×

மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்ததால் வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்: காரை மடக்கி பிடித்து மீட்பு: 4 பேர் கைது 11 பேருக்கு வலை

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டு தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (34). இவர், மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் அருகில் மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணை காதலித்தார். விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தி விட்டார். ஆனாலும் அந்த பெண்ணை பின்தொடர்ந்ததோடு காதலிப்பதாக கூறி பெண் வீட்டுக்கு சென்று விக்னேஸ்வரன் தகராறில் ஈடுபட்டார்.இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் பெண் வீட்டார் புகார் செய்தனர். இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என்று விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கி கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் கடந்த மாதம் 12ம் தேதி பெண்ணை கடத்த விக்னேஸ்வரன் முயற்சித்தார். அப்போது அவரிடமிருந்து தப்பித்து சென்ற இளம்பெண், மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். வீடு புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிந்து விக்னேஸ்வரனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பெண் வீட்டுக்கு கார், இருசக்கர வாகனங்களில் தனது ஆதரவாளர்கள் 15 பேருடன் விக்னேஸ்வரன் சென்றார். வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தூக்கினார். அங்கிருந்தவர்கள் தடுத்த போதும், அந்த கும்பல் கண்டுகொள்ளவில்லை. வர மறுத்து கதறி அழுத அந்த பெண்ணை தூக்கி காரில் கடத்தி சென்றனர். தகவலறிந்தது மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். அப்போது விக்னேஸ்வரன் வந்த கார் நம்பர் பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாரித்த போது, அந்த கார்  கொள்ளிடம் செக்போஸ்ட்டை கடந்து விழுப்புரம் நோக்கி செல்வது தெரியவந்தது. உடனே விழுப்புரம் எஸ்பியை தொடர்பு கொண்டு தகவலை தெரியப்படுத்தி விக்கிரவாண்டி செக்போஸ்ட்டில் அலார்ட் செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு விக்கிரவாண்டி செக்போஸ்ட் அருகே பெண்ணை கடத்தி சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பெண்ணை பாதுகாப்பாக மீட்டு விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகளான மயிலாடுதுறை சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரம் செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து மயிலாடுதுறை போலீசார், விக்கிரவாண்டி சென்று 3 பேரையும் அழைத்து வந்தனர். காரை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மயிலாடுதுறை செந்தில் என்பவரை மயிலாடுதுறையில் கைது செய்தனர். மேலும் 11 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

The post மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்ததால் வீடு புகுந்து இளம்பெண் கடத்தல்: காரை மடக்கி பிடித்து மீட்பு: 4 பேர் கைது 11 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Vigneswaran ,Aduthurai Kanjamettu Street, Tanjore district ,Mayiladuthurai Collector ,Mylamman ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...