×

பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணி ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள், வியாபாரிகள் மறியல்-போக்குவரத்து பாதிப்பு

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள், வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பள்ளிகொண்டாவிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இருபக்கமும் கால்வாய் கட்டும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும், கால்வாய் கட்ட ஆங்காங்கே பள்ளம் தோண்டி விடப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் கடைகளின் வாசலிலே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. முதலில் இந்த கால்வாய் கட்டும் பணிக்காக பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையின் இடதுபுறமாக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, 50 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், கால்வாய் கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் நேற்று காலை 9 மணிக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையின் வலது புறத்தில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத வியாபாரிகள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து பணியினை தடுத்து நிறுத்தினர். மேலும், ஏற்கனவே இந்த சாலை 2 மாத காலமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி திண்டாடி வரும் நிலையில் இந்த பக்கமும் பணி ஆரம்பித்தால் நிலைமை படு மோசமாகிவிடும் என கூறி திடீரென அந்த வழியாக வந்த வாகனங்களை பிளக்ஸ்போடு, கற்கள் என சாலை நடுவே வைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் இருபுறமும் 5 கி.மீ.தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உயரதிகாரிகள் வரும் வரையில் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து அங்குவந்த பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மறியலில் ஈடுபட்ட  வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சாலையின் ஒருபக்கம் முழு பணி முடிந்தவுடன் மறுபக்கம் தொடங்க கான்டிராக்டரிடம் வலியிறுத்தி இருப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தார். பின்னர், போக்குவரத்து நெரிசலில் பள்ளி வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியுள்ளதை மேற்கோள் காட்டி மறியலை கைவிடும்படி கூறினார். இதனைதொடர்ந்து மறியலை கைவிட்ட வியாபாரிகள் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான போலீசாரை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த போக்குவரத்து நெரிசலால் ஏதேனும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சாலை மறியலால் குடியாத்தம் பள்ளிகொண்டா சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், காலை, மாலை பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் சாலையின் குறுக்கே ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி பணி செய்வதால் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த பணியினை இரவு 10 மணிக்கு மேல் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வெகுவாக வலுத்துள்ளது….

The post பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணி ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள், வியாபாரிகள் மறியல்-போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Palligonda- Citizenship Road ,JCB ,PALLICONDA ,Palligonda ,Salligonta-Citizen ,Road ,JCP ,Dinakaran ,
× RELATED கோவையில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசுப்பேருந்து