×

செம்பியம் காவல் சரகத்தில் செயல்படாத 600 சிசிடிவி கேமராக்கள்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பெரம்பூர்: சென்னையில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் முக்கிய சாலைகள், சந்திப்புகள், மார்க்கெட்கள், பஸ் நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் போலீசார் சிசிடிவி கேமரா அமைத்துள்ளனர். இதன்மூலம் குற்றச் சம்பவங்கள் குறைந்து காணப்பட்டது. ஆனால், அவ்வாறு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்தன. மேலும், வாகனங்கள் மோதி உடைந்துள்ளன. இதனால், மேற்கண்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட செம்பியம் சரகத்தில் உள்ள செம்பியம் காவல் நிலையத்தில் மட்டும் 2019ம் ஆண்டு போலீசார் சார்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்காக கேமரா தங்கிகள் எனப்படும் போல்கள் 100 அமைக்கப்பட்டன. துருப்பிடிக்காத கேமரா தாங்கிகள் இதற்காக போடப்பட்டன. மேலும், 400 கேமராக்களும் சென்னையில் முதல் முறையாக வயர் இல்லாமல் டவுட்டர் மூலம் வைபை வசதியுடன் இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. செம்பியம் காவல் நிலையத்தில் இதற்காக பிரத்யோகமாக 92 இன்ச் அளவுடைய 3 பெரிய டிவிக்களுடன் கண்காணிப்பு அறை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக 100 டவுட்டர்கள் உதவியுடன் வைபை வசதியுடன் கேமராக்கள் எந்த நேரமும் செயல்படும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன்  அமைக்கப்பட்டிருந்தன.மேலும் செம்பியம் சரகத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் உதவியுடன் தனியாக அவர்களது பகுதியில் 250 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் செம்பியம் காவல் நிலைய பகுதியில் மட்டும் 650க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதில், 100 கேமராக்கள் கூட தற்போது செயல்பாட்டில் இல்லை. இதேபோல், திரு.வி.க நகர் காவல் நிலைம் சார்பிலும் 352 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. தற்போது இதில் 200 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே வேலை செய்கின்றன. மீதமுள்ள 150க்கும் மேற்பட்ட கேமராக்கள் வேலை செய்வதில்லை என கூறப்படுகிறது. இதேபோல், ஒவ்வொரு காவல் நிலைய பகுதிகளிலும் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன.பல இடங்களில் குற்ற சம்பவம் நடந்த பிறகு போலீசார் குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் போதுதான், அந்த சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பது தெரியவருகிறது. சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு காவலர்களை உயர் அதிகாரிகள் நியமித்தனர். சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கிறதா, அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என்பதை இவர்கள் கண்காணித்து, பழுது ஏற்பட்டு இருந்தால் அதனை சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்து சரி செய்வது இவரது வேலை.ஆனால் தற்போது எந்த காவல் நிலையத்திலும் குறிப்பிட்ட அந்த நபர்கள் சிசிடிவி கேமராக்களை பற்றி தெரிந்து கொள்வதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மீண்டும் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த சிசிடிவி கேமராக்களை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்….

The post செம்பியம் காவல் சரகத்தில் செயல்படாத 600 சிசிடிவி கேமராக்கள்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sembium police station ,Perambur ,Chennai ,
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது