திருக்காமீசுவரர் கிழக்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இச்சன்னதியின் இருபுறங்களிலும் துவாரபாலகர் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர். முன்மண்டபத்தின் கிழக்குப் புற வாசல் அடைக்கப்பட்டுள்ளது. தென்பகுதி வழியாகச் செல்லவே வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கிழக்குக் கோபுரம் இரண்டு நிலைகளை கொண்டது.

கோயிலின் வடக்குப் புறம் அமைந்துள்ள அம்பிகையின் சன்னதி கருவறை மற்றும் சிறிய அளவிலான முன் மண்டபத்துடன் காணப்படுகிறது.  இரண்டாம் திருச்சுற்றில் சுமார் நூறு கல்தூண்களை கொண்ட வசந்த மண்டபம் காணப்படுகிறது. இரண்டாம் சுற்றின் வடக்கில் நடராஜர் மண்டபம் காணப்படுகிறது. நடராஜர் மண்டபத்திற்கு எதிரே கிணறு அமையப் பெற்றுள்ளது.  வாயிலுக்கு நேராக உள்ள மண்டபம் திருமண மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் ஒரு யாக சாலையும், அதற்கு மேற்கில் ஒரு பழைய மடப்பள்ளியும் மேற்கு, தென் மேற்கில் ஒரு பெரிய மண்டபமும் உள்ளன.

மேலும் கோயிலை சுற்றி தட்சிணாமூர்த்தி, ராசி மண்டலம், நவகிரகங்கள், சண்டிகேசுவரர்,  விநாயகர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் தினசரி 2 வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருவிழாக்கள் சிவனுக்குரிய எல்லா திருவிழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. திருக்காமீசுவரரை வணங்கினால் தீராத பிரச்னைகளும்-பிணிகளும் தீரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றுகிறார்கள். மேலும் கல்வி, ஞானம், செல்வம் தருபவராக திருக்காமீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

Tags : Thirukkamissavaru ,Kalappakkam ,
× RELATED கலசப்பாக்கம் அருகே வேர்ப்புழு...