×

பிரேசிலில் தலைகள் ஒட்டிப்பிறந்த 3 வயது சிறுவர்கள் பிரிப்பு: சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததும் மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர்….

ரியோ: பிரேசிலில் தலைகள் ஒட்டிப்பிறந்த 3 வயதான சிறுவர்களை பலமணி நேரம் சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சைகள் மூலமாக வெற்றிகரமாக பிரித்து மருத்துவர்கள் சாதனைப் படைத்திருக்கிறார்கள். பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த ஆச்சரியமூட்டும் அறுவை சிகிச்சை நவீன மருத்துவத்தின் மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகிறது. வடக்கு பிரேசிலில் ஒரு கிராமத்தில் தலைகள் ஒட்டி பிறந்த இரு சிறுவர்களை பிரிக்கும் முயற்சியில் ஹெலோ நிமியிர் மூளை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இங்கிலாந்து ஜெமினி என்ற மூளை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர்கள் களம் இறங்கினர். ஆர்த்தர்,  ஃபெர்னாண்டோ லிமா என்ற 2 சிறுவர்களையும் பிரிப்பதற்கான கடைசி இரண்டு அறுவை சிகிச்சைக்கு மட்டும் 33 மணி நேரம் பிடித்தது. அறுவை சிகிச்சை முடிந்ததும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்த இரண்டு சிறுவர்களின் மூளைகளின் ஒரு பகுதி இருவருக்கும் பொதுவாக இருந்தது. இதயங்களுக்கு செல்லும் ஒரு முக்கிய நரம்பும் இருவருக்கும் பொதுவான பாதையில் இருந்தது. இதனால் பல மாதங்கள் ஆய்வு செய்த மருத்துவர்கள் மெய்நிகர் எனப்படும் விர்ச்சுவல் முறையில் பல அறுவை சிகிச்சைகளுக்கு முன்னோட்டம் நடத்தினர். நீண்ட முயற்சிகளுக்கு பிறகு தலைகள் பிரிக்கப்பட்ட சிறுவர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தனர். அடுத்த ஆறு மாதங்கள் இவர்கள் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறுவர். 60,000 பிறப்புகளில் ஒரு பிரசவத்தில் இது போன்ற குழந்தைகள் உடல் ஒட்டி பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். …

The post பிரேசிலில் தலைகள் ஒட்டிப்பிறந்த 3 வயது சிறுவர்கள் பிரிப்பு: சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததும் மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர்…. appeared first on Dinakaran.

Tags : Brazil ,Rio ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...